ரூல்ஸ்ன்னு ஒன்னு எதுக்குப்பா வச்சிருக்காங்கா… பேர்ஸ்டோவ் ரன்-அவுட் விவகாரம்… கடைசியாக வாயைத்திறந்து கருத்து சொன்ன அஸ்வின்!

0
762

பேர்ஸ்டோவ் ரன் அவுட் விவகாரத்திறகு தன்னுடைய கருத்தை யூடியூப் சேனலில் பகிர்ந்து கொண்டார் ரவிச்சந்திரன் அஸ்வின்.

இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியில் சில சர்ச்சையான நிகழ்வுகள் நடைபெற்றது. அதில் மிகவும் குறிப்பிடத்தக்க விதமாகவும் பலரின் பேசுபொருளாகவும் மாறியது ஜானி பேர்ஸ்டோவ் ரன் அவுட்.

- Advertisement -

இதில் அலெக்ஸ் கேரி செய்தது முறையற்றது, ஆஸ்திரேலியா அணியினர் வெற்றி பெறுவதற்காக எந்த எல்லைக்கும் சென்றுவிட்டார்கள் என்கிற குற்றச்சாட்டுகள் தொடர்ந்து முன்வைக்கப்பட்டு வருகிறது. மற்றொருபுறம் இது விதிமுறைகளுக்கு உட்பட்டே நடைபெற்றிருக்கிறது என்பதால் மூன்றாம் நடுவர் அவுட் கொடுத்திருக்கிறார். அதை பலரும் புரிந்து கொண்டு பேசவேண்டும் என்றும் கருத்துக்கள் பேசப்பட்டு வருகின்றன.

இதுபோன்று சர்ச்சையான முறையில் ரன் அவுட் செய்த விவகாரத்தில் பலரின் மாறுபட்ட விமர்சனங்களையும் சந்தித்து வந்த ரவிச்சந்திரன் அஸ்வின், இதற்கு என்ன பேசுவார்? என்று பலரும் எதிர்பார்த்து வந்தனர். தன்னுடைய யூடியூப் சேனலில் அண்மையில் வெளியிட்ட வீடியோவில் இதற்கு நேர்த்தியான கருத்துக்களை பகிர்ந்து கொண்டார் அஸ்வின்.

“ஜானி பேர்ஸ்டோவ், ஓவரின் கடைசி பந்து என்பதால் பந்தை விட்டுவிட்ட பிறகு நேரடியாக நான்-ஸ்ட்ரைக்கர் முனைக்கு வந்துவிட பார்த்தார். ஆனால் கீப்பர் பந்தை பிடித்தாரா? இல்லையா? என்பதை உறுதி செய்யாமல் நடந்து வந்துவிட்டார். அலெக்ஸ் கேரி பந்தைப்பிடித்து ஒரு நொடியும் தாமதிக்காமல் வீசிவிட்டார். இதை ரீப்ளேவில் தெளிவாக பார்க்க முடிந்தது.

- Advertisement -

எந்த ஒரு வீரரும் பந்தை விட்டுவிட்ட பிறகு கீப்பர் பிடித்து விட்டாரா? ஸ்லிப் ஃபீல்டர் இன்னும் கவனமுடன் இருக்கிறாரா? என்பதை உறுதி செய்ய வேண்டும். மேலும் பந்து முழுமை அடைந்துவிட்டதா? என்பதையும் உறுதி செய்த பிறகு கிரீஸ் விட்டு வெளியே வர வேண்டும். சர்வதேச கிரிக்கெட்டில் மட்டுமல்ல ரஞ்சிக்கோப்பையில் கூட இது போன்ற விதிமுறைகளை பேஸ்ட்மேன்கள் கடைபிடித்த பின்பே பிட்சில் மற்றொரு திசைக்கு செல்வர்.

அலெக்ஸ் கேரி பந்தைப்பிடித்து என்ன செய்தார் என்பதை பற்றி எவருமே பேசவில்லை. நேரடியாக விமர்சனத்தை மட்டும் முன் வைக்கிறார்கள். போட்டியில் ஜானி பேர்ஸ்டோவ் விக்கெட் முக்கியமானது என்பதை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. அதன் காரணமாகவே மைதானத்தில் இருந்த ரசிகர்கள் இதுபோன்று கருத்துக்களை முன்வைக்கின்றனர்.

அனைத்தும் விதிமுறைகளுக்கு உட்பட்டே நடந்திருக்கிறது. கிட்டத்தட்ட 20 மீட்டர்கள் பின்னே இருந்து அலெக்ஸ் கேரி ஸ்டம்பை அடித்திருக்கிறார். அதுவும் எந்த ஒரு தாமதமும் செய்யாமல் அடித்திருக்கிறார்.

எல்லா நேரங்களிலும் நான் ஸ்ட்ரைக்கர் முனையில் ரன் அவுட் செய்தாலும் சரி, கீப்பிங் செய்யும்பொழுது இது போன்ற ரன் அவுட் செய்தாலும் சரி ‘ஸ்பிரிட் ஆப் தி கேம்’ என்று பலராலும் பேசப்பட்டு வருகிறதே ஏன்? விதிமுறைகளுக்கு உட்பட்டு தானே அனைத்தும் நடைபெற்று வருகிறது. இங்கே எதற்கு ‘ஸ்பிரிட் ஆப் தி கேம்’ கருத்து வருகிறது?. ரூல்ஸ் படி நடக்கவேண்டுமா இல்லையா?.” என்று சில கேள்விகளையும் முன்வைத்து பேசினார்.