இந்திய கிரிக்கெட்டில் நிறைய சீனியர் வீரர்கள் விடைபெறும் காலகட்டத்தை நோக்கி வந்து கொண்டிருக்கிறார்கள். இதன் காரணத்தால் புது இந்திய அணியை உருவாக்க வேண்டிய தேவை இருக்கிறது. பேட்டிங் யூனிட்டுக்கு வீரர்கள் இருந்தாலும் பவுலிங் யூனிட்டுக்கு வீரர்களைக் கண்டறிய வேண்டியது இருக்கிறது. தற்போது இது குறித்து இந்திய முன்னாள் பந்துவீச்சு பயிற்சியாளர் பராஸ் மஹாம்பிரே முக்கிய விஷயம் ஒன்றைப் பேசியிருக்கிறார்.
தற்போதைய இந்திய கிரிக்கெட்டில் மூன்று வடிவிலான இந்திய அணிகளுக்கும் சரியான பவுலிங் யூனிட் இருக்கவே செய்கிறது. ஆனால் அதில் மிக முக்கியமான பந்துவீச்சாளர்களான முகமது சமி, ரவிச்சந்திரன் அஸ்வின், மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோருக்கான மாற்றை தேட வேண்டிய கட்டாயம் உருவாகி இருக்கிறது.
குறிப்பாக முகமது சமி மற்றும் ரவிச்சந்திரன் அஸ்வின் இருவருக்குமே இப்போது இருந்தே மாற்று வீரர்களை தேட வேண்டிய அவசியம் உருவாகிறது. ஏனென்றால் இவர்கள் இருவருமே தனித்துவமான பந்துவீச்சாளர்கள். மேலும் டெஸ்ட் கிரிக்கெட் விளையாடக் கூடியவர்கள். இவர்களது இடத்தை நிரப்ப வேண்டும் என்றால் இப்போது இருந்து ஆரம்பித்தால்தான் அடுத்த நான்கு வருடத்திற்குள் கண்டறிய முடியும்.
எனவே இதில் இருக்கும் முக்கியத்துவம் எப்படியானது என்றும், இரண்டு வீரர்களுக்கும் எப்படி மாற்று வீரர்களை பொறுமையாக உருவாக்க வேண்டும்? என்றும், ஏற்கனவே என்ன மாதிரியான முறையில் இளம் பந்துவீச்சாளர்கள் உருவாக்கப்பட்டார்கள் என்றும் முன்னாள் பந்துவீச்சு பயிற்சியாளர் கூறியிருக்கிறார்.
இதுகுறித்து பராஸ் மஹாம்பரே கூறும் பொழுது ” முகமது சமி மற்றும் ரவிச்சந்திரன் அஸ்வின் உடன் அவர்களது எதிர்காலம் குறித்து பேசி, அவர்கள் என்ன மாதிரி முடிவு எடுக்கிறார்கள் என்பதை வைத்து நாம் எதிர்காலத்திற்கான திட்டங்களை தீட்ட வேண்டும். நாங்கள் இளம் பந்துவீச்சாளர்களை உருவாக்க திட்டமிட்ட பொழுது, அவர்களை நாங்கள் தனியாக இருக்க விடவில்லை. அர்ஸ்தீப் சிங் அல்லது ஆவேஸ் கான் யாராக இருந்தாலும் அவர்களால் இந்திய அணிக்குள் வந்த பொழுது மூத்த பந்துவீச்சாளர்களும் அவர்களுடன் இருந்தார்கள். நாங்கள் அதை உறுதி செய்தோம்.
இதையும் படிங்க : 11 ஓவர்.. தடுமாறும் நடராஜன் சாய் கிஷோர்.. பட்டைய கிளப்பிய அஸ்வினின் திண்டுக்கல்.. திருப்பூரை வீழ்த்தி வெற்றி
இதற்கென்று நாம் ஒரு டைம் லைன் வைத்துக் கொள்ள முடியாது. கொஞ்சம் என்ன வேலைகள் செய்ய வேண்டும். 2015 ஆம் ஆண்டு நாங்கள் இளம் பந்துவீச்சாளர்களுக்காக வேலையை ஆரம்பித்து 2020ஆம் ஆண்டு எங்களுக்கு தேவையான பந்து வீச்சாளர்கள் கையில் இருந்தார்கள். அர்ஸ்தீப் சிங் 2018 ஆம் ஆண்டு அண்டர் 19 உலகக் கோப்பையில் விளையாடி, 2022ஆம் ஆண்டுதான் இந்திய அணிக்கு வந்தார். தற்போது 2024ல் அவர் இந்திய அணியின் ஒரு அங்கமாக மாறி இருக்கிறார். ஒரு இளம் வேகப் பந்துவீச்சாளர் உச்சத்தை ஏற்றுவதற்கு நான்கு முதல் ஐந்து ஆண்டுகள் ஆகும்” என்று கூறியிருக்கிறார்.