பாகிஸ்தானை துவைத்து ஒயிட்-வாஷ் செய்த இங்கிலாந்து அணி; 3வது டெஸ்டிலும் படுதோல்வி!

0
113

மூன்றாவது டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி 3-0 என தொடரை கைப்பற்றியுள்ளது இங்கிலாந்து அணி.

பாகிஸ்தான்-இங்கிலாந்து அணிகள் விளையாடிய மூன்றாவது டெஸ்ட் போட்டி கராச்சி மைதானத்தில் நடைபெற்றது. முதல் இரண்டு போட்டிகளின் முடிவில் இரண்டையும் வெற்றி பெற்று இங்கிலாந்து அணி 2-0 என்ற கணக்கில் ஏற்கனவே தொடரை கைப்பற்றிவிட்டது.

அடுத்ததாக நடந்த மூன்றாவது போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி தனது முதல் இன்னிங்சில் 304 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதைத்தொடர்ந்து முதல் இன்னிங்சில் ஆடிய இங்கிலாந்து அணி 354 ரன்கள் எடுத்தது.

50 ரன்கள் பின்தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்சில் விளையாடிய பாகிஸ்தான் அணி 216 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இதன் மூலம் 167 ரன்கள் இங்கிலாந்து அணிக்கு இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

இங்கிலாந்து அணியின் துவக்க வீரர்கள் ஜாக் கிராலி மற்றும் பென் டக்கட் இருவரும் சிறப்பான பார்ட்னர்ஷிப் அமைத்தனர். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 87 ரன்கள் சேர்த்தது.

கிராலி 41 ரன்கள் ஆட்டம் இழந்தார். இவருக்கு பக்கபலமாக இருந்த பென் டக்கட் 82 ரன்கள் அடித்தார். பென் ஸ்டோக்ஸ் 35 ரன்கள் அடித்திருந்தார். இருவரும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.

அதிரடியாக விளையாடிய இங்கிலாந்து அணி 29 வது ஓவரிலேயே இரண்டு விக்கெட்டுகள் மட்டும் இழந்து 170 ரன்கள் அடித்து இலக்கை எட்டியது. இறுதியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் மூன்றாவது டெஸ்ட் போட்டியையும் வென்றது.

பாகிஸ்தான் அணிக்கு எதிராக 3-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றிய இங்கிலாந்து அணி, தற்போது புதிய வரலாற்றுச் சாதனையையும் படைத்திருக்கிறது. பாகிஸ்தானை அதன் சொந்த மண்ணில் எந்த ஒரு அணியும் டெஸ்ட் போட்டிகளில் ஒயிட்-வாஷ் செய்தது இல்லை. இந்த சாதனையை முதல்முறையாக இங்கிலாந்து அணி படைத்திருக்கிறது.