2011 ஐ.பி.எலில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தக்க வைத்துக் கொண்ட நான்கு வீரர்களின் தற்போதைய நிலை

0
254
Murali Vijay and Suresh Raina

2011 ஐ.பி.எலுக்குப் பிறகு அடுத்த ஆண்டு மீண்டும் 10 அணிகள் இத்தொடரில் பங்கேற்கவுள்ளன. அகமதாபாத் மற்றும் லக்னோ என 2 புதிய அணிகள் இணைந்துள்ளன. 2022 இந்தியன் பிரீமியர் லீக்கில் ஒவ்வொரு அணியும் அதிகபட்சம் 4 வீரர்களை தக்கவைத்துக் கொள்ளலாம். அதைத் தொடர்ந்து இரு தினங்கள் மெகா ஏலம் நடைபெறும். இதே விதிமுறைகள் தான், 2011 ஐ.பி.எலிலும் பின்பற்றப்பட்டன. 2010 தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, அதற்கு அடுத்த ஆண்டு ஏலத்திற்கு முன் 4 நட்சத்திர வீரர்களை தக்க வைத்துக் கொண்டது. அவர்களின் தற்போதைய நிலையைப் பற்றி இக்கட்டுரையில் பின்வருமாறு காண்போம்.

எம்.எஸ்.தோனி

சி.எஸ்.கே தக்கவைத்துக் கொண்ட வீரர்கள் பட்டியலில் முதலிடத்தை கேப்டன் தோனி பிடித்தார். 2011 ஐ.பி.எல் ஏலத்திற்கு முன்னர், 18 லட்ச அமெரிக்க டாலருக்கு ரீட்டெயின் செய்யப்பட்டார். 2008 முதல் தற்போது வரை அயராது பணியாற்றி 4 கோப்பைகளை பெற்றுக் கொடுத்துள்ளார். இவர் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்று விட்டார். சமீபத்தில், இந்திய அணியின் மென்டாராக திகழ்ந்தார். அடுத்த ஆண்டு ஐ.பி.எலுக்கும் எம்.எஸ்.தோனி அணியில் நீடிப்பார் என்று செய்திகள் வெளியாகியுள்ளன.

சுரேஷ் ரெய்னா

தல தோனிக்குப் பிறகு தக்க வைக்கப்பட்டவர் சின்ன தல சுரேஷ் ரெய்னா. 2011ல் அவரின் சம்பளம் 13 லட்ச அமெரிக்க டாலர் ஆகும். மிஸ்டர் ஐ.பி.எல் எனப் போற்றப்படும் ரெய்னா, ஒவ்வொரு வருடமும் குறைத்தது 300 – 400 ரன்கள் விளாசி அணியின் முக்கிய அங்கமாக விளங்குவார். சோகம் என்னவென்றால், 2021 ஐ.பி.எல் தொடரில் அச்சாதனை முடிவுக்கு வந்தது. எம்.எஸ்.தோனி ஓய்வை அறிவித்த அதே நேரத்தில் இவரும் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து விலகிக் கொண்டார். அடுத்து நடக்கவிருக்கும் மெகா சென்னை நிர்வாகம், ரெய்னாவைத் தக்க வைத்துக் கொள்வது கேள்விக் குறி தான்.

முரளி விஜய்

சென்னை சூப்பர் அதிரடி தொடக்க வீரர் முரளி விஜய், மூன்றாவது நபராக தக்கவைத்துக் கொள்ளப்பட்டார். சிறப்பாக செயல்பட்டு சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகம் ஆகும் அளவிற்கு முன்னேறினார். 2010 ஐசிசி டி20 உலகக்கோப்பையில் முதல் முறையாக இந்திய அணிக்கு களமிறங்கினார். 2018 ஐ.பி.எலில் மீண்டும் இவரை சென்னை அணி வாங்கியது. பெரிதாக சோபிக்காத காரணத்தால் இவரை 2021 ஏலத்தில் விடுவித்தது. அதில் அவரை யாரும் வாங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஆல்பி மார்க்கல்

சி.எஸ்.கே நிர்வாகம் தக்கவைத்துக் கொண்ட ஒரே வெளிநாட்டு வீரர் இவரே. 2010ல் கோப்பை வென்ற கையோடு மத்யூ ஹைடன் ஓய்வு பெற்றுவிட்டார். அன்ட்ரூ பிலின்டாப்பும் அச்சமயத்தில் இல்லாததால், தென்னாபிரிக்காவைச் சேர்ந்த அதிரடி ஆல்ரவுண்டர் ஆல்பி மார்க்கல்லை அணியில் வைத்துக் கொள்ள முடிவு செய்து 5 லட்சம் அமெரிக்க டாலர்கள் வழங்கினர். இவர் அனைத்து வித கிரிக்கெட்டிலும் இருந்து ஓய்வு பெற்றுவிட்டார். நடந்து முடிந்த டி20 உலகக்கோப்பையில் நமீபியா அணியின் உதவி பயிற்சியாளராக செயல்பட்டார்.