தோனி பாய் எனக்கு ஒரு வாய்ப்பு கொடுத்திருந்தால் என் வாழ்க்கை வேறு மாதிரியாக இருந்திருக்கும் – முன்னாள் சி.எஸ்.கே வீரர்!

0
1149
MSD

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன்களில் மிக வெற்றிகரமான கேப்டனாக அறியப்படுபவர் ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேனான மகேந்திரசிங் தோனி. டி20 உலகக் கோப்பை, ஒருநாள் போட்டி உலக கோப்பை, சாம்பியன்ஸ் டிராபி என ஐசிசி நடத்தும் மூன்று வகையான உலகக்கோப்பைகளையும் கைப்பற்றிய ஒரே கேப்டன் மகேந்திரசிங் தோனிதான்!

டி20 கிரிக்கெட்டை எப்படி அணுக வேண்டும் என்று அவரது அணி வழிநடத்தலைப் பார்த்து மற்றவர்கள் கற்றுக் கொள்ளும் அளவிற்கு அவர் ஒரு புத்தகமாக இந்த கிரிக்கெட் வடிவத்தில் இருக்கிறார். 2007ஆம் ஆண்டு ஒருநாள் உலக கோப்பையில் இந்திய அணி மிக மோசமாக தோற்று முதல் சுற்றோடு வெளியேறி, இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் இந்திய கிரிக்கெட் வீரர்களின் வீடுகளை தாக்கும் அளவிற்கு சென்றது நிலைமை.

- Advertisement -

இப்படியான ஒரு காலகட்டத்தில்தான் 2007ஆம் ஆண்டு ஐசிசி டி20 கிரிக்கெட் வடிவத்திற்கு முதல் உலகக் கோப்பையை நடத்தியது. இந்த உலகக் கோப்பைக்கு, தான் உள்பட பல சீனியர் வீரர்கள் பங்கேற்க வேண்டாம், இளம் வீரர்கள் பங்கேற்கும் அந்த அணிக்கு மகேந்திரசிங் தோனி தலைமை தாங்கட்டும் என்று சச்சின் சொல்ல, அங்கிருந்து ஆரம்பித்தது மகேந்திர சிங் தோனியின் வெற்றிகரமான கேப்டன் பயணம்.

இதற்கு அடுத்த ஆண்டில் இந்திய கிரிக்கெட் வாரியம் ஐபிஎல் என்ற டி20 கிரிக்கெட் தொடரை அறிமுகப்படுத்த, அந்தத் தொடரிலிருந்து மகேந்திர சிங் தோனியின் கேப்டன்சிப் 20 கிரிக்கெட் வடிவத்தில் வேறொரு உயரத்தில் பயணிக்க ஆரம்பிக்கிறது. இன்று வரை அதிக முறை ப்ளே ஆப் சுற்று, அதிக முறை இறுதிப்போட்டி, நான்கு முறை சாம்பியன் என இவரது தலைமையின் கீழ் ஐபிஎல் தொடரில் இவர் தலைமை வகிக்கும் சென்னை அணி வெற்றிகரமான அணியாகத் திகழ்கிறது.

இவரது செயல்பாடுகளும் அதன் வழியான புள்ளிவிவரங்களும் யாரும் எட்ட முடியாத உயரத்தில் இருக்க, தற்போது மொத்தமாக கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ள இந்தியாவை சேர்ந்த வலது கை வேகப்பந்து வீச்சாளர் ஈஸ்வர் பாண்டே ஒரு அதிர்ச்சிகரமான கருத்தை வருத்தமாக முன்வைத்திருக்கிறார்.

- Advertisement -

இவர் ஐபிஎல் தொடரில் தோனி தலைமை வகித்த ரைசிங் புனே ஜெயின்ட்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஆகியவற்றுக்கும், உள்நாட்டு கிரிக்கெட்டில் மத்திய பிரதேச அணிக்கும் விளையாடினார். இந்த ஆண்டு கேரள அணியுடனான போட்டியே இவருக்கு இறுதிப் போட்டியாக அமைந்திருந்தது.

தற்போது ஓய்வு அறிவிப்பை வெளியிட்டுள்ள இவர் கூறும் பொழுது “தோனி பாய் எனக்கு இந்திய அணியில் ஒரு வாய்ப்பு கொடுத்திருந்தால், எனது கேரியர் வேறு மாதிரியாக இருந்திருக்கும். அப்போது எனக்கு இருபத்தி மூன்று இருபத்தி நான்கு வயது இருக்கும். அப்பொழுது எனக்கு தோனி பாய் வாய்ப்பு கொடுத்திருந்தால் நான் நிச்சயம் சிறப்பாக நாட்டிற்காகச் செய்திருப்பேன். என் வாழ்க்கை இப்போது இருப்பது போல் இல்லாமல் நிச்சயமாக வேறு விதமாக வித்தியாசமாக நல்லமுறையில் இருந்திருக்கும்” என்று தெரிவித்திருக்கிறார்!

மேலும் தொடர்ந்து பேசிய அவர் ” எனது நாட்டிற்காக ஒரு ஆட்டம் கூட என்னால் விளையாட முடியவில்லை என்கிற வருத்தத்தை நான் இன்றளவும் உணர்கிறேன். ஆனாலும் நான் எப்பொழுதும் ஒரு இந்திய வீரராகவே அறியப்படுவேன் ” என்று வருத்தத்துடன் தனது கருத்தை பதிவு செய்திருக்கிறார்!