டி20 உலகக்கோப்பை அணியில் மாற்றம்; காயம் காரணமாக நம்பர் 3 பேட்ஸ்மேனுக்கு இடமில்லை!

0
4666

டி20 உலக கோப்பை அணியில் பக்கர் சமான் காயம் காரணமாக இடம்பெற மாட்டார் என்று முன்னாள் கேப்டன் ரசித் லத்தீப் தெரிவித்துள்ளார்.

டி20 உலக கோப்பை தொடர் இந்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெறவிருக்கிறது. அக்டோபர் 16ஆம் தேதி துவங்கி நவம்பர் இரண்டாம் வாரம் வரை இத்தொடர் நடத்தப்படுகிறது. இதற்காக ஏற்கனவே இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, இந்தியா, வங்கதேசம் ஆகிய அணிகள் அறிவிக்கப்பட்டுவிட்டன. பாகிஸ்தான் நியூசிலாந்து ஆகிய அணிகளின் நிர்வாகம் இன்னும் ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றன. குவாலிஃபயர் சுற்றில் பங்கேற்கும் மேற்கிந்திய தீவுகள் அணியும் அறிவிக்கப்பட்டுவிட்டன.

சமீப காலமாக பாகிஸ்தான் அணியில் நட்சத்திர வீரர்கள் அவ்வபோது காயம் ஏற்பட்டு வெளியில் அமர்ந்து வருகின்றனர். முன்னதாக வேகப்பந்து வீச்சாளர்கள் ஹசன் அலி காயம் காரணமாக அவதிப்பட்டு வந்ததால் சில முக்கியமான தொடர்களில் பங்கேற்கவில்லை. அடுத்ததாக இலங்கை எதிரான டெஸ்ட் தொடரின் போது நட்சத்திர வேகப் பந்துவீச்சாளர் சாஹின் அப்ரிடி காயம் காரணமாக அவதிப்பட்டு வந்ததால் ஆசிய கோப்பை தொடரில் பங்கேற்க முடியாமல் போனது. அதைத் தொடர்ந்து தற்போது நட்சத்திர வீரர் பக்கர் சமான் காயம் காரணமாக அவதிப்பட்டு வருவதாகவும், இதனால் டி20 உலக கோப்பை தொடரில் அவருக்கு இடம்பெறுவது சந்தேகம்தான் என்றும் பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் ரஷீத் லத்தீப் யூடியூப் சேனல் ஒன்றிற்கு அளித்த பேட்டியின் போது தெரிவித்திருக்கிறார்.

பக்கர் சமான் பாகிஸ்தான் அணிக்கு பல வருடங்களாக மிகச் சிறப்பான பங்களிப்பை கொடுத்து வருகிறார். துவக்க வீரராக இருந்து வந்த அவர் முகமது ரிஸ்வான் மற்றும் பாபர் அசாம் இருவரும் சமீப காலமாக மிகச் சிறப்பாக துவக்கத்தை கொடுத்து வருவதால் மூன்றாவது வீரராக களம் இறங்கி அபாரமான பங்களிப்பை கொடுத்து வருகிறார். சில நேரங்களில் பினிஷர் ரோலிலும் செயல்படுகிறார். ஏனெனில் மிகப்பெரிய தொடர்களில் முக்கியமான பினிஷர்கள் காயம் காரணமாக வெளியேறி வருவதால் இவர் தனது ரோலை மாற்றிக் கொண்டு அதிலும் மிகச் சிறப்பாக பங்காற்றினார். 2021 ஆம் ஆண்டு உலக கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணி இறுதி போட்டி வரை சென்றதற்கு முக்கிய காரணமாக இருந்தவர்களில் இவரும் ஒருவர்.

நடந்து முடிந்த ஆசிய கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணி இறுதிப்போட்டி வரை சென்றாலும், பக்கர் சமானுக்கு இது மறக்கக்கூடிய தொடராக அமைந்தது. ஆறு போட்டிகளிலும் இவருக்கு விளையாட வாய்ப்பு கொடுக்கப்பட்டது. 96 ரன்கள் மட்டுமே அடித்திருந்த இவர், வழக்கமாக 130 முதல் 150 ஸ்டிரைக் ரேட் வரை வைத்து விளையாடக்கூடியவர். ஆனால் இந்த தொடரில் இவரது ஸ்ட்ரைக் ரேட் 100 மட்டுமே. மிக சிறப்பான ஃபார்மில் இவர் இல்லை என்றாலும் மிகப்பெரிய தொடர்களில் குறிப்பாக முக்கியமான போட்டிகளில் பாகிஸ்தான் அணிக்கு வெற்றியை பெற்றுத் தரக்கூடிய அளவிற்கு அனுபவம் படைத்தவராக இருக்கிறார். இவருக்கு கணுக்காலில் காயம் ஏற்பட்டிருப்பதாகவும் அதன் காரணமாக டி20 உலகக் கோப்பை தொடரில் இவரால் இடம்பெற முடியாது என்றும் முன்னாள் கேப்டன் ரஷீத் லத்திப் கூறியிருப்பது அந்த அணிக்கு பெருத்த பின்னடைவாகவே தெரிகிறது.

இது குறித்து அவர் கூறுகையில், “பக்கர் சமான் டி20 உலக கோப்பை தொடருகான அணியில் எடுக்கப்படமாட்டார். அவருக்கு கணுக்காலில் காயம் ஏற்பட்டிருக்கிறது. நான்கு முதல் ஆறு வாரகாலம் அவருக்கு ஓய்வு தேவைப்படும். அதன் பிறகு ஒருமாத காலம் சிகிச்சையிலும் உடல் தகுதி சரி செய்வதிலும் ஈடுபடுவார். பாகிஸ்தான் அணியில் இருந்து எனக்கு வந்த தகவல் படி நான் இதை தெரிவிக்கிறேன். விரைவில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியிடப்படும் . சாஹின் அப்ரிடிக்கு இது போன்ற காயம் தான் ஏற்பட்டிருந்தது. அவர் தற்போது நன்றாக குணமடைந்து விட்டார். ஆகையால் உலக கோப்பை அணியில் அவருக்கு நிச்சயம் இடம் கொடுக்கப்படலாம்.” என்றும் அவர் குறிப்பிட்டார்.