நீங்கள் செய்யாத வேலைக்கு ஏன் சம்பளம் கேட்குறீர்கள் – இந்த 2 ஆஸ்திரேலிய வீரர்கள் மீது மேத்யூ ஹைடன் கோபம்

0
807
Matthew Hayden

ஆஸ்திரேலிய அணி தற்போது இலங்கை அணிக்கு எதிரான டி20 தொடரில் விளையாடி முடித்துள்ளது. ஐந்து போட்டிகள் கொண்ட இந்தத் தொடரை ஆஸ்திரேலிய அணி 4-1 என கைப்பற்றியது. இதன் பின்பு ஆஸ்திரேலியா ஆசிய கண்டத்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது. பாகிஸ்தான், இலங்கை மற்றும் இந்தியா என வரிசையாக அந்நாடு டெஸ்ட் தொடரில் ஆட உள்ளது. முதலாக பாகிஸ்தான் அணிக்கு எதிராக வரும் மார்ச் 3ம் தேதி முதல் டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது

இந்தத் தொடருக்காக கம்மின்ஸ் தலைமையில் வலுவான அணியை ஆஸ்திரேலியா பாகிஸ்தானுக்கு அனுப்பி வைத்துள்ளது. கம்மின்ஸ் உடன் வார்னர், லபுஷேன், ஸ்மித், ஹேசல்வுட் போன்ற பல முன்னணி வீரர்கள் இத்தொடரில் பங்கேற்க உள்ளனர். மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடராக இது நடக்க உள்ளது. இந்த டெஸ்ட் தொடர் நடந்து முடிந்ததும் அடுத்ததாக மூன்று ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடர் மற்றும் ஒரு டி20 போட்டி நடைபெற உள்ளது. மொத்தமாக பாகிஸ்தான் தொடர் ஆஸ்திரேலிய அணிக்கு ஏப்ரல் ஐந்தாம் தேதி வரை நீடிக்கிறது.

டெஸ்ட் அணியில் இடம்பெற்ற சில சீனியர் வீரர்களான வார்னர், கம்மின்ஸ், ஹேசல்வுட் ஆகியோர் ஒரு நாள் தொடர் மற்றும் டி20 போட்டியில் பங்கேற்பதிலிருந்து விலகியுள்ளனர். இதற்கு காரணம் இவர்கள் ஐபிஎல் தொடரில் பங்கேற்க இருப்பது தான் என்று பலரும் கூறி வந்தனர். தற்போது முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் ஒருவரே தன் நாட்டு வீரர்களை இந்த செயலுக்காக விமர்சித்துள்ளார்.

ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் துவக்க வீரர் மேத்யூ ஹைடன் இது பற்றி பேசுகையில், ஆஸ்திரேலிய அணிக்கு நீங்கள் இது போன்று விளையாடாமல் இருப்பது ஆபத்தானது என்று பேசியுள்ளார். மேலும் எப்போது அணிக்கு ஆட வேண்டும் என நீங்கள் முடிவெடுக்காமல் எப்போதும் ஆஸ்திரேலியாவுக்கு ஆட தயாராக இருத்தல் வேண்டும் என்று கூறியுள்ளார். மேலும் இது போன்ற தொடர்களை வீரர்கள் காரணமின்றி புறக்கணித்தால் வீரர்களின் சம்பளத்தை குறைக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். வேலை செய்யாமல் சம்பளம் வாங்குவது எந்த விதத்திலும் தனக்கு சரியாக படவில்லை என்று பேசியுள்ளார் ஹைடன்.

ஹைடன் கூறியதைக் கேட்டு ஆஸ்திரேலிய வீரர்கள் பாகிஸ்தான் தொடருக்கு திரும்புவார்களா அல்லது ஐபிஎல் ஆட வருவார்களா என்பதை அறிய ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.