“நீங்க கோலி கூட என்னை வச்சு பேசிக்கோங்க.. ஆனா அவர் என்னைவிட பெரியவர்” – பாபர் அசாம் மனதைத் தொடும் பேச்சு!

0
1885
Babar

கிரிக்கெட் உலகத்தில் பெரும்பாலானவர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் ஆசியக் கோப்பையில் இந்தியா பாகிஸ்தான் மோதிக் கொள்ளும் போட்டி இன்று மழைக்கு நடுவே சிக்கிக் கொண்டிருக்கிறது. போட்டிக்குள் இருக்கும் பரபரப்பு ஒருபுறம் என்றால், மழைக்கு நடுவே போட்டி நடக்குமா? நடக்காதா? என்பது இன்னொரு புறமாக இருக்கிறது.

இருநாட்டு ரசிகர்களும் இரு நாட்டு அணிகளுக்காக சமூக வலைதளத்தில் தங்களுடைய கருத்துக்களை அழுத்தமாக பதிந்து விவாதங்களில் ஈடுபடுவதும், தங்கள் நாட்டு அணியை மிகத் தீவிரமாக ஆதரிப்பதும் என்பது வழக்கமான ஒன்று.

- Advertisement -

அதே சமயத்தில் இருநாட்டு ரசிகர்களில் பெரும்பாலானவர்கள் விராட் கோலிக்கும் பாபர் ஆசமுக்கும் பிரிந்து நின்று சமூக வலைத்தளத்தில் தங்களது ஆதரவை தீவிரமாக பதிவு செய்து கொண்டிருக்கிறார்கள். சமகால கிரிக்கெட்டில் இருவரும் சீரான ரன் கொண்டு வருவதில் ஒரே மாதிரியான செயல்பாட்டை கொண்டு இருக்கிறார்கள்.

இதன் காரணமாக விராட் கோலியா? பாபர் ஆசமா? என்கிற விவாதம் கடந்த வருடங்களிலேயே துவங்கி விட்டது. அதற்கு அடுத்து பாபர் ஆசம் பேட்டிங் தொடர்ந்து சீராக இருந்து வந்த காரணத்தினால், இந்த விவாதம் மேலும் மேலும்வலுவடைந்து வருகிறது.

இப்படி எல்லாம் ஒருபுறம் ரசிகர்கள் பிரிந்து நின்று தங்களது ஆதரவை தந்து கொண்டிருக்கும் பொழுது, விராட் கோலி மிக இயல்பான நடவடிக்கையை பாகிஸ்தான் வீரர்களிடம் நட்பாகக் கொண்டு இருக்கிறார். நேற்று அவர் மைதானத்தில் பயிற்சியின்போது பாகிஸ்தான் வீரர்கள் அனைவரிடமும் மிகவும் கலகலப்பாக பேசிக் கொண்டிருந்தார்.

- Advertisement -

இதேபோல் பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் ஆசம் போட்டிக்கு முந்தைய நாளான நேற்று பத்திரிக்கையாளர் சந்திப்பில் விராட் கோலி பற்றி மிகவும் மரியாதையான வார்த்தைகளை பயன்படுத்தி, மிக நாகரிகமான முறையில் மிக உயர்வாக பேசியிருந்தார். இவர்களுக்குள் ஏற்கனவே ஒரு நல்ல நட்பு இருக்கவே செய்கிறது.

நேற்றைய பத்திரிகையாளர் சந்திப்பில் பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆசம் கூறும் பொழுது ” விராட் கோலியா? பாபரா? என்கிற விவாதத்தை மக்களிடம் விட்டு விட வேண்டும். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கருத்து இருக்கும். எனவே இது குறித்து நான் கருத்து தெரிவிக்க விரும்பவில்லை.

அவர் எனக்கு மூத்தவர். மூத்தவர்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவராக இருந்தாலும் மரியாதை கொடுக்க வேண்டும் என்பது எனக்கு கற்றுக் கொடுக்கப்பட்டு இருக்கிறது. மேலும் நான் அவரிடமிருந்து நிறைய கற்றுக் கொண்டேன். 2019 ஆம் ஆண்டு உலகக் கோப்பையின் போது நான் அவருடன் பேசினேன். அது எனக்கு மிக உதவியாக இருந்தது!” என்று கூறியிருக்கிறார்!