எங்களை விட பைனல் போக ராஜஸ்தான் அணி தகுதியானது – பாஃப் டூ பிளிசிஸ் மனம் திறந்த பேச்சு

0
64
Faf du Plessis RCB

ஐ.பி.எல் பதினைந்தாவது சீசனின் இரண்டாவது தகுதிசுற்றுப் போட்டி, குஜராத் அகமதாபாத் நகரின் நரேந்திர மோதி மைதானத்தில் இன்று பெங்களூர் அணிக்கும், ராஜஸ்தான் அணிக்கும் இடையே நடைபெற்றது. பெங்களூர் அணி லக்னோ அணியை வென்றும் ராஜஸ்தான் அணி குஜராத் அணியிடம் தோற்றும் இந்தத் தகுதிசுற்றுப் போட்டிக்கு வந்திருந்தன.

முதலில் டாஸ் வென்ற ராஜஸ்தான் கேப்டன் பந்துவீச்சை தீர்மானித்தார். பெங்களூர் அணியின் நட்சத்திர வீரர்கள் இளம் வீரர்கள் என்று எல்லோரும் ஏமாற்ற, எலிமினேட்டர் போட்டியில் பெங்களூர் அணிக்குச் சதமடித்து வெற்றி பெற வைத்த கதாநாயகனான ரஜத் பட்டிதாரே இந்த முறையும் அரைசதமடித்து பெங்களூர் அணியைக் காப்பாற்றினார். 180 ரன்களை குவிக்க வேண்டிய அணி 157 ரன்களையே சேர்த்தது.

- Advertisement -

அடுத்து களமிறங்கிய ராஜஸ்தான் அணிக்கு ஜெய்ஸ்வால், சஞ்சு சாம்சன் ஒரு சிறிய பங்களிப்பை தர, ஜோஸ் பட்லர் இந்தத் தொடரில் தனது நான்காவது சதத்தை அடித்ததோடு, அணியையும் 18.1 ஓவரில் வெற்றிபெற வைத்தார். இந்த ஆட்டத்தில் 60 பந்துகளைச் சந்தித்த அவர் 106 ரன்களை குவித்தார். இந்தத் தொடரில் மொத்தம் 16 ஆட்டங்களில் 824 ரன்களை குவித்து, ஆரஞ்சு தொப்பியை அவரே வைத்திருக்கிறார்.

இந்தப் போட்டி முடிந்ததும் பேசிய பெங்களூர் அணியின் கேப்டன் பாஃப் டூ பிளிசிஸ் “இந்த ஆடுகளத்தில் நாங்கள் கொஞ்சம் குறைவான ஸ்கோரை அடித்திருப்பதை உணர்ந்தோம். இதில் 180 ஸ்கோர் சரியானதாக இருக்கும். புதிய பந்தில் 3-4 ஓவர்களில் மூவ்மென்ட் இருந்தது. முதல் ஆறு ஓவர்கள் நான் விளையாடியபோது டெஸ்ட் போட்டி போல் உணர்ந்தேன். மற்ற விக்கெட்டுகளை ஒப்பிடும்போது இந்த விக்கெட் வேகமாகவும் இருந்தது. ஆனால் அடுத்த இன்னிங்ஸில் வேகம் குறைந்தது. இது ஆர்.சி.பி அணிக்கு நல்ல சீசன், உண்மையில் பெருமையாகவே இருக்கிறது. இந்த சீசனில் ஹர்சல், தினேஷ்கார்த்திக் சிறப்பாக செயல்பட்டார்கள். அவர்கள் அனைவரும் இந்திய அணிக்கும் தேர்வானதும் நல்ல விசயம். இந்த வெற்றிக்கு ராஜஸ்தான் அணி எங்களை விட தகுதியானது” என்றார்.

மேலும் இரசிகர்கள் குறித்துப் பேசிய அவர் “நாங்கள் எங்கு விளையாடிய போதும் சிறப்பான இரசிகர்களைப் பெற்றிருந்தோம். அவர்களின் ஆதரவு நெகிழ்வானது. மும்பை டெல்லி ஆட்டத்தின் போது அவர்கள் தந்த ஆதரவில் நாங்கள் உணர்வுவயப்பட்டவர்களாக ஆனோம். மேலும் பபிள் தாண்டி எங்களுக்குச் சிறந்த குழு இருந்தது. நாங்கள் இரவு எப்பொழுது ஹோட்டல் திரும்பினாலும் அவர்கள் காத்திருப்பார்கள். பின்பு காலை உணவிற்காக ஏழு மணிக்கே எழுந்து வேலை செய்வார்கள். இந்தியா முழுக்க இப்படித்தான் என்று எனக்குத் தெரியும். எங்கள் மீது கருணை காட்டிய அனைவருக்கும் நன்றி” என்று உருக்கமாகக் கூறினார். அத்தோடு அணிக்குக் கிடைத்திருக்கும் ரஜத் பட்டிதார் போன்ற இளைஞர்களைக் குறிப்பிட்டும் புகழ்ந்து பேசினார்.

- Advertisement -