இவரை விட்டால் உங்களுக்கு வேறு வழியே இல்லை ; இர்பான் பதான் சுட்டிக்காட்டல்!

0
145
Irfan pathan

இந்திய அணி நடப்பு 15வது ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இருந்து ஏறக்குறைய இறுதிப்போட்டி வாய்ப்பில் இருந்து வெளியேறி இருக்கிறது. சூப்பர் 4 சுற்றில் பாகிஸ்தான், இலங்கை என அடுத்தடுத்து தோல்விகளைச் சந்தித்து இந்திய அணி இந்த நிலைமைக்கு வந்திருக்கிறது!

ஆசியக் கோப்பைக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்ட பொழுது அதில் எழுந்த மிகப் பெரிய ஒரு விவாதம் முகமது சமி ஏன் அணியில் தேர்வு செய்யப்படவில்லை என்று தான். காரணம் அணியில் அனுபவம் மற்றும் திறமையான வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்பிரித் பும்ரா காயத்தால் இல்லை. இந்தச் சமயத்தில் மிகச்சிறந்த பௌலிங் பார்மில் உள்ள முகமது சமி ஏன் தேர்வு செய்யப்படவில்லை என்பது பலரது கேள்வியாக இருந்தது.

- Advertisement -

முகமது சமி இதுவரை 17 சர்வதேச டி20 போட்டிகளில் மட்டுமே இந்தியாவுக்காக விளையாடியிருக்கிறார். இதில் அவர் 18 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார். ஆனால் அவர் ஒரு ஓவருக்கு 9.54 ரன்களை விட்டுக் தருவது கவலைக்குரிய ஒரு விஷயமாக இருக்கிறது. ஆனால் இவரது பந்துவீச்சு டெஸ்ட் போட்டியிலும் ஒருநாள் போட்டிகளிலும் மிகச் சிறப்பாக இருக்கிறது. அதனால் இவர் அந்த கிரிக்கெட் வடிவங்களில் இந்திய அணிகளில் தொடரவே செய்கிறார்.

கடந்த ஆண்டு டி20 உலக கோப்பையில் முகமது சமி பந்துவீச்சு மிகவும் மோசமாக இருந்தது என்பது உண்மைதான். ஆனால் இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் அவர் மொத்தம் 16 ஆட்டங்களில் 20 விக்கெட்டுகளை ஒரு ஓவருக்கு 8 ரன்கள் என்கிற வீதம் கொடுத்து எடுத்திருந்தார். புதிய பந்தில் அவரது பந்துவீச்சு மிகவும் மிரட்டலாக இருந்தது. தற்போது ஆசியக் கோப்பை நடக்கும் யுஏஇ ஆடுகளங்கள் மற்றும் அடுத்து 20 உலகக் கோப்பை நடக்கும் ஆஸ்திரேலிய ஆடுகளங்களில் முகமது சமி சிறப்பாக செயல்பட முடியும் என்று நம்பப்படுகிறது.

நிலைமை இப்படி இருக்க, ஜஸ்பிரித் பும்ராவும் காயத்தால் அணியில் இல்லாமல் போக, அனுபவமும் திறமையும் இருக்கின்ற முகமது சமி இந்திய அணியில் தேர்வு செய்யப்படாமல் போனது விவாதத்தைக் கிளப்பியது. இதற்கு ஏற்றார் போல் இந்திய அணியும் ஒரு வேகப்பந்து வீச்சாளரைக் குறைவாக எடுத்துக் கொண்டு போய், அதில் ஒருவர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, அது இந்திய அணிக்கு பின்னடைவாக அமைந்தது, இந்திய அணி ஆசிய கோப்பையின் இறுதிப் போட்டிக்கு முன்னேற முடியாமல் போயிருப்பது இன்னும் விவாதங்களை சூடாக்கி இருக்கிறது.

- Advertisement -

தற்போது இது குறித்து இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டர் இர்பான் பதான் தனது கருத்தை கூறியிருக்கிறார். இதுபற்றி அவர் கூறும்போது ” நீங்கள் தேர்ந்தெடுத்த அணியில் ஆறாவது பந்து வீச்சாளரை பயன்படுத்தவில்லை. மேலும் பந்து வீசிய பந்து வீச்சாளர்கள் இடமிருந்து எதிர்பார்த்ததை பெறமுடியவில்லை. இப்போது உலகக்கோப்பைக்கு இந்தச் சூழ்நிலையில் உதவி செய்யக்கூடிய வகையில் ஒரு பந்துவீச்சாளர் வருவதற்கு வாய்ப்புகள் உருவாகி உள்ளது. இந்த இடத்திற்கு இந்திய அணி ஒரு வீரரை தேடினால் அது முகமது சமியாகத்தான் இருக்க முடியும். அவரை விட சிறந்த முறையில் புதிய பந்தில் வீச தற்போது ஆளில்லை” என்று கூறியிருக்கிறார்.

மேலும் தொடர்ந்து பேசிய அவர் “நாம் தேர்ந்தெடுக்க நிறைய வேகப்பந்து வீச்சாளர்கள் நம்மிடம் இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் இளம் வீரர்கள் மற்றும் அனுபவம் இல்லாதவர்கள். நீங்கள் அனுபவத்தையும் பார்மையும் பார்த்தால் முகமது சமிதான் முன்னால் இருக்கிறார்” என்று தனது கருத்தை முன்வைத்திருக்கிறார்.