“விராட்கோலி, விராட்கோலி..”ன்னு சொல்லி, இன்னொரு சிறப்பான வீரரை கண்டுக்காம போய்ட்டீங்களே – கவுதம் கம்பீர் ஆவேசம்!

0
100

விராட் கோலியை பாராட்டி விட்டு இன்னொரு வீரரை கண்டுகொள்ளாமல் விட்டீர்களே என்று கடும் ஆவேசத்துடன் பேசி இருக்கிறார் கௌதம் கம்பீர்.

நடந்து முடிந்த ஆசிய கோப்பை தொடர் இந்திய அணிக்கு மறக்க கூடிய ஒன்றாக அமைந்துவிட்டது. லீக் சுற்றில் மிகச்சிறப்பாக விளையாடிய இந்திய அணி சூப்பர் ஃபோர் சுற்றில் கோட்டை விட்டது. பலவீனமான அணியாக காணப்பட்ட இலங்கை மற்றும் பரம எதிரியான பாகிஸ்தான் இரண்டு அணிகளிடமும் தோல்வியை தழுவி இக்கட்டான சூழலுக்கு சென்றது. பின்னர் இறுதி போட்டிக்கு செல்லும் வாய்ப்பையே இழந்துவிட்டது.

- Advertisement -

தொடர்ந்து இரண்டு முறை வென்ற நடப்பு சாம்பியன் அணியாக களமிறங்கிய இந்தியா, இப்படி மோசமாக செயல்பட்டிருப்பது கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியது. அதே நேரம் டி20 உலக கோப்பை தொடருக்கு முன்னர் இப்படி நேர்ந்ததால் பலரும் கடும் கோபம் அடைந்தனர்.

இவை அனைத்தையும் மறக்கும் விதமாக ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் விராட் கோலி சதம் விளாசியது அமைந்துவிட்டது. கிட்டத்தட்ட 1000 நாட்களுக்கு பிறகு, விராட் கோலி இந்த சதத்தை அடித்திருப்பதால் பலரும் மகிழ்ச்சி அடைந்தனர். மேலும் டி20 போட்டிகளில் முதல் முறையாக சதம் விளாசியிருப்பது கூடுதல் நம்பிக்கையை கொடுத்திருக்கிறது. ஏனெனில் இன்னும் சில வாரங்களில் டி20 உலக கோப்பை தொடர் துவங்குகிறது. ஆகையால் இந்திய ரசிகர்கள் நம்பிக்கையை பெற்றனர்.

அதே ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் புவனேஸ்வர் மிகச் சிறப்பாக பந்து வீசினார். வெறும் நான்கு ரன்களை மட்டும் விட்டுக்கொடுத்து ஐந்து விக்கெட்டுகளை கைப்பற்றினார். விராட் கோலியின் சதத்தை கொண்டாடுவதில் கவனமாக இருந்த அனைவரும் இதை மறந்து விட்டனர் என்று கௌதம் கம்பீர் கடுமையாக சாடி உள்ளார்.

- Advertisement -

“விராட் கோலியை கொண்டாடத் தெரிந்த நமக்கு மிகச் சிறிய கிராமத்தில் இருந்து வந்து இந்திய அணிக்கு சிறப்பான பங்களிப்பை கொடுத்து வரும் புவனேஸ்வர் குமார் போன்ற வீரரின் ஐந்து விக்கெட்டை கொண்டாட மறந்து விட்டோம். ஹீரோ போர்வையில் ஒளிந்திருக்கும் வீரர்களை கொண்டாடும் அதே நேரத்தில் இளம் வீரர்களின் மீதும் கவனத்தை செலுத்துங்கள். அவர்களுக்கு ஆதரவு கொடுங்கள். அப்போதுதான் ஒட்டுமொத்த அணியாக இந்தியா சிறப்பாக இருக்கும்.”

“விராட் கோலியின் 100 முக்கியத்துவம் அற்றதா?என்று கேள்வி என் முன்னே வைக்க வேண்டாம். அதுவும் இந்திய அணிக்கு முக்கியம் தான். அதே நேரம் புவனேஸ்வர் குமாரும் போற்றப்படக்கூடியவர் என்பதே எனது வாதம். ஏனெனில் புவனேஸ்வர் பற்றி ஓரிருவர் தவிர யாரும் பேசவில்லை. ஆனால் விராட் கோலியின் புகழை உலகமே பாடியது. இருவருக்கும் சம முக்கியத்துவம் கொடுங்கள் என்பது எனது கருத்து.” என்றார்.