ஜெயிச்சிட்டீங்க ஆனா பொய் சொல்ல வேண்டாம் ; இங்கிலாந்து கேப்டன் காட்டமான கருத்து!

0
2139
Heather knight

இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் மூத்த வேகப்பந்துவீச்சாளர் ஜூலன் கோஸ்வாமியின் கடைசி சர்வதேச போட்டியான இங்கிலாந்துக்கு எதிராக லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த போட்டியில், இந்திய அணி வீராங்கனை செய்த ரன்அவுட் பெரிய சர்ச்சையாகி இருக்கிறது.

இந்திய வீராங்கனை தீப்தி சர்மா பந்து வீசும் பொழுது, இங்கிலாந்து வீராங்கனை சார்லி டீன் கிரீசை விட்டு வெளியே சென்றதால், தீப்தி சர்மாவால் ரன் அவுட் செய்யப்பட்டார். இப்படியான இந்த ரன் அவுட் ஆட்ட உத்வேகத்தை பாதிக்கும் என்று கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. அதே சமயத்தில் இது சரிதான் இதை கிரிக்கெட் விதிகள் அனுமதிக்கிறது என்கின்ற ஆதரவு கருத்துக்களும் பெரிய அளவில் முன்வைக்கப்பட்டன.

மேலும் இந்த விஷயத்தில் தலையிட்ட எம்சிசி ” நேற்று ஒரு பரபரப்பான போட்டி அசாதாரணமாக முடிந்திருக்கிறது. ஆனால் அதில் விதிகள் எதுவும் மீறப்படவில்லை. அந்த போட்டி மிகச் சரியாகவே நடத்தப்பட்டது. அதில் தேவையில்லாத எதையும் கருதக்கூடாது. பந்து வீச்சாளர் பந்து வீசி முடிக்கும்வரை, இந்த முனையில் இருக்கும் பேட்ஸ்மேன் கிரீஸில் இருக்கத்தான் வேண்டும். இல்லையென்றால் ரன்அவுட் செய்யப்படுவது நடக்கும் ” என்று கூறி பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைத்து இருந்தது.

இந்த நிலையில் இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி இன்று நாடு திரும்பியது. இந்த ரன் அவுட் செய்த தீப்தி சர்மா பத்திரிகையாளர்களிடம் “இங்கிலாந்து வீராங்கனை அதிக முறை வெளியே சென்று கொண்டே இருந்தார். இது சம்பந்தமாக நாங்கள் நடுவரிடம் புகார் செய்திருந்தோம். ஆனாலும் அவர் தொடர்ந்து அப்படியே வெளியே சென்று கொண்டு இருந்தார். இதனால் எங்களுக்கு வேறு வழி தெரியவில்லை. அதனால் விதிகளுக்கு உட்பட்டு வழிகாட்டுதல்படி நாங்கள் இதைச் செய்தோம் ” என்று கூறியிருந்தார்.

தற்போது தீப்தி சர்மாவின் இந்த கருத்தை மறுத்து இங்கிலாந்து பெண்கள் கிரிக்கெட் அணியின் கேப்டன் ஹீதர் நைட் ட்வீட் செய்துள்ளார். அதில் அவர் ” ஆட்டம் முடிந்து விட்டது. இந்த ஆட்டத்தில் வெல்லவும் தொடரை கைப்பற்றவும் இந்திய அணி தகுதியானது. எச்சரிக்கை எதுவும் கொடுக்கப்படவில்லை. அப்படிக் கொடுக்க வேண்டிய அவசியமும் அவர்களுக்கு இல்லை. ஆனால் அப்படி எந்த எச்சரிக்கையும் கொடுக்கப்படவில்லை ” என்று கூறியிருக்கிறார்.

மேலும் தொடர்ந்து கருத்துக்களைத் தெரிவித்த அவர் ” இந்த ரன் அவுட் சர்ச்சையானதால், எச்சரிக்கை செய்ததாக பொய் சொல்லி இதை நியாயப்படுத்த வேண்டும் என்று இந்திய அணியினர் நினைக்கக்கூடாது ” என்று காட்டமாகத் தெரிவித்து இருக்கிறார். இந்தப் பிரச்சனை இந்த மூன்று நாட்களாக சமூகவலைதளத்தில் பெரிய கொந்தளிப்பாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது!