சஹலுடன் விவாகரத்தா? எனக்கு இவ்ளோ பெரிய பிரச்சினை இருக்கு; கொஞ்சம் நிம்மதியா விடுங்க – தனஸ்ரீ உருக்கம்!

0
26

சஹல் மற்றும் தனஸ்ரீ இருவரும் பிரிகிறார்களா? என்ற வதந்திகளுக்கு தனது இன்ஸ்டாகிராம் போஸ்ட் மூலம் பதில் அளித்திருக்கிறார் தனஸ்ரீ.

இந்திய அணியின் முன்னணி சுழற்பந்துவீச்சாளர் யுசுவேந்திர சகல், கடந்த 2020 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் தனஸ்ரீ திருமணம் செய்தார். தனஸ்ரீ, யூடியுபர் மற்றும் நடன கலைஞர் ஆவார். இருவரும் இணைந்து நடனமாடி, அதன் வீடியோக்களை சமூக வலைதளங்களில் பதிவிடுவதை அவ்வபோது வாடிக்கையாக கொண்டிருந்தனர். ஒன்றாக பல இடங்களுக்கு பயணமும் செய்தும் வருகின்றனர்.

இந்த நிலையில் கடந்த வாரம் தனஸ்ரீ தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், தனது பெயருக்கு அருகில் வைத்திருந்த சகல் எனும் அடையாளப் பெயரை நீக்கினார். அதற்கு முன்னதாக சகல் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் “புதிய வாழ்க்கை வரவுள்ளது” என்றும் பதிவிட்டு இருந்தார். இவை இரண்டையும் வைத்து சகல் மற்றும் தனஸ்ரீ இருவரும் பிரிகிறார்கள் என்று சமூக வலைதளங்களில் மட்டுமல்லாது, பல செய்தி ஊடகங்களும் கணிப்புகளை தெரிவித்திருந்தன.

இதற்கு உடனடியாக முற்றுப்புள்ளி வைப்பதற்கு, சகல் தன்னுடைய இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் “கனிவான வேண்டுகோள், எங்களது உறவுக்குள் எந்தவித வதந்திகளும் வருவதற்கு நாங்கள் விரும்பவில்லை. விரைவில் இதற்கு முற்றுப்புள்ளி வையுங்கள்.” என்று குறிப்பிட்டிருந்தார். சகல் இதற்கு பதிலளித்து இருந்தாலும், தனஸ்ரீ இதற்கு எவ்வித பதிலும் கொடுக்காமல் இருந்ததால் இது வதந்தி அல்ல; உண்மையாக கூட இருக்கலாம் என்று பலரும் நம்பி வந்தனர்.

இறுதியாக, தனது சமீபத்திய இன்ஸ்டாகிராம் போஸ்ட் மூலம் இவை அனைத்தும் வதந்தி தான் என்று உறுதி செய்திருக்கிறார் தனஸ்ரீ. அவர் போஸ்டில், “நான் நடனமாடிக் கொண்டிருக்கும் பொழுது எனது காலில் காயம் ஏற்பட்டிருக்கிறது. அதற்காக நான் அறுவை சிகிச்சை மேற்கொண்டேன். ஆகையால் கடந்த இரண்டு வார காலம் என்னால் எதிலும் கவனம் செலுத்த முடியவில்லை. எனது படுக்கை அறையில் இருந்து எழுந்து சாப்பிட செல்கிறேன். மீண்டும் படுக்கை அறைக்கு வந்து விடுகிறேன். இது மட்டும்தான் எனது வேலையாக இருக்கிறது. மருத்துவர்களும் என்னை எதுவும் செய்யக்கூடாது என அறிவுறுத்தினர்.”

“எனக்கு பக்க பலமாக எனது கணவர் மற்றும் குடும்பத்தினர் இருக்கின்றனர் விரைவாக குணமடைந்து மீண்டும் நடனம் ஆடுவதற்கு ஆவலோடு எனது மனதை ஏங்குகிறது”

“இந்த தருணத்தில் தான் நான் உங்களது ஆதரவை எதிர்பார்க்கிறேன். தற்போது வெறுக்கத்தக்க விதமாக வதந்திகள் பரவிக் கொண்டிருக்கிறது. இதை பார்க்கையில் இன்னும் அதிகமாக என் மனதை பாதிக்கிறது.”

“நான் எனது உழைப்பின் மூலம் இந்த இடத்திற்கு வந்திருக்கிறேன். சில வதந்திகள் மீண்டும் என்னை கீழே தள்ளுவதற்கு ஒருபோதும் நான் விட்டுக்கொடுக்க மாட்டேன். விரைவில் குணமடைந்து வந்து, எனது பணியை தொடர்வேன். ஒருபுறம் இது எனக்கு காயத்தை கொடுத்தாலும் மற்றொரு புறம் இதுபோன்ற நிகழ்வுகள் என்னை பலமாக மாற்றுகிறது.” என்று உருக்கமாக பதிவிட்டிருந்தார்.