நேற்று இரவு இங்கிலாந்து அணிக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கு 16 பேர் கொண்ட இந்திய அணி ரோகித் சர்மா தலைமையில் அறிவிக்கப்பட்டது.
இதில் ஆச்சரியப்படத்தக்க முடிவாக உத்தர பிரதேசத்தை சேர்ந்த வலதுகை விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேன் 22 வயதான துருவ் ஜுரல் சேர்க்கப்பட்டது அமைந்தது. இதே அணியில் விக்கெட் கீப்பிங் செய்யக்கூடிய கே.எல்.ராகுல் மற்றும் கே எஸ் பரத் இருந்தும் இவருக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டது.
இவரது வாழ்க்கைக் கதை கடினமான பாதைகளில் பயணப்பட்டதாகவும், அதைவிட கடினமான உழைப்பை கூறியதாகவும் அமைந்திருக்கிறது. இவருடைய தந்தை நேம் சிங் கார்கில் போர்வீரர் தியாகி ஆவார். தன் மகனை இவர் ராணுவத்திற்கு அனுப்பவே விரும்பி இருக்கிறார்.
ஒரு கட்டத்தில் துருவ் ஜுரல் தந்தை மகனுக்கு கிரிக்கெட் பேட் 14 வயதில் வாங்கி கொடுக்காத பொழுது, அவர் வீட்டை விட்டு ஓடி விடுவதாக மிரட்டி வாங்கி இருக்கிறார். இதற்கு அடுத்து பணக்கஷ்டங்கள் வந்த பொழுது அவருடைய தாய் தன்னுடைய தங்க சங்கிலியை விற்று அவரை கிரிக்கெட் விளையாட அனுமதித்திருக்கிறார்.
துருவ் ஜுரல் படிப்படியாக உள்ளூர் போட்டிகளில் ரன்கள் குவிக்க ஆரம்பிக்க, டெல்லிக்கு குடிபெயர்க்கிறார்கள். அங்கிருந்து நொய்டா தினமும் சென்று வந்ததில் சிரமங்கள் பல ஏற்பட்டிருக்கிறது. இவரது தாய் உடனே தன் மகனுடன் நொய்டாவுக்கு குடிமாறி இருக்கிறார்.
பிறகு இவரது திறமையின் காரணமாக அண்டர் 19 இந்திய அணியில் இடம் கிடைத்தது. மேலும் 2020 ஆம் ஆண்டு அண்டர் 19 இந்திய அணி, அப்போதைய உலகக்கோப்பையில் இரண்டாம் இடம் பிடித்த பொழுது, துருவ் ஜுரல் அந்த அணியின் துணை கேப்டனாக இருந்தார்.
அந்த அடியில் இடம்பெற்று இருந்த ரவி பிஸ்னாய், பிரியம் கார்க் போன்ற இளம் வீரர்கள் இவருக்கு முன்பாகவே ஐபிஎல் வாய்ப்பை பெற்று விட்டார்கள். இவரது தந்தை ஏதாவது வித்தியாசமாக செய்தால் மட்டுமே உனக்கு வாய்ப்புகள் கிடைக்கும் என்று சொன்னதை இவர் உறுதியாக நம்பி பின்பற்றி இருக்கிறார்.
பின்பு 2022 ஆம் ஆண்டு இவரை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வாங்கியது. ஆனால் அவர்கள் தொடர்ச்சியாக ரியான் பராக்கை ஆதரித்து வந்த காரணத்தினால் இவருக்கு வாய்ப்புகள் கொடுக்கப்படவில்லை.
கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் இம்பேக்ட் பிளேயர் விதி கொண்டுவரப்பட்டது இவருக்கு மிகப்பெரிய வாய்ப்பாக அமைந்தது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான தனது முதல் போட்டியில் 15 பந்துகளில் 32 ரன்கள் குவித்து எல்லோரையும் திரும்பிப் பார்க்க வைத்தார். அதற்குப் பிறகு ரியான் பராக் ஃபார்ம் சரியில்லாமல் போக, இவர் நேரடியாகவே அணியில் இடம் பிடித்தார்.
சஞ்சு சாம்சன் எப்பொழுதும் தன்னிடம் எதையும் பெரிதாக யோசிக்காமல் எளிமையாக வைத்து பதட்டமில்லாமல் விளையாட சொல்வார் என்பதும், ஜோஸ் பட்லர் போட்டிக்கு எவ்வாறு தயாராகிறார் என்பதை கவனிப்பது தனக்கு உதவுவதாகவும் ஜூரல் கூறியிருக்கிறார்.
சமீபத்தில் தென் ஆப்பிரிக்க ஏ அணிக்கு எதிராக நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் அரை சதம் அடித்திருந்தார். மொத்தமாக உள்நாட்டு முதல் தர போட்டிகளில் விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேனாக ஆவரேஜ் 46 ரன் வைத்திருக்கிறார். இஷான் கிஷான் தாமாக ஓய்வுக் கேட்டு சென்று விட்ட காரணத்தினால், இவர் மீது அஜித் அகர்கர் தலைமையிலான தேர்வுக்குழு திரும்பி இருக்கிறது. அச்சம் இல்லாத கிரிக்கெட் விளையாடும் இந்த இளம் வீரர் எதிர்காலத்தில் சாதிப்பார் என்று நம்பலாம்!