2021 டி20 உலகக் கோப்பை தொடரின் சிறந்த அணியை தேர்ந்தெடுத்துள்ள தினேஷ் கார்த்திக்

0
108
Dinesh Karthik

2021ஆம் ஆண்டிற்கான நடப்பு உலகக் கோப்பை டி20 தொடரில் இந்தியாவில் ஒரு புறம் வெளியேற, மறுபுறம் பாகிஸ்தான், நியூசிலாந்து, இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் அரையிறுதிச் சுற்றுக்கு சென்றுள்ளன. இந்திய அணி நிச்சயமாக அரையிறுதிச் சுற்றுக்கு தகுதி அடையும் என்று அனைத்து இந்தியர்களும் நம்பிக்கையுடன் காத்துக் கொண்டிருந்த நிலையில், அனைவரின் நம்பிக்கையும் கனவாக முடிந்துள்ளது.

நடப்பு உலகக் கோப்பை டி20 தொடரில் சிறப்பாக விளையாடியுள்ள 11 வீரர்களைத் தேர்ந்தெடுத்து, 2021ஆம் ஆண்டிற்கான உலக கோப்பை டி20 தொடரின் சிறந்த அணியை இந்திய வீரர் தினேஷ் கார்த்திக் தற்போது வெளியிட்டுள்ளார். தினேஷ் கார்த்திக் தேர்ந்தெடுத்த அணியில் இடம்பெற்ற 11 வீரர்களை பற்றி தற்போது பார்ப்போம்.

டாப் ஆர்டர் வரிசையில் பாபர் அசாம், ஜோஸ் பட்லர் மற்றும் கே எல் ராகுல்

நடப்பு உலகக் கோப்பை டி20 தொடரில் ஐந்து இன்னிங்ஸ்களில் 264 ரன்கள் குவித்து, அதிக ரன்கள் குவித்த வீரர்கள் பட்டியலில் பாகிஸ்தான் வீரர் பாபர் அசாம் முதலிடத்தில் உள்ளார். மறுபக்கம் இங்கிலாந்து வீரர் ஜோஸ் பட்லர் 5 இன்னிங்ஸ்களில் 240 ரன்கள் குவித்து அப்பட்டியலில் 2வது இடத்தில் உள்ளார். இவர்கள் இருவரையும் ஓபனிங் வீரர்களாக தினேஷ் கார்த்திக் தேர்வு செய்திருக்கிறார்.

இவர்களைத் தொடர்ந்து ஒன் டவுன் இடத்தில் இந்திய வீரர் கேஎல் ராகுலை தேர்வு செய்துள்ளார். கேஎல் ராகுல் 5 இன்னிங்ஸ்களில் 194 ரன்களை இந்திய அணிக்காக குவித்திருக்கிறார்.

மிடில் ஆர்டர் வரிசையில் சரித் அசலங்கா, வேன் டெர் டுஸ்சென், ஷகிப் அல் ஹசன் மற்றும் வனிண்டு ஹசரங்கா

மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் வரிசையில் இலங்கை வீரர் அசலங்கா 4வது இடத்தில் இருக்கிறார். அவர் 6 இன்னிங்சில் 134 ரன்கள் குவித்திருக்கிறார். ஐந்தாவது இடத்தில் தென்னாப்பிரிக்க வீரர் வேன் டெர் டுஸ்சென் இடம் பெற்றிருக்கிறார். ஐந்து இன்னிங்ஸ்களில் இவர் 177 ரன்கள்
குவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இவர்களைத் தொடர்ந்து ஆறாவது மற்றும் ஏழாவது இடத்தில் பங்களாதேஷ் வீரர் ஷகிப் அல் ஹசன் மற்றும் இலங்கை வீரர் ஹசரங்கா இருக்கின்றனர்.

ஹசரங்கா 8 இன்னிங்க்ஸ்களில் 16 விக்கெட்டுகளை கைப்பற்றி நடப்பு உலகக் கோப்பை டி20 தொடரில் அதிக விக்கெட்டுகளை கைப்பற்றிய வீரர்கள் பட்டியலில் முதல் இடத்தில் இருக்கிறார். அதேசமயம் பேட்டிங்கிலும் ஹசரங்கா 5 இன்னிங்ஸ்களில் 119 ரன்களை குவித்துள்ளார். மறுபக்கம் ஷகிப் ஆறு இன்னிங்ஸ்களில் 11 விக்கெட்டுகளை அதிக விக்கெட்டுகளை கைப்பற்றிய வீரர்கள் பட்டியலில் இரண்டாவது இடத்தில் இடம் பெற்றிருக்கிறார்.

பந்து வீச்சாளராக ஜஸ்பிரித் பும்ரா, ஆடம் ஜாம்பா, டிரென்ட் போல்ட் மற்றும் ஷஹீன் அப்ரிடி

பந்து வீச்சாளர்கள் வரிசையில் 5 இன்னிங்சில் 7 விக்கெட்டுகளை கைப்பற்றிய இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்ப்ரீத் பும்ராவின் பெயர் இடம் பெற்றிருக்கிறது. பும்ராவை தொடர்ந்து நியூசிலாந்து வீரர் டிரெண்ட் போல்ட் இடம் பெற்றிருக்கிறார். டிரென்ட் போல்ட் ஐந்து இன்னிங்சில் 11 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.

மற்ற இரண்டு பந்து வீச்சாளர்களாக பாகிஸ்தானைச் சேர்ந்த ஷஹீன் அப்ரிடி மற்றும் ஆஸ்திரேலியா சேர்ந்த ஆடம் ஜாம்பா இடம்பெற்றுள்ளனர். பாகிஸ்தான் அணிக்கு மிக அற்புதமாக பந்து வீசி வரும் ஷஹீன் அப்ரிடி ஐந்து இன்னிங்சில் 6 விக்கெட்டுகளையும், அதேசமயம் ஆஸ்திரேலியா அணிக்கு மிக சிறப்பாக பந்து வீசி வரும் ஆடம் ஜாம்பா ஐந்து இன்னிங்ஸ்களில் 11 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.