சென்னை அணியின் தொடர் 4 தோல்விகளுக்கு காரணம் என்ன ? வெற்றிப் பாதைக்குத் திரும்ப என்ன செய்ய வேண்டும் ?

0
372
CSK vs SRH 2022

ஐ.பி.எல் வரலாற்றில் இதுவரை முதலிரண்டு ஆட்டங்களில் தோற்றதில்லை என்கிற கெளரவத்தோடு களம் கண்ட சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, தற்போது தொடர்ந்து நான்கு தோல்விகளைச் சந்தித்திருக்கிறது. ஐ,பி.எல்-ன் அரசனுக்கு என்னதான் ஆயிற்று?

இன்று டபுள் ஹெட்டரில் முதல் ஆட்டமாக நவிமும்பையில் ஹைதராபாத் அணியோடு மோதிய சென்னை நான்காவது தொடர் தோல்வியைத் தழுவி இருக்கிறது. பவர்-ப்ளேவில் பந்துவீச சரியான பவுலர்கள் இல்லாததால், பவர்-ப்ளேவில் வீசும் தீக்சனாவை எடுத்துக்கொண்டு, மிடில்-ஓவர்களில் வீசும் ப்ரட்டோரியசை வெளியில் வைத்தது.

ஆனால் இந்த இடத்தை மொயீன்அலியை வைத்து நிரப்பிவிட்டு, ப்ரட்டோரியசை அணியில் வைத்து, பிராவோவை நீக்கி, ஹங்கர்கேகர் இல்லை துஷார் தேஷ்பாண்டேவை எடுத்திருக்க வேண்டும். ஆனால் சென்னை முதல் ஆட்டத்திற்குப் பிறகு மூன்று ஆட்டங்களிலுமே தவறான அணியையே எடுத்தது.

அடுத்து சென்னை அணியின் பந்துவீச்சு பலத்திற்குத் தக்க ரன்களை திரட்டிதரும் வகையில், சென்னையின் பேட்டிங் யூனிட் ஒருங்கிணைந்து விளையாடுவதில் பிரச்சினை இருக்கிறது. அதேபோல் ஆடுகளத்திற்குச் சரியான இலக்கை பந்துவீச்சாளர்கள் தட்டுத்தடுமாறி நிர்ணயித்தால், அந்த இலக்கை எட்டிப்பிடிக்கவும் ஒருங்கிணைந்து செயல்படுவதில்லை.

இரண்டாவது ஆட்டத்தில் லக்னோ அணிக்கு எதிராக 200+ ரன்கள் குவித்து, தவறான ஆன்-பீல்ட் கேப்டன்சியால் தோற்றது, சென்னை அணியின் ஒட்டுமொத்த நம்பிக்கையையும் உற்சாகத்தையும் குலைத்துப் போட்டிருக்கிறது என்பதே உண்மை. பந்துவீச்சின் போது களத்தில் வீரர்களிடம் ஒரு குதுகலமான துள்ளலே இல்லை!

ஹங்கர்கேகர், மில்னே அணிக்குள் வரவேண்டும். பேட்டிங் யூனிட்டில் ஒவ்வொருவரும் பொறுப்பெடுத்துக்கொண்டு விளையாட வேண்டும். மிக முக்கியமாக களத்தில் நம்பிக்கையோடு, உற்சாகமாகச் செயல்பட வேண்டும்!