புதிய உலக சாதனை படைத்த தமிழக வீரர் ஜெகதீசன்! விராட் கோலியின் சாதனை முறியடிப்பு!

0
6752

விஜய் ஹசாரே தொடரில் தொடர்ச்சியாக ஐந்தாவது சதம் அடித்து புதிய சாதனை படைத்திருக்கிறார் தமிழக வீரர் ஜெகதீசன்.

விஜய் ஹசாரே தொடரின் சி பிரிவில் இடம் பெற்றுள்ள தமிழக அணி திங்கள்கிழமை அன்று நடைபெற்ற போட்டியில் அருணாச்சல் பிரதேஷ் அணியை எதிர்கொண்டது. முதலில் பேட்டிங் செய்த தமிழக அணிக்கு துவக்க வீரர் ஜெகதீசன் 79 பந்துகளில் சதம் அடித்தார்.

- Advertisement -

இதன் மூலம் பல்வேறு சாதனைகளை ஜெகதீசன் முறியடித்து இருக்கிறார். தொடர்ச்சியாக இவர் அடிக்கும் ஐந்தாவது சதம் இதுவாகும். இதற்கு முன்னர் எந்த ஒரு வீரரும் தொடர்ச்சியாக 5 சதங்களை சர்வதேச அளவிலும், உள்ளூர் போட்டிகள் அளவிலும் அடித்ததில்லை.

சர்வதேச அளவில், இலங்கை முன்னாள் வீரர் சங்ககாரா மற்றும் தென் ஆப்பிரிக்காவின் முன்னாள் வீரர் அல்விரோ பீட்டர்சன் இருவரும் தொடர்ச்சியாக நான்கு சதங்கள் அடித்து இருக்கின்றனர்.

விஜய் ஹசாரே தொடரின் கடந்த சீசனில் இளம் துவக்க வீரர் தேவ்தத் படிக்கல் தொடர்ச்சியாக நான்கு சதங்கள் அடித்திருக்கிறார். முன்பு வரை இது சாதனையாக இருந்தது.

- Advertisement -

அருணாச்சல் பிரதேஷ் அணிக்கு எதிராக சதம் அடித்ததன் மூலம் தொடர்ச்சியாக ஐந்தாவது சதத்தை ஜெகதீசன் பூர்த்தி செய்கிறார். இதன் மூலம் உள்ளூர் அளவிலும், சர்வதேச அளவிற்கும் புதிய சாதனையை படைத்திருக்கிறார்.

விஜய் ஹசாரே தொடரில் ஒரு சீசனில் அதிகபட்சமாக நான்கு சதங்கள் அடிக்கப்பட்டிருந்தன. விராட் கோலி, பிரித்வி ஷா, தேவ்தத் படிக்கல் மற்றும் ருத்ராஜ் கெய்க்குவாட் ஆகிய நால்வரும் இந்த சாதனையை படைத்திருந்தனர். இதையும் தமிழக வீரர் ஜெகதீசன் முறியடித்து ஐந்து சதங்களுடன் முதல் இடத்தில் இருக்கிறார்.

விஜய் ஹசாரே தொடரின் ஒரு சீசனில் அதிகபட்சமாக, விராட் கோலி (2008/09 விஜய் ஹசாரே தொடரில்) 7 போட்டிகளில் 534 ரன்கள் அடித்திருந்தார். அப்போது இவரது சராசரி 89 ரன்கள் ஆகும். இந்த சீசனில் ஜெகதீசன் முறியடித்து, ஆறு போட்டிகளில் போட்டிகளில் 600 ரன்கள் கடந்திருக்கிறார்.

இப்படி பல சாதனைகளை முறியடித்த தமிழக வீரர் ஜெகதீசனுக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் இருக்கின்றன.

இன்னும் சில வாரங்களில் ஐபிஎல் ஏலம் நடக்கவிருக்கிறது. அப்போது இவரின் மீது பல அணிகள் கவனம் செலுத்தும். சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக சில வருடங்கள் விளையாடி வந்த ஜெகதீசனை வருகிற ஐபிஎல் ஏலத்திற்கு முன்பு சிஎஸ்கே அணி வெளியே விட்டுவிட்டது.

இது சிஎஸ்கே அணி இவரை வெளியே விட்டது தவறான முடிவா? சரியான முடிவா? என்பதை பொறுத்திருந்துதான் காண வேண்டும்.