ஸ்காட்லாந்தை வீழ்த்தியது அயர்லாந்து; இந்தியக் குழு மரண குழுவாக மாறுகிறது?!

0
16606
T20iwc2022

ஆஸ்திரேலியாவில் நடந்து வரும் எட்டாவது டி20 உலகக் கோப்பைக்கான தகுதி சுற்று போட்டிகள் தற்போது நடந்து வருகிறது. எட்டு அணிகள் இரண்டு குழுக்களாக பிரிக்கப்பட்டு, இரண்டு குழுவிலும் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் நான்கு அணிகள், ஏற்கனவே நேரடியாக தகுதி பெற்ற எட்டு அணிகள் உடன் சேர்ந்து, மொத்தம் 12 அணிகள் இரு குழுக்களாக பிரிக்கப்பட்டு உலகக் கோப்பை தொடர் நடத்தப்பட இருக்கிறது!

இன்று தகுதி சுற்றுக்கான பி பிரிவில் இடம் பெற்றுள்ள ஸ்காட்லாந்து மற்றும் அயர்லாந்து அணிகள் மோதின. ஸ்காட்லாந்து அணி தகுதி சுற்றில் முதல் ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்தி இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த போட்டிக்கான டாஸ் வென்ற ஸ்காட்லாந்து முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

- Advertisement -

ஸ்காட்லாந்து அணியின் துவக்க ஆட்டக்காரர் ஜார்ஜ் முன்சி ஒரு ரன்னில் ஆட்டம் இழந்தாலும், மற்றொரு துவக்க ஆட்டக்காரர் மைக்கேல் ஜோன்ஸ் 55 பந்துகளில் 6 பவுண்டரி மற்றும் 5 சிக்சருடன் 86 ரன்கள் குவித்தார். கேப்டன் ரிச்சி பெரிங்டன் 27 பந்துகளில் 37 ரன்கள் எடுக்க 20 ஓவர்கள் முடிவில் ஸ்காட்லாந்து அணி 176 ரன்கள் குவித்தது.

இதற்கடுத்து களமிறங்கிய அயர்லாந்து அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியாக தான் இருந்தது. அந்த அணியின் நட்சத்திர வீரர்கள் பால் ஸ்டெர்லிங் மற்றும் கேப்டன் பால்போர்னி இருவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தார்கள். 9.3 ஓவர்களுக்கு 61 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து அயர்லாந்து நெருக்கடியில் சிக்கியது.

இந்த நிலையில் கேம்பர் மற்றும் டக்ரோல் ஜோடி சேர்ந்து அணியை மெல்லமெல்ல மீட்க ஆரம்பித்தார்கள். முதலில் மெதுவாக ஆட ஆரம்பித்த இவர்கள் அதற்கு அடுத்து கொஞ்சம் கொஞ்சமாக அதிரடியை காட்ட ஆரம்பித்தார்கள். சிறப்பாக விளையாடிய கேம்பர் அரைசதம் அடித்தார். அவருக்கு இன்னொரு முறையில் டக்ரோல் நல்ல ஒத்துழைப்பு கொடுத்தார். இருவரும் சேர்ந்து 116 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அணியை ஒரு ஓவர் மீதம் இருக்கும்போது வெல்ல வைத்தார்கள். கேம்பர் 69 ரன்கள், டக்ரோல் 39 ரன்கள் எடுத்து இறுதிவரை களத்தில் இருந்தார்கள். இந்த வெற்றியின் மூலம் ஜிம்பாப்வே அணியிடம் முதல் ஆட்டத்தில் தோல்வி கண்டு இருந்த அயர்லாந்து அணி அடுத்த சுற்றுக்கான வாய்ப்பில் நீடிக்கிறது.

- Advertisement -

தகுதி சுற்றுக்கான பி பிரிவில் முதலிடம் பிடிக்கும் அணி இந்திய அணி இடம்பெற்றுள்ள பிரதான சுற்றுக்கான டி பிரிவில் இடம்பெறும். இந்த வகையில் இந்த ஆட்டத்தில் ஸ்காட்லாந்து அணி வெற்றி பெற்று இருந்தால் பி பிரிவில் முதலிடத்தைப் பிடித்து இந்தியா இடம் பெற்று இருக்கும் குழுவுக்குள் வர அதிக வாய்ப்பு இருந்தது. தற்போது இந்த போட்டியில் ஸ்காட்லாந்து அணி தோல்வி அடைந்ததால், வெஸ்ட் இண்டீஸ் அணி அடுத்து ஜிம்பாப்வே மற்றும் அயர்லாந்து அணிகளுடன் வெற்றி பெற்று ரன் ரேட்டில் முதலிடம் பெற்றால், இந்தியாவின் குழுவில் நுழைய அதிக வாய்ப்பு உருவாகி இருக்கிறது.

அதே சமயத்தில் தகுதி சுற்றுக்கான ஏ பிரிவில் இரண்டாம் இடம் பிடிக்கும் அணி, இந்திய அணி இடம்பெற்றுள்ள பி பிரிவுக்கு வரும். தற்பொழுது தகுதி சுற்றுக்கான ஏ பிரிவில் இலங்கை அணி இரண்டாம் இடம் பிடிக்கக் கூடிய இடத்தில் இருக்கிறது.

இந்த வகையில் பார்த்தால் இந்திய அணி இடம் பெற்று இருக்கும் பிரதான சுற்றுக்கான பி பிரிவில், இந்தியா, பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா, இலங்கை, பங்களாதேஷ், வெஸ்ட் இண்டீஸ் ஆகிய சர்வதேச அனுபவம் மிக்க டெஸ்ட் அந்தஸ்து பெற்றுள்ள 6 அணிகள் இடம் பெறும். இதிலிருந்து இரண்டு அணிகள் மட்டுமே அரையிறுதிக்கு தகுதி பெறும் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே இந்தக் காரணத்தால் இந்திய அணி இடம் பெற்று இருக்கும் பி பிரிவு தற்போது மரண குழுவாக மாற அதிக வாய்ப்புள்ள குழுவாக இருக்கிறது!