என் அரைசதம் வேண்டாம் நீ ரன் அடி; விராட் டூ டிகே; வீடியோ இணைப்பு!

0
5103
Viratkohli

தென் ஆப்பிரிக்கா அணி மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் மற்றும் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் என இரண்டு தொடர்களில் விளையாட இந்தியா வந்துள்ளது.

இதில் முதலில் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடக்கிறது. இந்தத் தொடரின் முதல் ஆட்டம் கேரள மாநிலத்தில் திருவனந்தபுரம் மைதானத்தில் நடக்க, அந்தப் போட்டியில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்று தொடரில் முன்னிலை வகித்தது.

இன்று தொடரின் இரண்டாம் போட்டி அசாம் மாநிலம் கவுகாத்தி நகரில் நடந்து வருகிறது. இந்த போட்டியில் முதலில் டாசில் வென்ற தென் ஆப்பிரிக்க கேப்டன் பந்துவீச்சை தேர்வு செய்தார். இந்திய துவக்க ஆட்டக்காரர்கள் கே எல் ராகுல் 55, ரோகித் சர்மா 43 ரன்கள் எடுத்து வெளியேறினார்கள்.

அடுத்து விராட் கோலி சூர்யகுமார் யாதவ் ஜோடி இணைந்து 102 ரன்கள் குவித்தது. சூரியகுமார் யாதவ் 22 பந்துகளில் 61 ரன்கள் எடுத்து வெளியேறினார். அவருடன் இணைந்து ஆரம்பத்தில் பொறுமையாக விளையாடிய விராட் கோலி பின்னர் அதிரடியில் ஈடுபட்டார். 19 ஓவர்கள் முடிவில் விராட்கோலி 28 பந்துகளில் 49 ரன்களை 7 பவுண்டரி மற்றும் ஒரு சிக்சருடன் அடித்திருந்தார்.

இந்த நிலையில் கடைசி ஓவரை சந்தித்த தினேஷ் கார்த்திக் அந்த ஓவரில் ஒரு இரண்டு ரன், ஒரு பவுண்டரி, 2 சிக்சர்கள் அடித்தார். இந்தச் சமயத்தில் அவர் விராட் கோலி இடம் அரைசதம் அடிக்க கேட்டபொழுது விராட்கோலி அதையெல்லாம் பொருட்படுத்தாது, நீ போய் ரன் அடி என்று அவரிடம் கூறிவிட்டு சென்றுவிட்டார். தற்போது இந்த காணொளி இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

மூன்று ஆண்டுகள் சதம் அடிக்காமல் இருந்து வந்த விராட் கோலி, ஆசிய கோப்பை தொடரில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக சதம் அடித்த பின் அவரது பழைய அட்டகாசமான ஆட்டம் மீண்டும் திரும்பி வந்திருக்கிறது. அதை ஆஸ்திரேலியாவுடனான கடைசி போட்டியில் பார்த்தோம். தற்பொழுது தென்ஆப்பிரிக்க அணியுடனான இந்த போட்டியிலும் அவர் திரும்ப வந்திருக்கிறார். விராட் கோலியின் இந்த சிறந்த நிலை டி20 உலக கோப்பையில் இந்திய அணிக்கு பெரிய நம்பிக்கையாக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.