தினேஷ் கார்த்திக்கா ? ரிஷப் பண்ட்டா ? டி20 உலகக் கோப்பைக்கு தேவையான வீரரை தேர்ந்தெடுத்துள்ள டேல் ஸ்டெய்ன்

0
73
Dinesh Karthik and Rishabh Pant

ஐ.பி.எல் தொடரில் மிகச்சிறப்பாகச் செயல்பட்டு இந்திய அணியில் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான டி20 தொடரில் வாய்ப்பை பெற்று மிகச்சிறப்பாக விளையாடி வருகிறார் தினேஷ் கார்த்திக். குறிப்பாக நேற்று நடந்த நான்காவது டி20 போட்டியில் இந்திய அணி 81-4 என நெருக்கடியில் இருந்த நேரத்தில் களமிறங்கி, 27 பந்துகளில் 55 ரன்களை குவித்து, அணி வெற்றி பெறுவதற்கு முக்கியக் காரணமாக இருந்து ஆட்டநாயகன் விருதை வென்றார்.

இந்த நிலையில் ஒரு மூத்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான தினேஷ் கார்த்திக்கும், இளைய விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேனான இஷான் கிஷனும் சிறப்பாகச் செயல்பட்டு வரும்வேளையில், தற்போது இந்திய அணிக்கு கேப்டனாக செயல்பட்டு வரும் விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேன் ரிஷாப் பண்ட்டின் பேட்டிங் படு சொதப்பலாகவே இந்தத் தொடரில் இருந்து வருகிறது. நடந்து முடிந்துள்ள நான்கு ஆட்டத்திலும் அவர் குறைந்த ரன்களில் வெளியேறுவதோடு, ஒரே மாதிரியான தவறுகளைச் செய்தே ஆட்டமிழப்பதுதான் கவலைக்குரியதாக இருக்கிறது.

கடந்த ஆண்டு யு.ஏ.இ-யில் நடந்த டி20 உலகக்கோப்பையில் இந்திய அணி முதல் சுற்றோடு தோற்று வெளியேறி இருந்ததால், இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ஆஸ்திரேலியாவில் நடக்க இருக்கும் டி20 உலகக்கோப்பைக்கான அணியைத் தேர்வு செய்வதில் மிகப்பெரிய நெருக்கடி இந்திய கிரிக்கெட் தேர்வாளர்களுக்கு உருவாகி இருக்கிறது. மேலும் ரிஷாப் பண்ட், இஷான் கிஷான், கே.எல்.ராகுல், தினேஷ் கார்த்திக் நால்வருமே விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேன் என்பதால், யார் சிறப்பாக பேட்டிங்கில் செயல்படுகிறார்களோ அவர்களையே தேர்வுசெய்ய வேண்டிய கட்டாயமும் உருவாகி இருக்கிறது.

இது குறித்துத் தென் ஆப்பிரிக்க அணியின் முன்னாள் வீரர், தலைசிறந்த வேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்டெயின் கூறும் பொழுது “ரிஷாப் பண்ட்க்கு இந்தத் தொடரில் நான்கு வாய்ப்புகள் கிடைத்தது. ஆனால் அவர் ஒரே தவறையே மீண்டும் மீண்டும் செய்கிறார். நல்ல வீரர்கள் செய்த தவறிலிருந்து பாடம் கற்றுக்கொண்டு, தவறைத் திருத்திக் கொள்வார்கள். ஆனால் ரிஷாப் தவறைத் திருந்திக் கொண்டதாகத் தெரியவில்லை. ஆனால் தினேஷ் கார்த்திக் ஒவ்வொரு முறையும் மீண்டு வந்துள்ளார். அவர் உலகத்தரமான ஒரு வீரர். நீங்கள் உலகக்கோப்பையை வெல்ல விரும்பினால் பார்மில் உள்ள ஒரு வீரரைத் தேர்வு செய்தால், அவர் உங்களுக்கு உலகக்கோப்பையை வென்று தருவார். மிகச்சிறப்பான பேட்டிங் பார்மில் இருக்கும் டி.கேவை தேர்ந்தெடுப்பதே சரியானது. அவர் இதே பார்மில் தொடந்து இருந்தால், உலகக்கோப்பைக்குச் செல்லும் விமானத்தில் முதல் பெயராக அவரது பெயர் எழுதப்பட்டிருக்கும்” என்று கூறியிருக்கிறார்.

மேலும் தொடர்ந்து பேசிய டேல் ஸ்டெயின் “டி.கே சிறந்த பார்மில் இருக்கிறார். அவர் மேலும் சிறப்பான நிலையை எட்டுபவரைப் போல் தெரிகிறார். அவர் விக்கெட் கீப்பராகவும் சிறப்பாக இருக்கிறார். பந்துவீச்சாளர்களின் மனநிலையைப் புரிந்துகொண்டு, ஸ்டம்பிற்கு பின்னால் இருந்து சிறப்பாக வழிநடத்துகிறார். பேட்டிங்கில் அவரது ஸ்வீப், ரிவர்ஸ் ஸ்வீப், ஸ்லாப்ஸ் ஆகிய ஷாட்ஸ்கள், பந்துவீச்சாளர் என்ன மாதிரி வீசப்போகிறார் என்பதைப் புரிந்துகொண்டு விளையாடுவதைக் காட்டுகிறது. முதல் பந்தில் இருந்தே அவர் பந்துவீச்சாளர்களை அழுத்தத்தில் வைக்கிறார். இதிலிருந்து பந்துவீச்சாளர்கள் மீள முடிவதில்லை” என்று தெரிவித்திருக்கிறார்!