2009 பெங்களூர் அணியின் இறுதிப் போட்டியில் ஆடிய 11 வீரர்களின் தற்போதைய நிலை

0
1746
Manish Pandey and Robin Uthappa RCB

ஐபிஎல் தொடரை பொறுத்தவரையில் மிக முக்கியமான அணிகளாக பார்க்கப்படும் ஒரு சில அணிகளில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் ஒன்று. அந்த அணியில் எப்பொழுதும் நட்சத்திர வீரர்கள் இருந்து கொண்டே இருப்பார்கள்.
2009, 2011 மற்றும் 2016 என மூன்று முறை இறுதிப்போட்டிக்கு அந்த அணி முன்னேறியுள்ளது. மூன்று முறை இறுதிப் போட்டிக்கு முன்னேறிய அந்த அணி இதுவரை ஒரு முறை கூட கோப்பையை வென்றது இல்லை.

2008 ஆம் ஆண்டு நடந்த முதல் ஐபிஎல் தொடரில் அந்த அணி லீக் தொடர் முடிவில், ஏழாவது இடத்தில் தனது தொடரை முடித்துக் கொண்டது. அதற்கு அடுத்த ஆண்டு நிச்சயமாக அந்த அணி அரை இறுதி ஆட்டத்திற்கு கூட முன்னேறாது என்று அனைவரும் நினைத்த வேளையில், இறுதிப்போட்டி வரை முன்னேறி அனைவரையும் அந்த அணி அந்த அணி ஆச்சரியப்படுத்தியது.

- Advertisement -

2009ஆம் ஆண்டு ஆர்சிபி அணியை கெவின் பீட்டர்சன் முதலில் தலைமை தாங்கினார். ஆறு போட்டிகளின் முடிவில் 4 தோல்வியுடன் ஆர்சிபி அணி புள்ளி பட்டியலில் தடுமாறியது. பின்னர் அனில் கும்ப்ளே கேப்டனாக அறிவிக்கப்பட்டார். அவரது தலைமையில் அடுத்தடுத்து வெற்றிகளை பெற்று அரையிறுதி சுற்றுக்கு முன்னேறி இறுதிப்போட்டி வரை சென்றது. இறுதிப்போட்டியில் அந்த அணி டெக்கான் சார்ஜர்ஸ் அணியிடம் 6 ரன்கள் வித்தியாசத்தில் கோப்பையை வெல்லும் வாய்ப்பை இழந்தது குறிப்பிடத்தக்கது.

2009ஆம் ஆண்டு நடந்த ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியில் இடம் பெற்று விளையாடிய வீரர்கள் தற்போது என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என்று இந்த கட்டுரையில் பார்ப்போம்.

1.ஜாக்ஸ் காலிஸ்

தென் ஆப்பிரிக்க அணியின் ஒப்பற்ற ஆல்ரவுண்டர் வீரரான இவர் 2008 முதல் 2010 ஆம் ஆண்டு வரை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியில் விளையாடினார். 2009ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் பெங்களூர் அணி சார்பில் காலிஸ் அதிக ரன்களை (361 ரன்கள்) குவித்தார். அந்த ஆண்டு பெங்களூரு அணி இறுதிவரை முன்னேறுவதற்கு இவருடைய பேட்டிங் மிகப் பெரிய அளவில் உதவியது.

- Advertisement -

ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணியில் விளையாடிய பின்னர் 2011 முதல் 2014 வரை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் இடம்பெற்று விளையாடினார். அதன் பின்னர் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்று கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக பதவி வகித்தார். ஐபிஎல் தொடரில் மட்டுமல்லாமல் 2019ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்கா அணிக்கு பேட்டிங் ஆலோசகராகவும் ஒரு ஆண்டுக்கு மேலாக இவர் பணியாற்றி இருக்கிறார். கடந்த ஆண்டு இறுதி முதல், இங்கிலாந்து அணியின் பேட்டிங் ஆலோசகராக அவர் தற்போது பணியாற்றி வருகிறார்.

2.மணிஷ் பாண்டே

2009ஆம் ஆண்டு மற்றும் 2010 ஆம் ஆண்டில் ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக மனிஷ் பாண்டே விளையாடினார். அதன் பின்னர் மூன்று ஆண்டுகள் (2011 – 2013)புனே அணிக்காக விளையாடினார். 2014ஆம் ஆண்டு முதல் 2017ஆம் ஆண்டு வரையில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் விளையாடி வந்தார்.

2018 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியில் விளையாடி வருகிறார். மணிஷ் பாண்டே மீண்டும் இந்திய அணியில் இடம் பெறுவாரா மாட்டாரா என்கிற கேள்வி ரசிகர்கள் மத்தியில் உள்ளது. தற்பொழுது உள்ள சூழ்நிலையில் அவருக்கான இடம் இந்திய அணியில் கிடைப்பது மிகவும் கடினம் என்பது தான் உண்மை.

