” 2017 சாம்பியன்ஸ் டிராபி பைனலில் பும்ரா நோ பால் வீசுவதை முன்னரே கனவில் கண்டார் ஃபக்கர் ஜமான் ” – போட்டிக்கு முன் நடந்ததை விவரிக்கும் சர்ப்ராஸ் கான்

0
84
Sarfaraz Khan about Bumrah no ball to Fakhar Zaman

விராட் கோலி இந்திய அணிக்கான மூன்று வடிவ கிரிக்கெட் போட்டிகளுக்கு கேப்டனாக இருந்து, மிகச்சிறந்த வெற்றி சராசரியைக் கொண்டிருந்தாலும், அவரால் ஐ.சி.சி நடத்தும் தொடர்களை வெல்லவே முடியவில்லை என்பது பெருங்குறையாகவே இருந்து வருகிறது.

2017ஆம் ஆண்டு ஐ.சி.சி இங்கிலாந்தில் நடத்திய சாம்பியன்ஸ் டிராபியின் இறுதிபோட்டியில் தோற்றது, 2019ஆம் ஆண்டு ஐ.சி.சி இங்கிலாந்தில் நடத்திய 50 ஓவர் உலகக்கோப்பை அரையிறுதியில் நியூசிலாந்தோடு தோற்றது, மீண்டும் ஐ.சி.சி இங்கிலாந்தில் நடத்திய உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிபோட்டியில் நியூசிலாந்தோடு தோற்றதென, கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாமலே போயிருக்கிறது விராட்கோலியின் தலைமையில் இந்திய அணிக்கு!

- Advertisement -

இதில் 2017ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபியை யாராலும் அப்போது அவ்வளவு சீக்கிரத்தில் மறந்திருக்கவே முடியாது. ஏனென்றால் அந்தத் தொடரின் இறுதிபோட்டியில் இந்திய அணி தோற்றது பாகிஸ்தான் அணியுடன். அதுவரை இந்திய அணி ஐ.சி.சி நடத்திய எந்தத் தொடரிலும் பாகிஸ்தான் அணியோடு தோற்றதே கிடையாது. அந்தப் போட்டியில் பாகிஸ்தான் துவக்க ஆட்டக்காரர் பகார் ஜமானுக்கு நான்காவது ஓவரில் பும்ராவின் பந்து எட்ஜாகி கீப்பர் தோனியிடம் கேட்ச்சாக, பகார் ஜமான் பெவிலியன் நோக்கி நடக்க ஆரம்பித்துவிட்டார். ஆனால் பிறகு அது நோ-பால் என அறியப்பட்டு அறிவிக்கப்பட, திரும்ப வந்த பகார் ஜமான் அதிரடி சதம் விளாச, பாகிஸ்தான் அணி 338 ரன்கள் குவித்ததோடு, இந்திய அணியை 180 என்கின்ற பெரிய ரன் வித்தியாசத்தாலும் தோற்கடித்து, சாம்பியன்ஸ் டிராபியை கைப்பற்றியது!

ஆனால் தற்பொழுது கடந்த ஆண்டு வரை பாகிஸ்தான் அணியோடு 20 ஓவர், 50 ஓவர் உலகக்கோப்பை போட்டியில் தோற்றதே கிடையாதென்ற பெருமையை, பாபர் ஆசமின் தலைமையிலான பாகிஸ்தான் அணிக்கு எதிராக தோற்று இழந்ததோடு, அந்தத் தொடரில் நியூசிலாந்து அணியோடும் தோற்று, தொடரை விட்டு பரிதாபமாக முதல் சுற்றோடு இந்திய அணி வெளியேறி இருந்தது.

தற்போது 2017ஆம் ஐ.சி.சி சாம்பியன்ஸ் டிராபியை வென்ற பாகிஸ்தான் அணியின் கேப்டனான சர்ப்ராஸ் கான், இந்திய அணிக்கு எதிரான அந்த ஆட்டம் குறித்தான தனது நினைவுகளைப் பகிர்ந்து கொண்டுள்ளார்.

- Advertisement -

இது தொடர்பாகக் கூறியுள்ள அவர் “அந்த ஆட்டத்திற்குப் பிறகுதான் நாங்கள் எங்கள் பயணத்தைத் தொடங்கினோம். அந்த ஆட்டத்திற்கு முன்பு நாங்கள் நீண்ட குழு சந்திப்பை நடத்தினோம். அதில் மூத்த வீரர்கள், பயிற்சியாளர்கள் கேப்டன்களும் இருந்தனர். அணிக்கலவை, களத்தில் எப்படிச் செயல்பட வேண்டும் என்பது குறித்து விவாதித்தோம். வெற்றி பெற வேண்டுமென்றால் எங்கள் மனோபாவத்தை மாற்றிக்கொள்ள வேண்டுமென்று உணர்ந்து கொண்டோம். நான் ஒரு கேப்டனாக எந்த அழுத்தத்தையும் ஏற்றிக்கொள்ள வேண்டாம் என்று கூறியதோடு, வெள்ளை கோட் அணிந்து, கோப்பையை வென்றுதான் பாகிஸ்தான் திரும்புவோம் என்று வீரர்களிடம் கூறியிருந்தேன்” என்று நினைவுகளைப் பகிர்ந்திருக்கிறார்!