நியூசிலாந்து அணிக்கு எதிரான டி20ஐ தொடருக்குப் பிறகு இந்திய கிரிக்கெட் அணியின் ஹெட் கோச் கௌதம் கம்பீர் தலைமையிலான அணி மேலாண்மையின் வீரர் தேர்வு முடிவுகளை இந்திய முன்னாள் கேப்டன் கடுமையாக விமர்சித்து கருத்து தெரிவித்துள்ளார்.
இந்திய அணியில் இளம் வீரர்களுக்கான வாய்ப்புகள் சரியாக வழங்கப்படாமல் தொடர்ந்து மாற்றங்கள் செய்யப்பட்டு வருவது வீரர்களிடையே பாதுகாப்பற்ற சூழலை உருவாக்கும் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதுகுறித்து இந்திய முன்னாள் கேப்டன் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் பேசும்போது, “வைபவ் சூர்யவன்ஷிக்கு கடைசி இரண்டு போட்டிகளில் ஏன் வாய்ப்பு கொடுக்கப்படவில்லை என்று எனக்குப் புரியவில்லை. அவர் சிறந்த ஃபார்மில் இருக்கிறார், முந்தைய போட்டியிலேயே நியூசிலாந்து மண்ணில் தனது திறமையை நிரூபித்துவிட்டார். நீங்கள் இந்த பாயை வளர்க்க வேண்டும், அதை விட்டுவிட்டு ஒரு மேட்ச் ஆடவைத்துவிட்டு அடுத்த மேட்ச்சில் டிராப் செய்கிறீர்கள். சஞ்சு சாம்சன் அல்லது சூர்யவன்ஷி என இருவருக்குமே இது பாதுகாப்பற்ற சூழலை உருவாக்குகிறது. மேனேஜ்மென்ட் செய்வது முட்டாள்தனம்” என்று கூறி இருக்கிறார்.
மேலும் அவர் பேசும்போது, “கடந்த 13 போட்டிகளில் வெளிநாடுகளில் சஞ்சு சாம்சன் வெறும் 160 ரன்கள் மட்டுமே எடுத்து ஒரே ஒரு பிப்டி அடித்துள்ளார். அயர்லாந்து, இங்கிலாந்தைத் தொடர்ந்து இப்போது நியூசிலாந்திலும் அவர் திணறியுள்ளார். நான் சஞ்சு சாம்சனை டிராப் செய்ய வேண்டும் என்று சொல்லவில்லை, அவருக்கு ஒரு பிரேக் கொடுங்கள் அல்லது மூன்று ஓப்பனர்களுக்கும் சமமாக ரொட்டேஷன் கொடுங்கள். ஆனால் சூர்யவன்ஷியை இப்படி தொடர்ந்து டிராப் செய்யக்கூடாது” என்றும் கூறி இருக்கிறார்.
குறிப்பாக அயர்லாந்து, ஆப்கானிஸ்தான் மற்றும் வெஸ்ட் இண்டீஸ் போன்ற அணிகளுக்கு எதிரான தொடர்களில் இளம் வீரர்களுக்கு வாய்ப்பளிக்காமல் அனுபவ வீரர்களே தொடர்ந்து விளையாடியது குறித்து அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.