சச்சின் டெண்டுல்கரின் சாதனையை ஜோ ரூட் நிச்சயம் முறியடிப்பார் – முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் மார்க் டெய்லர்

0
100
Sachin Tendulkar and Joe Root

இங்கிலாந்திற்கு மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட சுற்றுப்பயணம் செய்திருக்கிறது நியூசிலாந்து அணி. இதன் முதல் ஆட்டம் கடந்த இரண்டாம் தேதி லண்டன் லார்ட்ஸ்ட் மைதானத்தில் துவங்கியது.

டாஸில் வென்ற நியூசிலாந்து முதல் இன்னிங்சில் 132 ரன்களிலும், இங்கிலாந்து 141 ரன்களிலும் சுருண்டன. இரண்டாவது இன்னிங்ஸில் டேரில் மிட்செல் சதம் மற்றும் டாம் ப்ளூன்டாலின் 96 ரன்களின் பங்களிப்போடு நியூசிலாந்து இங்கிலாந்திற்கு 277 ரன்களை இலக்காக நிர்ணயித்தது.

- Advertisement -

இங்கிலாந்து இரண்டாவது இன்னிங்ஸில் முதல் நான்கு விக்கெட்டுகளை சீக்கிரத்தில் இழந்தது. அடுத்து புதிய கேப்டன் பென் ஸ்டோக்சும் முன்னாள் கேப்டன் ஜோ ரூட்டும் இணைந்து 90 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தார்கள். பென் ஸ்டோக்ஸ் 54 ரன்களில் வெளியேறினார். அடுத்து வந்த பென் போக்சுடன் இணைந்து ஜோ ரூட் பிரமாதப்படுத்தி 120 ரன்கள் பார்ட்னர் அமைத்து அணியை வெற்றிபெற வைத்ததோடு, சதத்தோடு டெஸ்டில் பத்தாயிரம் ரன்களையும் எட்டினார்.

நேற்றைய போட்டியில் ஜோ ரூட் அடித்த சதம் அவரது 26வது டெஸ்ட் சதமாகும். மேலும் 218 இன்னிங்சில் பத்தாயிரம் ரன்களை டெஸ்ட் கிரிக்கெட் அரங்கில் 14வது வீரராக எட்டியதோடு, 31 ஆண்டு 157 நாட்கள் என்று குறைந்த வயதில் பத்தாயிரம் ரன்களை அடித்த வீரர் என்ற சாதனையையும் படைத்திருக்கிறார். முன்பு இந்தச் சாதனையை இதே ஆண்டு, நாட்களோடு இங்கிலாந்தின் அலைஸ்டர் குக் செய்திருந்தார். இவர்களுக்கு முன்பு இந்தச் சாதனைக்கு சொந்தக்காரராக இருந்தவர் மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கல். இவர் 31 வயது 326 நாட்களில் செய்திருந்தார்.

ஜனவரி 2021-ல் இருந்து இதுவரை 9 சதங்களை ஜோ ரூட் அடித்திருக்கிறார். மேலும் டெஸ்ட் கிரிக்கெட்டில் 15,921 ரன்களை அடித்திருக்கும் சச்சினின் சாதனையைத் தகர்க்க ஜோ ரூட்டிற்கு மேலும் 5,906 ரன்கள் தேவைப்படுகிறது. ஜோ ரூட்டின் தற்போதைய வயது 31 என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இதுகுறித்துப் பேசியுள்ள ஆஸ்திரேலியாவின் முன்னாள் கேப்டன் மார்க் டெய்லர் “ஜோ ரூட்டிற்கு குறைந்தது ஐந்து வருடங்கள் உள்ளன. இதனால் அவர் சச்சினின் சாதனையை எட்டுவது அவ்வளவு கடினமானதில்லை என்றே நினைக்கிறேன்” என்று கூறியிருக்கிறார்.