நியூசிலாந்தை வீழ்த்தியது இங்கிலாந்து; ஆஸ்திரேலியா அணிக்கு ஆபத்து!

0
5260
Eng vs Nz

நடப்பு எட்டாவது டி20 உலக கோப்பை தொடரில் மிக முக்கியமான ஆட்டம் ஒன்றில் பெரிய அணிகளான நியூஸிலாந்து மற்றும் இங்கிலாந்து அணிகள் பிரிஸ்பேன் மைதானத்தில் இன்று மோதின!

இந்தப் போட்டிக்கான டாசில் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜாஸ் பட்லர் பேட்டிங்கை தேர்வு செய்தார். பட்லர் மற்றும் ஹேலஸ் இருவரும் இணைந்து முதல் விக்கட்டுக்கு 50 ரன்கள் தாண்டி எடுத்தார்கள்.

- Advertisement -

ஒரு முனையில் ஹேலஸ் அதிரடியாக விளையாடி அரைசதம் அடித்து ஆட்டம் இழந்தார். இன்னொரு முனையில் பொறுமையாக விளையாடிய பட்லர் அதற்குப் பிறகு அதிரடி காட்ட ஆரம்பித்தார். மிகச் சிறப்பாக விளையாடிய பட்லர் 47 பந்துகளில் 73 ரன்களை ஏழு பவுண்டரி மற்றும் 2 சிக்சருடன் எடுத்தார்.

அடுத்து வந்த பேட்மேன்களில் லிவிங்ஸ்டன் 20 ரன் எடுக்க நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் இங்கிலாந்து அணி 179 ரன்கள் குவித்தது. நியூசிலாந்து தரப்பில் மிச்சல் சான்ட்னர் நான்கு ஓவர்கள் பந்து வீசி 25 ரன்கள் மட்டும் விட்டுக் கொடுத்து ஒரு விக்கெட்டை கைப்பற்றினார்.

இதற்கு அடுத்து களம் இறங்கிய நியூசிலாந்து அணிக்கு துவக்க ஆட்டக்காரர் கான்வே ஏமாற்றம் அளித்தார். இன்னொரு துவக்க ஆட்டக்காரர் பின் ஆலன் அவரும் வெளியேறினார். இதற்குப் பிறகு ஜோடி சேர்ந்த கேப்டன் வில்லியம்சன் மற்றும் பிலிப்ஸ் இருவரும் சேர்ந்து அணியை மீட்டெடுக்க ஆரம்பித்தார்கள்.

- Advertisement -

ஒரு நாள் போட்டி போல ஆடிவந்த கேப்டன் வில்லியம்சன் 40 பந்துகளில் 40 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். மிகச் சிறப்பாக அதிரடியாக விளையாடிய பிலிப்ஸ் 36 பந்துகளில் 62 ரன்கள் எடுத்தார். இவரது விக்கெட் வீழ்ந்ததும் ஆட்டம் இங்கிலாந்து பக்கம் சென்றது. இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் ஆறு விக்கெட் இழப்பிற்கு நியூசிலாந்து அணியால் 159 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால் இங்கிலாந்து அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

இந்த வெற்றியின் மூலம் இங்கிலாந்து அணி அரையிறுதி வாய்ப்பில் இருக்கிறது. இந்தப் போட்டிக்கு அடுத்து இங்கிலாந்து நியூசிலாந்து ஆஸ்திரேலியா 3 அணிகளும் தலா 5 புள்ளிகள் எடுத்துள்ளன. இதில் ரன் ரேட் அடிப்படையில் நியூசிலாந்து இங்கிலாந்து ஆஸ்திரேலியா என்று வருகின்றது.

அடுத்து இங்கிலாந்து அணி இலங்கை அணியை எதிர்கொள்ள இருக்கிறது இந்த போட்டியில் இங்கிலாந்து அணி கட்டாயம் வென்றாக வேண்டும். இதேபோல் ஆஸ்திரேலியா அணி ஆப்கானிஸ்தான் அணியையும், நியூசிலாந்து அணி அயர்லாந்து அணியையும் எதிர் கொள்ள இருக்கின்றன. இந்த ஆட்டத்திலும் இந்த இரு அணிகள் கட்டாயம் வென்றாக வேண்டும்.

இதில் தற்போது ஆஸ்திரேலியா அணிக்கு சிக்கல் எங்கு உருவாகியுள்ளது என்றால் ஆஸ்திரேலிய அணி ரன் ரேட்டில் மற்ற இரண்டு அணிகளையும் விட கீழே இருக்கிறது. ஆஸ்திரேலியா அணி அரையிறுதி சுற்றில் நுழைய வேண்டும் என்றால் இங்கிலாந்து நியூசிலாந்து அணிகளில் ஒன்று தோல்வியை தழுவ வேண்டும். இல்லையென்றால் ஆப்கானிஸ்தான் அணியை ஆஸ்திரேலியா அணி மிகப்பெரிய ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்த வேண்டும். இந்த இரண்டில் ஒன்று நடந்தால் மட்டுமே ஆஸ்திரேலியா அணியால் அரையிறுதிக்குள் நுழைய முடியும். தற்போது உலக கோப்பையை நடத்தி வரும் நாடே உலகக் கோப்பைத் தொடர் அரையிறுதிக்கு முன்னேற முடியாமல் வெளியேறக்கூடிய சூழல் உருவாகி இருக்கிறது!