இந்திய அணியில் நான் மீண்டும் தேர்வானதிற்கு இவர்கள் தான் மிக முக்கியக் காரணம் – தினேஷ் கார்த்திக் நெகிழ்ச்சி

0
924
Dinesh Karthik RCB

இன்றைய தேதியில் பேட்டிங்கில் உலகின் சிறந்த பினிசர் தினேஷ் கார்த்திக்காகத்தான் இருக்க முடியும். அவர் பந்துகளை முன் கூட்டியே கணிப்பதும், பீல்டிங் வியூகத்திற்குத் தகுந்தவாறு, கிரிஸில் நிற்பதும் அபாரமானதாய் இருக்கிறது. பந்தின் லைன் அன்ட் லென்த்தை இவர் கணிக்கும் வேகத்தைப் பார்த்து, கிரிக்கெட்டின் கடவுள் என்று கொண்டாடப்படும் சச்சினே வியக்கிறார். அந்தளவிற்கு இவரது பேட்டிங் சிறப்பாக கூர்மை அடைந்து இருக்கிறது.

தினேஷ் கார்த்திக் முதன் முதலில் 2004ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி நான்காவது டெஸ்ட் போட்டியில், பார்த்திவ் படேலின் மோசமான கீப்பிங்கால் விக்கெட் கீப்பராக அறிமுகம் ஆனார். அந்த ஆட்டத்தில் இவரிடமிருந்து ரன்கன் வராவிட்டாலும், பந்து தாறுமாறாய் திரும்பிய, சீராக எகிறாமல் வந்த ஆடுகளத்தில், இவரது விக்கெட் கீப்பிங் வெகுவாகப் பாராட்டப்பட்டது. 2004ஆம் ஆண்டு தொடங்கிய இவரது சர்வதேச கிரிக்கெட் பயணம் அவ்வளவு சீராக இருந்ததில்லை. அணிக்கு உள்ளே வெளியே என்றுதான் இருந்தார். 2019 இங்கிலாந்தில் நடந்த ஒருநாள் போட்டி உலகக்கோப்பையில் நியூசிலாந்து உடன் அரையிறுதியில் இந்தியா தோற்ற போட்டிதான் இவரது கடைசி சர்வதேச போட்டியாகவும் இருந்தது.

இந்தச் சூழலில் ஐ.பி.எல் தொடரில் 2018ஆம் ஆண்டு 7.4 கோடிக்கு, கொல்கத்தா அணிக்காக வாங்கப்பட்ட இவரை, கேப்டனாகவும் ஆக்கியது கொல்கத்தா அணி நிர்வாகம். ஆனால் சில வீரர்கள் இவரது திட்டத்தோடு சேர்ந்து வராமல், கொல்கத்தா அணி சறுக்க ஆரம்பித்தது. பின்பு இவர் பலிகடா ஆக்கப்பட்டு கேப்டன் பதவியும் பறிக்கப்பட்டது. எதிர்பார்த்தது போலவே இந்த ஆண்டு அவரைத் தக்கவைக்காமல் கொல்கத்தா அணி வெளியேவும் விட்டது.

நடப்பு ஆண்டு ஐ.பி.எல் தொடருக்காக இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் நடந்த மெகா ஏலத்தில் சென்னை அணியோடு மோதி 5.50 கோடிக்கு பெங்களூர் அணி வாங்கியது. பெங்களூர் அணிக்கு வந்த பிறகு இவரது ஆட்டம் பீஸ்ட் லெவலில் மாறிப்போனது என்றே கூறலாம். இந்த ஆண்டு ஐ.பி.எல் சீசனில் ப்ளேஆப்ஸ் சுற்றுக்குத் தகுதி பெற்றிருக்கும் பெங்களூர் அணிக்கு முழுமையாக 14 லீக் ஆட்டங்களில் ஆடியுள்ள இவர், பினிசராய் 287 ரன்களை, 57.40 சராசரியில், 191.33 ஸ்ட்ரைக் ரேட்டில் அடித்து நொறுக்கி இருக்கிறார். இதில் ஒன்பது முறை ஆட்டமிழக்காமல் இருந்து இருக்கிறார் என்பதுதான், இவர் பினிசராய் எந்தளவிற்குக் கடைசிவரை களத்தில் இருந்து அணியை வெற்றி பெற வைத்திருக்கிறார் என்பதைக் காட்டுகிறது.

இவரின் இப்படியான மிகச்சிறப்பான ஆட்ட தரத்தால், இந்தியாவிற்கு செளத் ஆப்பிரிக்கா சுற்றுப்பயணம் செய்யும், ஐந்து போட்டிகள் கொண்ட இருபது ஓவர் கிரிக்கெட் தொடரில் தினேஷ் கார்த்திற்கு 2019ஆம் ஆண்டிற்கு பிறகு மீண்டும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இதற்குப் பின்னால் மனம் தளராமல் அவர் நிறைய உழைத்து இருக்கிறார். இதுக்குறித்துப் பேசியுள்ள அவர் “இந்திய அணியில் மீண்டும் எனக்கு வாய்ப்பு கிடைத்ததிற்கு ஆர்.சி.பி அணி, சஞ்சய் பாங்கர், மைக் ஹெசன் ஆகியோருக்கு பெரிய பங்கிருக்கிறது. அவர்கள் எனக்குத் தெளிவைத் தந்தார்கள். என்னைத் தேர்ந்தெடுத்ததிற்கும், எனக்கு பினிசர் ரோல் தந்ததிற்கும் நான் இவர்களுக்கு நிறைய கடன் பட்டிருக்கிறேன் என்று தெரிந்ததுதான். அவர்கள் என்னை நம்புகிறார்கள்” என்று நன்றி தெரிவித்திருக்கிறார்!