மீண்டும் இந்திய அணிக்காக விளையாடுவது குறித்து தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் கூறியுள்ளது இது தான்

0
10300
Dinesh Karthik

2004 முதல் இந்திய அணியில் விளையாடி வரும் தினேஷ் கார்த்திக் அவ்வளவாக சர்வதேச போட்டிகளில் விளையாடவில்லை. காலம் சில சமயம் நமக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்காது. தினேஷ் கார்த்திக் விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேனாக மிகப்பெரிய அளவில் வலம் வருவார் என்று அனைவரும் ஆரம்பத்தில் நினைத்தனர். ஆனால் எம்எஸ் தோனி வந்த பின்னர் வேறு எந்த ஒரு விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனுக்கும் வாய்ப்பு கிடைக்காமல் போனது. அதில் தினேஷ் கார்த்திக்கும் ஒருவர்.

இருப்பினும் அவ்வப்போது தனக்கு கிடைக்கும் வாய்ப்புகளை தினேஷ் கார்த்திக் சரியாக பயன்படுத்திக் கொண்டார் என்றே நாம் சொல்லலாம். டெஸ்ட் போட்டிகளில் அவர் அவ்வளவு சிறப்பாக விளையாடியதில்லை. ஆனால் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் அவர் சிறப்பாக விளையாடி இருக்கிறார். 94 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 1752 ரன்கள் மற்றும் 32 டி20 போட்டிகளில் விளையாடி 399 ரன்கள் இதுவரை குவித்திருக்கிறார்.

குறிப்பாக 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற நிதஹாஸ் டிராபி தொடரில் இறுதிப் போட்டியில் பங்களாதேஷ் அணிக்கு எதிராக ஒற்றை ஆளாக நின்று இந்திய அணியை வெற்றிபெற வைத்தார். அந்த ஒரு போட்டியை எப்பொழுதும் இந்திய ரசிகர்கள் மறந்துவிட மாட்டார்கள்.

அதேபோன்று ஐபிஎல் தொடரிலும் கடந்த சில ஆண்டுகளில் கொல்கத்தா அணிக்காக அவர் சிறப்பாகவே விளையாடி வருகிறார். அப்படி இருக்க கடந்த ஆண்டு நடந்த முடிந்த உலக கோப்பை டி20 தொடரில் அவரது பெயர் இடம்பெறவில்லை. டி20 போட்டிகளில் என்றும் மிக சிறப்பாக விளையாடக் கூடிய ஆற்றல் கொண்டவராக தினேஷ் கார்த்திக் விளங்கி வருகிறார் என்று சொன்னால் அது மிகையாகாது.

மீண்டும் இந்திய அணியில் இடம் பெறுவேன்

சமீபத்தில் பேசியுள்ள தினேஷ் கார்த்திக் தான் மீண்டும் இந்திய அணியில் இடம் பெற்று விளையாடுவேன் என்று நம்பிக்கையுடன் கூறியுள்ளார். “இந்திய அணிக்கு விளையாட வேண்டும் என்கிற தீ என்னுள் இன்னும் பிரகாசமாக எரிந்து கொண்டுதான் இருக்கிறது. என்னுடைய ஒரே குறிக்கோளும் தற்பொழுது அதுதான். குறிப்பாக டி20 போட்டிகளில் மீண்டும் இந்திய அணியில் இடம் பெறுவேன்”, என்று நம்பிக்கையுடன் தினேஷ் கார்த்திக் கூறியுள்ளார்.

32 சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடி 399 ரன்களும் 213 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி 4046 ரன்களும் அவர் குவித்துள்ளார். டி20 போட்டிகளில் அவரது ஸ்ட்ரைக் ரேட் 143.53 மற்றும் ஐபிஎல் தொடரில் அவரது ஸ்ட்ரைக் ரேட் 129.72 என்பது குறிப்பிடத்தக்கது.

ஐபிஎல் தொடரை பொருத்தவரையில் மிகப்பெரிய அனுபவம் உள்ள அவர் அடுத்த மாதம் நடைபெற இருக்கின்ற மெகா ஏலத்தில் அதிக தொகைக்கு ஏலம் போவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் அவரது ஆட்டம் எப்படி இருக்கிறது என்பதைப் பொறுத்து, இந்த ஆண்டு இறுதியில் நடைபெற இருக்கின்ற ஐசிசி உலகக் கோப்பை டி20 தொடரில் அவருக்கு விளையாடும் வாய்ப்பு கிடைக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.