3.ரோலோஃப் வான் டெர் மெரி

தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த ஆல்ரவுண்டர் வீரரான இவர் 2009 மற்றும் 2010 ஆம் ஆண்டில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியில் இவர் விளையாடினார். 2009ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டியில் பெங்களூர் அணி சார்பாக அதிக ரன்கள் குவித்த வீரர் இவர்தான்.அந்த போட்டியில் 21 பந்துகளில் 32 ரன்கள் குவித்தார்.

இரண்டு ஆண்டுகள் பெங்களூர் அணியில் விளையாடிய பின்னர், 2011 முதல் 2013 ஆம் ஆண்டு வரை டெல்லி டேர்டெவில்ஸ் அணியில் இடம் பெற்று விளையாடினார். தென்னாப்பிரிக்கா அணிக்காக விளையாடி வந்த இவர், 2015ஆம் ஆண்டில் நெதர்லாந்து அணிக்காக விளையாடும் முடிவை எடுத்தார். அப்போதிலிருந்து இப்பொழுது வரை நெதர்லாந்து அணிக்காக சர்வதேச அளவில் மிகச் சிறப்பாக விளையாடி வருகிறார். கூடிய விரைவில் நடக்க இருக்கின்ற உலக கோப்பை டி20 தொடரில் நெதர்லாந்து அணிக்காக இவர் விளையாட உள்ளது குறிப்பிடத்தக்கது.

4.ராகுல் டிராவிட்

2008 முதல் 2010ஆம் ஆண்டு வரை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியில் ராகுல் டிராவிட் விளையாடினார். அதன் பின்னர் 2011 முதல் 2013 வரையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் சில ஆண்டுகள் விளையாடினார். கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்று, ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு பயிற்சியாளராகவும் பணியாற்றினார்.

ஐபிஎல் தொடரை கடந்து அண்டர் 19 மற்றும் இந்திய ஏ அணிகளுக்கு 2016 முதல் 2019 வரை தலைமை பயிற்சியாளராக செயல்பட்டார். அதன் பின்னர் பிசிசிஐ இவரை தேசிய கிரிக்கெட் அகடமியின் தலைவராக நியமித்தது. 2019 முதல் தற்போது வரை தேசிய கிரிக்கெட் அகடமியில் தலைவராக ராகுல் டிராவிட் பணியாற்றி வருகிறார்.

5.விராட் கோலி

2008ஆம் ஆண்டு முதல் தற்போது வரை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியில் விராட் கோலி தொடர்ந்து விளையாடி வருகிறார். அந்த அணிக்கு வீரராக வந்து பின்னர் தற்பொழுது கேப்டனாக பெங்களூரு அணியை தலைமை தாங்கி வருகிறார். இவரது தலைமையில் நடப்பு ஐபிஎல் தொடரில், ஆர்சிபி அணி பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி அடைந்துள்ளது.

இந்திய அணிக்கு மூன்று வகை கிரிக்கெட் பார்மெட்டிலும் விராட் கோலி ஒரு வீரனாகவும் ஒரு கேப்டனாகவும் பல சாதனைகளை நிகழ்த்தி காட்டியுள்ளார். குறிப்பாக டெஸ்ட் போட்டிகளில் இவரது தலைமையில் இந்திய அணி மறக்கமுடியாத வரலாற்று வெற்றிகளை பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

6.ராஸ் டைலர்

ஐபிஎல் தொடரில் 2008 முதல் 2010 வரை ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணியில் ராஸ் டைலர் விளையாடினார். அதன் பின்னர் 2011ம் ஆண்டு ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிலும், 2012 மற்றும் 2014 ஆம் ஆண்டுகளில் டெல்லி டேர்டெவில்ஸ் அணியிலும், 2013ம் ஆண்டு புனே வாரியர்ஸ் இந்திய அணியிலும் இவர் விளையாடி இருக்கிறார்.

ஐபிஎல் தொடரில் அதற்குப் பின்னர் இவர் விளையாடவில்லை என்றாலும் நியூசிலாந்து அணிக்காக இன்னும் இவர் விளையாடிக் கொண்டிருக்கிறார். நியூசிலாந்து அணிக்காக டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் அதிக ரன்கள் குவித்த வீரர் என்கிற பெருமையை இவர் தக்க வைத்திருக்கிறார். அது மட்டுமின்றி சர்வதேச அளவில் ஒரு நாள், டெஸ்ட் மற்றும் டி20 போட்டி என மூன்று வகை பார்மேட்டிலும் 100 போட்டிகளில் விளையாடிய ஒரே கிரிக்கெட் வீரர் என்கிற பெருமையும் இவர் தக்க வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

7.மார்க் பவுச்சர்

2009 மற்றும் 2010ஆம் ஆண்டில் ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணியில் மார்க் பவுச்சர் விளையாடினார். அதன் பின்னர் 2011ம் ஆண்டு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் இடம் பெற்று விளையாடினார். விக்கெட் கீப்பிங்கில் குறிப்பாக டெஸ்ட் போட்டிகளில் எதிரணி பேட்ஸ்மேன்களை இவர் பலமுறை திணற வைத்திருக்கிறார். 532 கேட்சுகளையும் 555 ஸ்டம்பிங்கையும் இவர் தனது டெஸ்ட் கேரியரில் செய்துள்ளார்.

கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற இவர் டிசம்பர் மாதம் 2019ஆம் ஆண்டு முதல் தென் ஆப்பிரிக்க அணியின் தலைமை பயிற்சியாளராக செயல்பட்டு வருகிறார்.

8.ராபின் உத்தப்பா

ராபின் உத்தப்பா 2009 மற்றும் 2010 ஆம் ஆண்டில் ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணியில் அதற்கு முன்னர் 2008ஆம் ஆண்டு இவர் மும்பை இந்தியன்ஸ் அணியில் விளையாடினார். மும்பை மற்றும் பெங்களூரு அணிக்கு விளையாடிய பின்னர் 2011 முதல் 2013 ஆம் ஆண்டு வரை புனே அணிக்காகவும் விளையாடினார். அதன் பின்னர் 2014 முதல் 2019-ம் ஆண்டு வரையில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் விளையாடி வந்தார்.

2020 ஆம் ஆண்டு ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் விளையாடிய இவர் தற்பொழுது நடப்பு ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம் பெற்று விளையாடி வருகிறார். இரஞ்சி டிராபி தொடரில் சௌராஷ்ட்ரா அணிக்காக விளையாடிய இவர் 2019ஆம் ஆண்டு முதல் கேரளா அணிக்காக விளையாடி வருவது குறிப்பிடத்தக்கது.

9.பிரவீன் குமார்

2008 முதல் 2010 ஆம் ஆண்டு வரை ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணியில் வேகப்பந்து வீச்சாளராக பிரவீன்குமார் செயலாற்றி வந்தார். அதன் பின்னர் 2011 முதல் 2013-ம் ஆண்டுவரை பஞ்சாப் அணியிலும், 2014ம் ஆண்டு மும்பை அணியிலும், 2015ஆம் ஆண்டு ஐதராபாத் அணியில் விளையாடினார். இறுதியாக 2016ம் மற்றும் 2017ஆம் ஆண்டில் குஜராத்தில் விசாரணைக்காக இவர் விளையாடியது குறிப்பிடத்தக்கது.

2005 முதல் 2018 ஆம் ஆண்டு வரை உத்ரபிரதேஷ் அணிக்காக இரஞ்சி டிராபி தொடரில் விளையாடி வந்த இவர், தற்பொழுது அனைத்து வகை கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

10.வினய் குமார்

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக 2008 முதல் 2010 வரையிலும் அதன் பின்னர் 2012 மற்றும் 2013ஆம் ஆண்டில் இவர் விளையாடியிருக்கிறார். இடையில் ஒரு வருடம் (2011ஆம் ஆண்டு) கொச்சி அணிக்காக விளையாடினார். அதன் பின்னர் 2014ஆம் ஆண்டு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் விளையாடி,2015 முதல் 2017ஆம் ஆண்டு வரையில் மும்பை இந்தியன்ஸ் அணியில் விளையாடினார். கடைசியாக 2018 ஆம் ஆண்டு வினய் குமார் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் இடம்பெற்று விளையாடியது குறிப்பிடத்தக்கது.

கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற இவர் ரஞ்சி டிராபி தொடரில் தற்போது வரை விளையாடிக் கொண்டிருக்கிறார். 2004 முதல் 2019-ம் ஆண்டு வரை கர்நாடக அணியில் விளையாடிய இவர், 2019ஆம் ஆண்டு முதல் புதுச்சேரி அணிக்கு இடம் மாறி தற்பொழுது அங்கே விளையாடி வருவது குறிப்பிடதக்கது.

11.அனில் கும்ப்ளே

ஐபிஎல் தொடரில் 2008 முதல் 2010 வரை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியில் அனில் கும்ப்ளே விளையாடினார். குறிப்பாக 2009ஆம் ஆண்டு நடந்த ஐபிஎல் தொடரில் பெங்களூர் அணிக்காக அதிகபட்சமாக 21 விக்கெட்டுகளை கைப்பற்றினர். இறுதிப் போட்டியிலும் இவர் மட்டுமே அதிகபட்சமாக 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். ஐபிஎல் தொடரில் வீரராகவும், கேப்டனாகவும் விளையாடிய இவர் 2019ஆம் ஆண்டு முதல் பஞ்சாப் அணியின் தலைமை பயிற்சியாளராக செயல்பட்டு வருகிறார்.

ஐபிஎல் தொடரில் மட்டுமல்லாமல் இந்திய அணிக்காகவும் 2016ஆம் ஆண்டு (அந்த ஒரு வருடம் மட்டும்) தலைமை பயிற்சியாளராக இவர் செயலாற்றியது குறிப்பிடத்தக்கது.