விராட் கோலியின் அறிமுக டெஸ்ட் போட்டியில் விளையாடிய 11 வீரர்களின் தற்போதைய நிலை

0
715
Virat Kohli and Murali Vijay

இந்திய அணிக்காக 101 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 171 இன்னிங்ஸ்களில், 49.96 ரன் சராசரியோடு, 28 அரைசதங்கள், 27 சதங்களோடு 8043 ரன்களை அடித்திருக்கும் விராட்கோலி, இந்திய அணிக்காக டெஸ்ட் போட்டிகளில் அறிமுகமாக நாள் இன்று. இன்றோடு அவர் இந்திய டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமாகி 11 வருடங்கள் ஆகிறது!

11 வருடங்களுக்கு முன்பு 20.6.2011 ஆண்டு இதேநாளில் வெஸ்ட் இன்டீஸ் அணிக்கு எதிராக, சபீனா பார்க் கிங்ஸ்டன் மைதானம் ஜமைக்காவில் விராட்கோலியின் அறிமுக டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியில் அபினவ் முகுந்த், பிரவீன் குமார், விராட்கோலி மூவரும் அறிமுகம் ஆனார்கள். முதலில் டாஸில் வென்ற இந்திய அணி கேப்டன் மகேந்திர சிங் தோனி பேட்டிங்கை தேர்வு செய்தார். இந்தப் போட்டியில் இந்திய அணி முதலிரண்டு இன்னிங்ஸில் 246, 252 ரன்கள் எடுத்தது. வெஸ்ட் இன்டீஸ் அணி 173 மற்றும் 262 ரன்கள் எடுக்க, இந்திய அணி 63 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த ஆட்டத்தின் முழு விபரத்தையும், இந்த ஆட்டத்தில் விளையாடிய வீரர்கள் தற்போது என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என்றும் இந்நக் கட்டுரையில் பார்ப்போம்.

- Advertisement -
அபினவ் முகுந்த் – முரளி விஜய்

இந்த ஆட்டத்தில் துவக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கியவர்களில், அபினவ் முகுந்த் இரண்டு இன்னிங்சிலும் 11 மற்றும் 25 ரன்கள் அடித்தார். தற்போது அபினவ் முகுந்த் தொலைக்காட்சியில் கிரிக்கெட் வர்ணனையாளராக இருக்கிறார்.
மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் முரளி விஜய் முதல் இன்னிங்ஸில் 8 ரன்களும், இரண்டாம் இன்னிங்ஸில் டக் அவுட்டும் ஆனார். இவர் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெறவில்லை என்றாலும், எந்தவிதமான கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாடுவதும் இல்லை.

ராகுல் டிராவிட் – வி.வி.எஸ்.லக்ஷ்மண்

ராகுல் டிராவிட் முதல் இன்னிங்ஸில் நாற்பது ரன்களையும், இரண்டாவது இன்னிங்சில் அட்டகாசமான 112 ரன் என்று சதத்தை அடித்து, இந்திய அணி வெல்ல முக்கியக் காரணமாக இருந்து ஆட்டநாயகன் விருதை வென்றார். டிராவிட் தற்போது இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக இருக்கிறார்.

லட்சுமணன் முதல் இன்னிங்ஸில் 12 ரன்களையும் இரண்டாவது இன்னிங்ஸில் டக் அவுட் ஆனார். லட்சுமணன் தற்போது இந்திய கிரிக்கெட் அகாடமியின் தலைவராக இருக்கிறார்.

- Advertisement -
விராட் கோலி – சுரேஷ் ரெய்னா

அறிமுக வீரராகக் களமிறங்கிய விராட் கோலி முதல் இன்னிங்ஸில் 4 ரன்களையும், இரண்டாவது இன்னிங்ஸில் 15 ரன்களையும் எடுத்து ஆட்டமிழந்தார். தற்போது வரை இந்திய அணிக்காக எல்லா வடிவ கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாடி வருகிறார்.

சரேஷ் ரெய்னா முதல் இன்னிங்ஸில் மிகச்சிறப்பாக விளையாடி 82 ரன்களை அடித்து இந்திய அணியைக் கரைசேர்த்தார். இரண்டாவது இன்னிங்ஸில் 27 ரன்களை எடுத்தார். தற்போது இவர் தொலைக்காட்சியில் கிரிக்கெட் வர்ணனையாளராகச் செயல்பட்டு வருகிறார்.

எம்.எஸ்.தோனி – ஹர்பஜன் சிங்

விக்கெட் கீப்பர் மற்றும் கேப்டனான தோனி இந்த ஆட்டத்தில் முதல் இன்னிங்ஸில் டக் ஆனார், இரண்டாவது இன்னிங்ஸில் 16 ரன்கள் அடித்தார். தற்போது ஐ.பி.எல் தொடரில் சென்னை அணிக்குக் கேப்டனாக இருக்கிறார்.

ஹர்பஜன் சிங் இந்த ஆட்டத்தில் தோனி முதல் இன்னிங்ஸில் டக்அவுட் ஆக, சுரேஷ் ரெய்னவோடு இணைந்து மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி பேட்டிங்கில் 70 ரன்களை குவித்து அசத்தினார். இரண்டாவது இன்னிங்ஸில் 5 ரன்கள் எடுத்தார். பந்துவீச்சில் முதலிரண்டு இன்னிங்ஸ்களி இரண்டு மற்றும் ஒன்று என மொத்தம் மூன்று விக்கெட்டுகள் வீழ்த்தினார். தற்போது இவர் தொலைக்காட்சியில் கிரிக்கெட் வர்ணனையாளராகச் செயல்பட்டு வருகிறார்.

பிரவீன் குமார் – அமித் மிஸ்ரா

இந்த ஆட்டத்தில் அறிமுகமான வேகப்பந்து வீச்சாளர் பிரவீன் குமார் முதல் இன்னிங்ஸில், இரண்டாம் இன்னிங்ஸில் தலா மூன்று விக்கெட்டுகளை சிறப்பான பந்துவீச்சால் வீழ்த்தினார். கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றுவிட்ட இவரைக் குறித்த செய்திகள் பெரிதாய் எதுவுமில்லை.

அமித் மிஸ்ரா இந்த ஆட்டத்தில் பேட்டிங்கில் இரண்டாம் இன்னிங்ஸில் 28 ரன்களையும், பந்துவீச்சில் இரண்டு இன்னிங்ஸிலும் தலா இரண்டு விக்கெட்டுகளையும் கைப்பற்றினார். இந்த ஆண்டு ஐ.பி.எல் ஏலத்தில் கலந்து கொண்ட அமித் மிஷ்ரா விலைபோகவில்லை.

இஷாந்த் சர்மா

தற்போது இந்திய அணிக்காக நூறு டெஸ்ட் போட்டிகளை கடந்து, இந்திய அணிக்காக டெஸ்ட் போட்டிகளில் மட்டும் பங்கேற்று வரும் இஷாந்த் சர்மா இந்த ஆட்டத்தில், இரண்டு இன்னிங்ஸிலும் தலா மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றினார்!