” நம் ராக் மீண்டும் வந்துவிட்டார் ” – காயம் அடைந்து திரும்பி வந்த ஜஸ்பிரித் பும்ராவை உற்சாகமாக வரவேற்ற விராட் கோலி

0
1354
Virat Kohli encouraging Bumrah as Rock

இந்திய மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியின் மூன்றாவது நாள் இன்று முடிந்துள்ளது. இன்றைய நாள் முடிவில் இந்திய அணி அதனுடைய 2வது இன்னிங்சில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 16 ரன்கள் எடுத்து தென்னாப்பிரிக்க அணியை விட 146 ரன்கள் முன்னிலையில் உள்ளது.

போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 10 விக்கெட் இழப்பிற்கு 327 ரன்கள் குவித்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக கேஎல் ராகுல் 123 ரன்கள் குவித்தார். தென்னாபிரிக்க அணியில் லுங்கி இங்கிடி அதிகபட்சமாக 6 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். பின்னர் விளையாடிய தென்ஆப்பிரிக்கா அணி அதனுடைய முதல் இன்னிங்சில் 10 விக்கெட் இழப்பிற்கு 197 ரன்கள் மட்டுமே குவித்தது. அந்த அணியில் அதிகபட்சமாக பவுமா 52 ரன்கள் குவித்தார். இந்திய அணியில் முகமது ஷமி அதிகபட்சமாக 5 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.

ஜஸ்பிரித் பும்ராவை ராக் என்று அழைத்த விராட் கோலி

தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக முதல் ஓவரையே ஜஸ்பிரித் பும்ரா வீசி டீன் எல்கர் விக்கட்டை சாமர்த்தியமாக கைப்பற்றினார். பின்னர் தொடர்ந்து 5.5 ஓவர்கள் வீசிய அவர் சிறிய காயம் காரணமாக மைதானத்தில் இருந்து வெளியேறினார். அவர் தன்னுடைய காலை தவறான திசையில் ஊன்றிய காரணத்தினால் அந்த காயம் ஏற்பட்டது. காயம் சரியான பின்னர் நீண்ட நேரம் கழித்து இன்றைய நாளின் மூன்றாவது செஷனில் மீண்டும் பந்துவீச வந்தார்.

அவர் வந்த பொழுது தென்ஆப்பிரிக்க அணி 9 விக்கெட்டுகளை இழந்து விளையாடிக் கொண்டிருந்தது. மிக நீண்ட நேரம் கழித்து மீண்டும் அவர் பந்து வீசுவதற்கு முன்பாக விராட் கோலி, “ஒரு வழியாக ராக் மீண்டும் வந்து விட்டார்” என்று கூறினார். விராட் கோலி அவ்வாறு உற்சாகமாக பும்ராவை வரவேற்றதோடு மட்டுமல்லாமல் பும்ராவை ராக் என்று கூறியது ரசிகர்கள் அனைவரது மனதையும் கவர்ந்து விட்டது.

நீண்ட நேரம் கழித்து வந்த பொழுதிலும், வந்த சில நிமிடங்களிலேயே தென் ஆப்பிரிக்க அணியின் 10வது விக்கெட்டை ( கேசவ்வ மகாராஜன் விக்கெட் ) கைப்பற்றி தென் ஆப்பிரிக்க அணியின் முதல் இன்னிங்ஸ்சுக்கு முற்றுப்புள்ளி வைத்தார். 7.2 ஓவர்கள் வீசி 16 ரன்கள் மட்டுமே கொடுத்து 2 விக்கெட்டுகளை அவர் இன்று மொத்தமாக கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.