சி.எஸ்.கே நட்சத்திர தொடக்க வீரரை தக்க வைக்க போவதில்லை – சென்னை, டெல்லி, மும்பை மற்றும் கொல்கத்தா அணிகள் தக்க வைக்கப்போகும் வீரர்கள் பட்டியல் வெளியானது

0
402
Rishabh Pant Dhoni and Rohit Sharma

இந்திய அணி தற்போது நியூஸிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் கவனம் செலுத்தி வருகிறது. பல சீனியர் வீரர்களுக்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளதால் வாய்ப்புக்காக காத்திருக்கும் பலர் இந்த நியூசிலாந்து டெஸ்ட் தொடரில் இந்திய அணிக்கு களமிறங்க அதிக வாய்ப்பு உள்ளது. ஒருபக்கம் ரசிகர்கள் நியூஸிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் கவனம் செலுத்தி வந்தாலும் மறுபக்கம் இப்போதே அடுத்த ஆண்டுக்கான ஐபிஎல் தொடரில் அந்த அணி நிர்வாகம் கவனம் செலுத்தத் தொடங்கிவிட்டன. அதிலும் முக்கியமாக அடுத்த ஆண்டு மெகா ஏலம் நடைபெற உள்ளதால் ஒவ்வொரு அணியும் எந்தெந்த வீரர்களை தக்கவைக்க வேண்டும் எனவும் எந்தெந்த வீரர்களை விடுவிக்க வேண்டும் என்பதிலும் அதிக முனைப்புடன் செயல்பட்டு வருகின்றன.

அதிகாரப்பூர்வமாக அந்தந்த அணிகள் அறிவிப்பதற்கு முன்பே தற்போது இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகை சென்னை, டெல்லி, மும்பை மற்றும் கொல்கத்தா அணிகள் எந்தெந்த வீரர்களை தக்க வைக்க போகிறது என்று ஒரு உத்தேச பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் சென்னை அணி தோனி,ருத்ராஜ், ஜடேஜா ஆகிய 3 இந்திய வீரர்களையும் வெளிநாட்டு வீரர்களுள் மொயின் அலி அல்லது சாம் குர்ரனை தக்க வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. பல வருடங்களாக அணிக்கு சேவை செய்த சுரேஷ் ரெய்னாவை, சென்னை நிர்வாகம் தக்க வைத்துக் கொள்ளப் போவதில்லை என்பது உறுதியாகிவிட்டது.

- Advertisement -

டெல்லி அணி சார்பாக விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட், துவக்க வீரர் பிரித்வி ஷா மற்றும் ஆல்ரவுண்டர் அக்சர் பட்டேல் ஆகியோரையும் வேகப்பந்து வீச்சாளரான நோர்க்கிய்வையும் தக்க வைக்க போவதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகை கூறியுள்ளது. மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டன் ரோகித் பந்துவீச்சாளர் பும்ரா மற்றும் அந்த அணியின் சீனியர் ஆல்ரவுண்டர் பொல்லார்டு ஆகியோரை தக்க வைப்பதுடன் இளம் வீரர் இஷான் கிஷனையும் தக்கவைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. பலரும் மும்பை அணி ஹர்திக் பாண்டியாவை தக்கவைக்கும் என்று எதிர்பார்க்கும் போது இந்த முடிவு பலருக்கு ஆச்சரியம் தான்.

கொல்கத்தா அணி அந்த அணியின் தற்போதைய கேப்டன் மார்கனை விடுவிக்க திட்டமிட்டுள்ளது. நரேன், ரசல், வருண் சக்கரவர்த்தி ஆகிய வீரர்களுடன் கில் அல்லது வெங்கடேஷ் என இந்த இருவரில் ஒருவரையும் தக்கவைக்க முடிவு எட்டப்பட்டுள்ளது. இன்னும் சிறிது நாட்களில் அந்த நாளிலேயே அதிகாரப்பூர்வமாக இந்த விஷயத்தை அறிவிக்குமா அல்லது இதில் எதுவும் மாற்றங்கள் இருக்குமா என்பதை அறிய ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.