மேக்ஸ்வெல் இன் அதிரடி ஆட்டத்திற்கு பிறகு எலான் மஸ்க் தற்செயலாக வெளியிட்ட ட்வீட் – இணையத்தில் வைரல்

0
275
Elon Musk and Glenn Maxwell

உலக அளவில் பிரபலமான பெயர்களில் ஒன்று எலான் மஸ்க். சமூக வலைதளங்களிலும் இவர் மிகவும் பிரபலமாக செயல்பட்டு வருகிறார். எப்பொழுதும் அறிவியல் பற்றி பேசும் இவர் நேற்று மேக்ஸ்வெல் குறித்து ட்வீட் ஒன்றை வெளியிட்டார். பொதுவாக கிரிக்கெட் போன்ற விளையாட்டுக்களை பற்றி எதுவும் பேசாத இவர் நேற்று மேக்ஸ்வெல் குறித்து ட்வீட் வெளியிட்டதும் அது வைரல் ஆனது. அதுவும் சரியாக ராஜஸ்தான் மற்றும் பெங்களூரு அணிகள் மோதிய போட்டி முடிந்தவுடன் இவர் வெளியிட்டுள்ளதால் ரசிகர்கள் மத்தியில் அது பேசுபொருள் ஆனது.

கடந்த சில IPL தொடர்களாக பெரிதாக எதுவும் ஆடவில்லை என்றாலும் இந்த முறை மேக்ஸ்வெலை 14.25 கோடி ரூபாய் கொடுத்து ஏலம் எடுத்தது பெங்களூரு அணி. தற்போது மிகவும் சிறப்பாக மேக்ஸ்வெல் பெங்களூர் அணிக்காக விளையாடி வருகிறார். இதுவரை 4 அரை சதங்கள் அடித்துள்ளார். முழுக்க முழுக்க விராட் கோலி மற்றும் ஏபி டிவிலியர்ஸ் சார்ந்திருக்கும் பெங்களூரு அணி தற்போது மேக்ஸ்வெலின் வருகையால் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. பந்து வீச்சிலும் அவர் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். நேற்று நடந்த ஆட்டத்தில் அற்புதமாக அரைசதம் கடந்து பெங்களூரு அணியை வெற்றிபெற வைத்தார் மேக்ஸ்வெல்.

கிரிக்கெட் ரசிகர்கள் மேக்ஸ்வெலை கொண்டாடிக் கொண்டிருந்த அதே சமயத்தில் எலான் மஸ்க், மேக்ஸ்வெல் மிகப்பெரிய வீரர் என்று பொருள்படும் ட்வீட் ஒன்றை வெளியிட்டார். எலான் மஸ்க் குறிப்பிட்டது பிரபல இயற்பியலாளர் ஜேம்ஸ் கிளார்க் மாக்ஸ்வெல் ஆகும். ஆனால் அவர் முழுப் பெயரையும் குறிப்பிடாமல் வெறும் மேக்ஸ்வெல் என்று குறிப்பிட்டதால் இணையவாசிகள் அவர் கிரிக்கெட் பற்றி பேசுகிறாரே என்று நினைத்து அவரது ட்வீட்டை அதிகமாக ரீட்வீட் செய்ய ஆரம்பித்தனர்.

சாதாரண ரசிகர்கள் என்றுமில்லாமல் ஆஸ்திரேலிய நாட்டின் பிரபல பத்திரிகையாளரான அமண்டா பெய்லி ஆம் நாங்களும் பெங்களூரு அணியின் ஆட்டத்தை பார்த்தோம் என்று கேலியாக அவருக்கு பதில் கூறியுள்ளார். மேக்ஸ்வெலின் வருகை பெங்களூரு அணிக்கு மிகப்பெரிய புது சக்தியை கொடுத்துள்ளது.