“கண்டிப்பா இந்த ரெண்டு டீம்தான் பைனல்ல விளையாடும்” – ரிக்கி பாண்டிங் உறுதியான கணிப்பு!

0
65699
Ricky Ponting

எட்டாவது டி20 உலகக்கோப்பை தொடர் தற்பொழுது ஆஸ்திரேலியாவில் மிகச் சிறப்பாக நடந்து கொண்டிருக்கிறது. வருகின்ற ஞாயிற்றுக்கிழமை உடன் முதல் சுற்று ஆட்டங்கள் முடிந்து அதற்கடுத்து அரை இறுதி ஆட்டங்கள் நடக்க இருக்கிறது!

தற்பொழுது குழு 1ல் அரையிறுதிக்கான இரண்டு இடங்களுக்கு நியூசிலாந்து ஆஸ்திரேலியா இங்கிலாந்து ஆகிய மூன்று அணிகள் போட்டியிடுகின்றன.
குழு 2ல் இந்தியா தென்னாபிரிக்கா பாகிஸ்தான் ஆகிய மூன்று அணிகள் போட்டியிடுகின்றன!

இந்த உலகக்கோப்பை தொடரின் முதல் அரையிறுதி ஆட்டம் நவம்பர் 9ஆம் தேதி சிட்னி மைதானத்தில் நடக்கிறது. இரண்டாவது அரையிறுதி போட்டி பத்தாம் தேதி அடிலைட் மைதானத்தில் நடக்கிறது.

இதற்கு அடுத்து நவம்பர் 13ஆம் தேதி இறுதிப்போட்டி மெல்போன் மைதானத்தில், இந்திய நேரப்படி மதியம் 1:30 மணிக்கு நடக்கிறது. இந்த இறுதிப் போட்டியில் எந்த அணிகள் விளையாட அதிக வாய்ப்பு இருக்கிறது என்று தனது கணிப்பை ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் வீரரும் கேப்டனுமான ரிக்கி பாண்டிங் தெரிவித்திருக்கிறார்.

இதுகுறித்து ரிக்கி பாண்டிங் கூறும் பொழுது ” உண்மையைச் சொல்வதென்றால் மெல்போன் மைதானத்தில் யார் இறுதிப் போட்டி விளையாடுவார்கள் என்று யாருக்குத் தெரியும். ஆஸ்திரேலியா அணி தனது குழுவில் இருந்து அரையிறுதிக்கு முன்னேறும் என்று நான் நம்புகிறேன். தென் ஆப்பிரிக்கா அணி தற்போது பலமான அணியாக இருக்கிறது. ஆனால் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியா இந்திய அணிகள் தான் மோதும் ” என்று கூறியிருக்கிறார்.

மேலும் தொடர்ந்து பேசிய அவர் ” நான் கேப்டனாக இருந்த பொழுது எல்லா பெரிய போட்டிகளிலும், எங்கள் வீரர்களிடம் ஆட்டத்தில் கிடைக்கும் அந்த தருணங்களை தவற விடாதீர்கள். அதை தழுவி கொள்ளுங்கள். இது இன்னொரு ஆட்டம் கிடையாது. இது மிக முக்கியமான பெரிய போட்டி என்றுதான் கூறுவேன். பெரிய போட்டி என்று நாமும் உணர வேண்டும் மற்றவர்களுக்கும் உணர்த்த வேண்டும் அதற்கு தகுந்தார் போல் விளையாட வேண்டும் ” என்று கூறியுள்ளார்.