92 வருட இந்திய டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் முதல் முறை.. இங்கிலாந்து சரித்திர வெற்றி

0
422
England

இன்று உலக கிரிக்கெட்டில் இன்று இரண்டு ஆச்சரியமான டெஸ்ட் கிரிக்கெட் வெற்றிகள் பெறப்பட்டு இருக்கின்றன. ஆஸ்திரேலியாவை அவர்களது நாட்டில் வெஸ்ட் இண்டீஸ் வீழ்த்தி இருக்க, இந்தியாவை அதன் சொந்த மண்ணில் இங்கிலாந்து வீழ்த்தி இருக்கிறது.

இங்கிலாந்து சமீப ஆண்டுகளில் டெஸ்ட் கிரிக்கெட்டை அதிரடியான முறையில் ஆடி வருகின்ற காரணத்தினால், சுழற் பந்துவீச்சுக்கு சாதகமான இந்திய சூழ்நிலையில் அவர்களால் இந்திய அணியை தோற்கடிக்க முடியாது என்று பலரும் கூறி வந்தார்கள். இன்று அது தவறு என்று இங்கிலாந்து அணி நிரூபித்திருக்கிறது.

- Advertisement -

இந்த போட்டியில் முதலில் டாசில் வெற்றி பெற்று பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 246 ரன்கள் எடுத்தது. இரண்டாவது பேட்டிங் செய்த இந்திய அணி 436 ரன்கள் எடுத்து 190 ரன்கள் முன்னிலை பெற்றது.

நெருக்கடியான நிலையில் இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்த இங்கிலாந்து அணிக்கு போப் 196 ரன்கள் குவித்து, இங்கிலாந்து அணி 420 ரன்கள் எடுப்பதற்கு பெரிய உதவியாக இருந்தார். இங்கிலாந்து அணி இந்தியாவுக்கு 231 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது.

இன்று இந்த இலக்கை நோக்கி விளையாடிய இந்திய அணிக்கு கேப்டன் ரோஹித் சர்மா 39 ரன்கள் எடுக்க, கே.எஸ். பரத் 28, ரவிச்சந்திரன் அஸ்வின் 28, கேஎல்.ராகுல் 22 அக்சர் படேல் 17, ஜெய்ஸ்வால் 15 என சொற்ப பங்களிப்பே தந்தார்கள்.

- Advertisement -

இந்த போட்டியிலும் கில் 0, ஸ்ரேயாஸ் அய்யர் 13 என மீண்டும் ஏமாற்றம் அடைய வைத்தார்கள். ஒரு விக்கெட் கைவசம் இருக்க 54 ரன்கள் வெற்றிக்கு தேவைப்பட்ட நிலையில், கடைசி நேரத்தில் பும்ரா மற்றும் சிராஜ் இருவரும் சேர்ந்து 25 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து ஆட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தினார்கள். ஆனாலும் கடைசி விக்கெட்டாக சிராஜ் 12 ரன்கள் எடுத்து வெளியேற, இந்திய அணி 202 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இங்கிலாந்து அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இங்கிலாந்து அணியின் தரப்பில் அறிமுக சுழற் பந்துவீச்சாளர் டாம் ஹார்ட்லி 26 ஓவர்களில் 62 ரன்கள் தந்து ஏழு விக்கெட்டுகள் வீழ்த்தினார். ஹைதராபாத் ராஜீவ் காந்தி மைதானத்தில் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இந்திய அணிக்கு இது முதல் தோல்வியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்திய அணி தனது முதல் சர்வதேச டெஸ்ட் போட்டியை இங்கிலாந்து அணிக்கு எதிராக 1932 ஆம் வருடம் விளையாடியது. அப்போது இருந்து நூறு ரண்களுக்கு மேல் லீடிங் பெற்று, எந்த டெஸ்ட் போட்டியிலும் தோற்றதில்லை என்கின்ற சாதனையை வைத்திருந்தது. தற்பொழுது முதன்முறையாக இங்கிலாந்து அணியால் அந்த சாதனை உடைக்கப்பட்டு இருக்கிறது!