ஜடேஜா – சென்னை அணி பிரச்சனைக்கு முற்றுப் புள்ளி வைத்த சி.எஸ்.கே நிர்வாகம்

0
1356
CSK CEO Kasi Viswanathan and Ravindra Jadeja

இந்த ஆண்டு ஐ.பி.எல் தொடரில் இரசிகர்கள் விரும்பத்தகாத பல விசயங்கள் நடந்து முடிந்திருக்கின்றன. ஐ.பி.எல் தொடரின் வெற்றிக்கரமான இரு அணிகளான சென்னை, மும்பை அணிகளுக்கு இந்த ஆண்டு ஐ.பி.எல் சீசன் மிக மோசமான சீசனாக அமைந்தது. அதேபோல விராட் கோலி, ரோகித் சர்மாவுக்கும் மோசமான சீசனாக அமைந்தது!

இதைத்தாண்டி யாரும் எதிர்பாராத ஒரு சம்பவமும் நடைபெற்றது. அதனையொட்டி வேறு சில சம்பவங்களும் நடந்தது. இப்போது வரை நடந்தும் வருகிறது. மகேந்திர சிங் தோனி சென்னை அணியின் கேப்டன் பதவியில் இருந்து விலகியது, புது கேப்டனாக ஜடேஜா வந்தது. வந்தவர் விலகியது. மீண்டும் மகேந்திர சிங் தோனி கேப்டனானது என இந்த நிகழ்வுகள் பல சந்தேகங்களை ரசிகர்களுக்குக் கிளப்பி இருந்தது. இது தற்போது வரை தொடர்கிறது.

இந்த ஆண்டு ஐ.பி.எல் தொடரின் நடுவில் ஜடேஜா கேப்டன் பதவியை விட்டு விலகி, காயத்தால் தொடரில் இருந்து வெளியேறினார். இதனையடுத்து மகேந்திர சிங் தோனி கேப்டனாக வந்தார். அப்பொழுதே கேப்டன் பொறுப்பிலிருந்து ஜடேஜாவை விலகச் சொல்லி சென்னை அணி நிர்வாகம் கட்டாயப்படுத்தியதால் ஜடேஜா விரக்தி அடைந்து அணியிலிருந்து வெளியேறியதாய் யூகங்கள் கிளம்பின. ஜடேஜா சென்னை அணியின் சமூக வலைத்தளப் பக்கத்தைப் பின்தொடர்வதை நிறுத்தினார். இந்த நிலையில் இது சம்பந்தமாகப் பேசிய சென்னை அணியின் சி.இ.ஓ காசி விஸ்வநாதன் எந்தப் பிரச்சினையும் இல்லை எல்லாம் சுமூகமாகவே செல்வதாய் கூறியிருந்தார்.

தற்போது இரசிகர்கள் சிலர், ரவீந்திர ஜடேஜா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சென்னை அணி தொடர்பாகக் கடந்த இரண்டு ஆண்டுகளாகப் பதிவேற்றிய பதிவுகளை நீக்கி இருப்பதாய் கண்டறிந்து தெரிவித்தனர். மேலும் இந்த ஆண்டு ரவீந்திர ஜடேஜா மகேந்திர சிங் தோனியின் பிறந்த நாளுக்கு தனது சமூக வலைத்தள கணக்குகளில் எதிலும் வாழ்த்துச் செய்தி வெளியிடவில்லை.

தற்போது இதுதொடர்பாகப் பேசியுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நிர்வாகி ஒருவர் “பாருங்கள், இது அவரது தனிப்பட்ட செயல். இதுதொடர்பாக எங்களுக்கு எதுவும் தெரியாது. இதுவரையில் எல்லாமே நன்றாகவே போகிறது. எதுவும் தவறாக நடக்கவில்லை” என்று தெரிவித்தார். வெஸ்ட் இன்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் போட்டி தொடரில், ரவீந்திர ஜடேஜாவை துணை கேப்டனாக அறிவிக்கப்பட்டு உள்ளதிற்கு சென்னை அணி நிர்வாகம் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் வாழ்த்துச் செய்தி வெளியிட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது!