ஐபிஎல் 2022 : சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் தோனி பதவி விலகல் ; புதியக் கேப்டன் அறிவிப்பு

0
75
MS Dhoni and Ravindra Jadeja CSK

ஐ.பி.எல் திருவிழா ஆரம்பிக்கும் முன்னே பரபரப்பு திருப்பங்கள் வர ஆரம்பித்துவிட்டது! இந்திய கேப்டன்களில் யாருக்கும் வாய்க்காத யோகம் விராட்கோலிக்கு உண்டென்று சொல்லப்படுவதுண்டு. காரணம், புதிய கேப்டன்களின் கீழ், பழைய கேப்டன்கள் அதிகம் ஆடி, அனுபவங்களைப் பகிர்ந்து, களத்தில் பெரிய உதவியாய் இருந்ததில்லை.

ஆனால் மகேந்திர சிங் தோனி ஒருநாள், இருபது ஓவர் போட்டிகளில் கேப்டன் பொறுப்பை விட்டு விலகிய பின்னர், அடுத்த சில ஆண்டுகள் விராட்கோலியின் தலைமையின் கீழ் ஆடி, களத்தில் அணியை வழிநடத்துவதில் விராட்கோலிக்கு பெரிய உதவியாய் இருந்திருக்கிறார். இதை விராட்கோலி மட்டுமல்லாது, சாஹல், குல்தீப் என பந்துவீச்சாளர்களும் கூறியிருந்தனர்!

இப்போது இதே பாணியில் சி.எஸ்.கே அணி கேப்டன் பொறுப்பிலிருந்தும் விலகி இருக்கிறார் மகேந்திர சிங் தோனி. சி.எஸ்.கே அணியின் புதிய கேப்டனாய் ரவீந்திர ஜடேஜா அறிவிக்கப்பட்டிருக்கிறார்!

இந்திய அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து விலக அப்போது சில அழுத்தங்கள் அவருக்கு இருந்தது. ஆனால் சி.எஸ்.கே அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து விலக அவருக்கு எந்த அழுத்தங்களும் யாராலும் இருந்திருக்காது என்பதுதான் உண்மை!

ஏனென்றால், தன்னைத் தக்க வைக்க வேண்டாம். ஏலத்தில் விட்டு எடுத்துக்கொள்ளுங்கள். இல்லையென்றால் ஓய்வு கூட பெற்றுவிடுகிறேன் என்று தோனியே கூறியிருந்தும், சி.எஸ்.கே அணி நிர்வாகம் அதற்குச் சம்மதிக்கவில்லை. அப்படி செய்வது தோனிக்குச் செய்யும் நன்றியாய், மரியாதையாய் அமையாதென மறுத்திருந்தது.

பெரியதாய் எந்த கேப்டன்சி அனுபவமும் இல்லாத ஜடேஜாவிற்கு, தோனி ஆடும் காலத்திலேயே அவர் மூலம் கேப்டன்சி பயிற்சியை, களத்திற்குள்ளேயே வைத்து செயல்முறையாய் அளிக்கத்தான், தோனியின் இந்த கேப்டன்சி விலகல் முடிவு!

தோனியின் முடிவுகள் எப்போதும் அணி நலன், வெற்றிக் குறித்து அறிவுப்பூர்வமாய் தொலைநோக்காகத்தான் இருக்குமே தவிர ஒருநாளும் சுயநலமாய் இருந்ததில்லை. இந்த முடிவும் அப்படியானதே!

டாஸ் போட வரவில்லையென்றால் அவர் கேப்டன் இல்லையென்று ஆகிவிடுமா என்ன?!

ஆடும் வரை அவர்தான் கேப்டன்!