“நான் தோனிகிட்ட இதெல்லாம் கத்துக்கிட்டேன்; நான் எப்போ அவர்கிட்ட போனாலும்..” – தமிழக வீரர் ஜெகதீசன் பேட்டி!

0
534

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இருக்கும் பொழுது தோனி இதெல்லாம் சொல்லிக் கொடுப்பார் என்று சமீபத்திய பேட்டியில் பேசி உள்ளார் ஜெகதீசன்.

தமிழகத்தைச் சேர்ந்த என் ஜெகதீசனுக்கு இந்த வருட விஜய் ஹசாரே தொடர் வாழ்வில் மறக்க முடியாத ஒன்றாக அமைந்திருக்கிறது. யாருமே இதுவரை நிகழ்த்திராத, தொடர்ச்சியாக ஐந்து சதங்களை அடித்தார்.

- Advertisement -

எட்டு போட்டிகளில் 830 ரன்கள் அடித்திருக்கிறார். இதுவும் ஒரு சீசனில் தனிப்பட்ட ஒருவரால் அடிக்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோர் ஆகும். இதற்கு முன்னர் விராட் கோலி 589 ரன்கள் அடித்திருந்தது அதிகபட்சமாக இருந்தது. இவரது ஸ்ட்ரைக் ரேட் 125.37 ஆகும். இதுவும் பலரது கவனத்தையும் பெற்றுள்ளது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வந்த இவரை, கடந்த மாதம் அணி நிர்வாகம் ரிலீஸ் செய்தது. நல்ல ஸ்ட்ரைக் ரேட் மற்றும் சிறந்த பார்மில் இருக்கும் இவரை எடுப்பதற்கு சில அணிகள் போட்டி போடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் தனது சமீபத்திய பேட்டியில் ஜெகதீசன் சில அனுபவங்களை பற்றி பகிர்ந்துள்ளார். அதில் தோனியிடம் கற்றுக் கொண்டதையும் பற்றி பேசியுள்ளார். ஜெகதீசன் பேசியதாவது:

- Advertisement -

“குறிப்பிட்ட சூழலுக்கு எப்படி ரியாக்ட் செய்ய வேண்டும் என்பதுதான் பேட்டிங். அதேபோல் அணியில் நமக்கு கொடுத்த ரோலை சரியாக செய்ய வேண்டும் என்பதும் அவசியம். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இருக்கும் பொழுது, எனக்கு பேட்டிங் செய்ய வாய்ப்பு கிடைத்தால் என்னுடைய ரோல் இதுதான் என்று தோனி தெளிவுபடுத்தி விடுவார். அதையும் மீறி ஏதேனும் சந்தேகம் இருந்தால் நான் அவரிடம் நேரடியாக சென்று கேட்பேன் மிகவும் தெளிவாக எடுத்துச் சொல்வார்.

என்னுடைய பேட்டிங் டெக்னிக்கில் சிறு சிறு மாற்றங்கள் செய்ய வேண்டுமா? அல்லது எந்த பந்தை எப்படி எதிர்கொண்ட வேண்டும்? என்று கேட்டாலும் அதற்கு தெளிவாக பதில் கூறுவார். பேட்டிங் மட்டுமல்லாது கீப்பிங்கிலும் பல முறை அவரிடம் அறிவுரை கேட்டிருக்கிறேன்.

கீப்பிங் செய்யும் பொழுது, கால் எந்த பொசிஷனில் இருந்தால், எப்படி உதவியாக இருக்கும்? எப்படி ரியாக்ட் செய்ய வேண்டும்? என்று துல்லியமாக எடுத்து கூறுவார். அதிக அளவில் விளையாடுவதற்கு வாய்ப்பு கிடைக்கவில்லை என்றாலும் ஒவ்வொரு முறை பயிற்சி செய்யும் பொழுதும் தோனியுடன் பேசிய அனுபவங்கள் எனக்கு கிரிக்கெட் வாழ்க்கைக்கு மிகப்பெரிய உதவியாக தற்போது வரை இருந்து வருகிறது.” என்றார்.