37 வயதில் தினேஷ் கார்த்திக் அதிரடி அரை சதம் ; தோனியின் சாதனையை முறியடிப்பு

0
450
Dinesh Karthik and Hardik Pandya

தென் ஆப்பிரிக்க அணி ஐந்து டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுவதற்காக இந்தியாவிற்குச் சுற்றுப்பயணம் செய்துள்ளது. இந்தத் தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் தோற்றிருந்த இந்திய அணி, மூன்றாவது ஆட்டத்தில் ஜெயித்து, தொடரில் 1-2 என பின்தங்கி இருந்தது.

இந்த நிலையில் தொடரின் நான்காவது போட்டி இன்று ராஜ்கோட் மைதானத்தில் துவங்கியது. தொடர்ந்து நான்காவது முறையாக டாஸை வென்ற தென் ஆப்பிரிக்க கேப்டன் டெம்பா பவுமா பந்துவீச்சை தேர்வு செய்தார். தென் ஆப்பிரிக்க அணியில் ரீசா ஹென்ட்ரிக்ஸ், ககிசோ ரபடா, வெய்ன் பர்னல் நீக்கப்பட்டு, எய்டன் மார்க்ரம், யான்சென், லுங்கி நிகிடி சேர்க்கப்பட்டிருந்தார்கள் இந்திய அணியில் எந்த மாற்றங்களும் செய்யப்படவில்லை.

இதன்படி இந்திய இன்னிங்ஸை பேட்டிங்கில் துவங்க வந்தவர்களில் ருதுராஜ் லுங்கி நிகிடியின் இரண்டாவது ஓவரிலேயே வெளியேறினார், அடுத்து வந்த ஸ்ரேயாஷ் ஐயரும் உடனே யான்சென் ஓவரிலும், இசான் கிசான் ஆன்ட்ரிச் நோர்க்யா ஓவரிலும் அடுத்தடுத்து வெளியேற இந்திய அணி நெருக்கடியில் விழுந்தது.

இந்த நிலையில் கேப்டன் ரிஷாப் பண்ட்டோடு ஹர்திக் பாண்ட்யா இணைந்து ஒரு சிறிய பார்ட்னர்ஷிப்பை அமைத்தார். ஆரம்பத்தில் இருந்தே தடுமாறி வந்த ரிஷாப் பண்ட் கேசவ் மகராஜின் ஓவரில் 17 ரன்களில் வழக்கம்போல் அடிக்கப்போய் ஆட்டமிழந்து வெளியேறினார்.

ஆனால் இதற்குப் பிறகு ஹர்திக் பாண்ட்யாவோடு தினேஷ் கார்த்திக் இணைந்த பிறகு ஆட்டத்தின் மொத்தப் போக்கும் மாறியது. தினேஷ் கார்த்திக் ஐ.பி.எல் தொடரில் ஆடிய தனது பினிசிங் ரோல் அதிரடியை இந்த ஆட்டத்தில் இறக்கினார். ஒருமுனையில் ஹர்திக் பாண்ட்யாவும் பவுண்டரிகள் ஆட ஸ்கோர் மளமளவென உயர்ந்தது.

தினேஷ் கார்த்திக் ஒருபுறம் ஆன்ரிச் நோர்க்யா, கேசவ் மகராஜ், டிவைன் ப்ரட்டோரியஸ், லுங்கி நிகிடி என வரிசையாக எல்லா பந்துவீச்சாளர்களையும் விட்டுவைக்காமல் நொறுக்கினார். இடையில் ஹர்திக் பாண்ட்யா மூன்று சிக்ஸர், மூன்று பவுன்டரிகளோடு 31 பந்துகளில் 45 ரன்கள் அடித்து வெளியேறினார். இவர்கள் இருவரும் சேர்ந்து 65 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தார்கள். அடுத்து தினேஷ்கார்த்திக் டிவைன் ப்ரட்டோரியசின் ஆட்டத்தின் கடைசி ஓவரின் முதல் பந்தில் சிக்ஸர் அடித்து, தனது சர்வதேச டி20 அரைசதத்தை ஒன்பது பவுன்டரிகள், இரண்டு சிக்ஸர்களோடு 26 பந்தில் அடித்தார். அடுத்த பந்தில் சிக்ஸர் முயற்சியில் தினேஷ்கார்த்திக் 55 ரன்களோடு வெளியேற, இந்திய அணி இருபது ஓவர்களின் முடிவில் 169 ரன்களை சேர்த்தது!

தினேஷ் கார்த்திக் அடித்த இந்த அரைசத 55 ரன்கள்தான் அவரது அதிகபட்ச ஸ்கோராகும். இதற்கு முன்பு வெஸ்ட் இன்டீஸ் அணிக்கு எதிராக 48 ரன்கள் அடித்திருந்தார். இது மட்டுமல்லாமல் இந்த அரைசதத்தின் மூலம், அதிக வயதில் இந்திய அணிக்காக டி20 போட்டிகளில் அரைசதமடித்த வீரர் என்ற சிறப்பையும் பெற்றிருக்கிறார். தற்போது தினேஷ் கார்த்திக்கின் வயது 37 வருடம், 16 நாட்கள் ஆகும். இதற்கு முன்பு மகேந்திர சிங் தோனி தனது வயதில் 36 வருடம் 229 நாளில் அரைசதம் அடித்திருந்தார். இந்தியா தென் ஆப்பிரிக்கா அணியுடன் விளையாடிய முதல் சர்வதேச டி20 போட்டியில் ஆட்டநாயகன் விருது வாங்கியவர் தினேஷ் கார்த்திக் என்பது குறிப்பிடத்தக்கது!