கிரிக்கெட் உலகில் இந்திய வீரர்களை தாண்டி குறிப்பிட்ட வெளிநாட்டு வீரர்களுக்கு இந்தியாவில் அதிக அளவு ரசிகர்கள் இருப்பார்கள். அதில் குறிப்பிட்டு சொல்ல வேண்டுமென்றால் ஆஸ்திரேலியாவை சேர்ந்த முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் ப்ரட் லீ. அவரது பவுலிங் ஸ்டைல் இங்குள்ள பல இந்திய சிறுவர்களின் ஸ்டைல் ஐகானாக இருக்கிறது. மேலும் அவர் ஐபிஎல் தொடரிலும் குறிப்பிட்ட சில ஆண்டுகள் விளையாடி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த சூழ்நிலையில் அவர் இந்தியாவில் கிரிக்கெட் விளையாடுவது குறித்த சுவாரசியமான தகவல்களை பகிர்ந்திருக்கிறார். இங்குள்ள கிரிக்கெட் தரத்தை புரிந்து கொண்டிருக்கும் பிரட்லீ, இந்தியாவில் கிரிக்கெட் விளையாடினால் நீங்கள் எப்போதுமே ஒரு ராஜா போன்று நடத்தப்படுவீர்கள் என்று சில முக்கிய விஷயங்களை பகிர்ந்திருக்கிறார்.
இதுகுறித்து அவர் கூறும் போது “எனக்கு இந்தியா மிகவும் பிடிக்கும் இந்தியா மீது எனக்கு மிகுந்த ஆர்வமும் பாசமும் இருக்கிறது. இங்கு இருக்கிற மக்கள் தான் இந்தியாவை மிகவும் சிறப்பாக உருவாக்குகிறார்கள். இப்போது வந்தாலும் எனக்கு சிறப்பான வரவேற்பினை அவர்கள் கொடுக்கிறார்கள். நீங்கள் கிரிக்கெட் விளையாடுபவர் ஆக இருந்தால் இந்திய மக்கள் உங்களை ஒரு ராஜாவைப் போல நடத்துவார்கள்” என்று உணர்ச்சிகரமாக பேசியிருக்கிறார்.