டபுள் செஞ்சுரி அடித்த அன்னைக்கு நைட், என்னோட அப்பா என்கிட்ட சொன்னது இதுதான் – இஷான் கிஷன் பேட்டி!

0
585

இஷான் கிஷன் இரட்டை சதம் அடித்த அன்று இரவு தனது தந்தை என்ன கூறினார் என்பதை பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.

வங்கதேசம் அணியுடன் நடைபெற்ற மூன்றாவது ஒருநாள் போட்டியில் ரோகித் சர்மாவின் இடத்திற்கு பதிலாக உள்ளே வந்த இஷான் கிஷன் அபாரமாக விளையாடி இரட்டை சதத்தை அடித்தார்.

இரட்டை சதம் அடிக்கும் நான்காவது இந்திய வீரர் என்ற பெருமைக்கும் சொந்தக்காரர் ஆகினார். அத்துடன் இல்லாமல் அதிவேகமாக இரட்டை சதம் அடித்த வீரர் மற்றும் இரட்டை சதம் அடித்த மிகவும் இளம் வீரர் என்கிற பல சாதனைகளுக்கு சொந்தக்காரர் ஆகினார்.

அவ்வப்போது உள்ளே வருவதும் வெளியே போவதுமாக இருந்த அவருக்கு தற்போது நிரந்தர இடம் கொடுப்பதற்கு இந்திய அணி நிர்வாகம் திட்டமிட்டு வருவதாகவும் தகவல்கள் வருகிறது. இப்படி எண்ணற்ற பல சாதனைகளை கிடைத்த ஒரே வாய்ப்பை பயன்படுத்திக்கொண்டு நிகழ்த்தி காட்டிய இஷான் கிஷன், தற்போது ரஞ்சிக்கோப்பை தொடரில் ஜார்கண்ட் அணிக்கு விளையாடி வருகிறார்.

இந்தாண்டு ரஞ்சிக்கோப்பை முதல் போட்டியில் சதம் அடித்தார் இஷான் கிஷன். தொடர்ச்சியாக சிறந்த பார்மில் இருந்து வரும் அவர் தனது சமீபத்திய, இரட்டை சதம் அடித்த அன்று இரவு தனது தந்தை என்ன அறிவுரை கூறினார் என்பதையும் மனம் திறந்து பேசி இருக்கிறார். இது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

“நான் எனக்கு நடக்கும் பெரும்பாலானவற்றை எனது தந்தையிடம் கூறி விடுவேன். இரட்டை சதம் அடித்த அன்று இரவும் மிகவும் மகிழ்ச்சியுடன் எனது தந்தைக்கு அழைத்து பேசினேன். ஆனால் குறைந்தபட்ச பாராட்டை மட்டுமே வெளிப்படுத்திய அவர், ‘இன்றைய போட்டியில் நன்றாக விளையாடினாய். இது இத்துடன் போகட்டும். அடுத்த போட்டியில் மீண்டும் பூஜ்ஜியத்தில் இருந்து தான் ஆரம்பிக்க போகிறாய். ஆகையால் அதை மட்டும் மனதில் வைத்துக் கொண்டு ஒவ்வொரு போட்டியிலும் களமிறங்க வேண்டும். அப்பொழுதுதான் நீ நினைத்த இடத்திற்கு செல்ல முடியும்.’ என்றார். ஒரு நிமிடம் எனக்கு என்ன சொல்வது என்று தெரியாமல் உறைந்து போய் நின்றேன். மிகுந்த மகிழ்ச்சியில் இருந்த நான் அவர் சொன்னவுடன் புரிந்து கொண்டேன். என் வாழ்வில் கிடைத்த மிகப்பெரிய அறிவுரை அது.” என்றார்.