பெங்களூரு அணிக்கு வருகிறேன்; யூட்யூப் சேனல் ஆரம்பிக்கிறேன்- ஏ.பி.டிவிலியர்ஸ் உற்சாக அறிவிப்புகள்!

0
178
Devillers

டெஸ்ட் கிரிக்கெட் ஆடும் முறையில் ஒரு மாற்றத்தை கொண்டு வந்தவர் வெஸ்ட் இண்டீஸ் விவியன் ரிச்சர்ட்ஸ். அடுத்து டெஸ்ட் கிரிக்கெட் ஒருநாள் கிரிக்கெட் போட்டியாக பரிணமித்த பொழுது அதன் அடையாளமாக உருவெடுத்தவர் இந்தியாவின் சச்சின் டெண்டுல்கர். கிரிக்கெட்டில் சச்சின் உடைய காலம் நவீன கிரிக்கெட் காலம் என்றால், அதற்கடுத்த காலம் அதிநவீன காலம்.

இந்த அதிநவீன கிரிக்கெட் காலத்தின் ஆரம்ப முக்கியமான பேட்ஸ்மேன் தென் ஆப்பிரிக்காவில் பிறந்து இங்கிலாந்து அணிக்காக விளையாடிய கெவின் பீட்டர்சன். இதற்கடுத்து அதிநவீன கிரிக்கெட் காலத்தில் மிக முக்கியமான வீரர் தென் ஆப்பிரிக்கா அணியின் ஏபி டிவில்லியர்ஸ்.

- Advertisement -

ஏபி டிவில்லியர்ஸ்தான் அதிநவீன கிரிக்கெட்டின் அடையாளம். மரபான வழக்கமான கிரிக்கெட் ஷாட்களை தாண்டி, அவரிடம் புதுமையான நிறைய கிரிக்கெட் ஷாட்கள் இருந்தது. அதை அத்தனையையும் தேவையான நேரங்களில் சிறிதும் தடுமாற்றம் இல்லாமல் துல்லியமாய் பந்து வீச்சாளர்களுக்கு எதிராகச் செயல்படுத்திக் காட்டியவர் இவர். இந்த காரணத்தால்தான் மைதானத்தின் எல்லா புறங்களிலும் விளாச முடிந்ததால்தான் இவரை மிஸ்டர் 360 டிகிரி என்று அழைக்கிறார்கள்.

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுவிட்ட இவர், இந்தியாவில் நடத்தப்படும் ஐபிஎல் தொடரில் அதிக ஆண்டுகள் விளையாடிய வெளிநாட்டு வீரர்களில் மிக முக்கியமானவர். ஐபிஎல் தொடங்கப்பட்ட 2008ஆம் ஆண்டு இவர் டெல்லி டேர் டெவில்ஸ் அணிக்காக வாங்கப்பட்டார். அடுத்து 2011 ஆம் ஆண்டு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக வாங்கப்பட்டு, 2021 ஆம் ஆண்டு ஓய்வுபெறும் வரை அந்த மொத்தம் பதினோரு ஆண்டுகள் அந்த அணிக்காக விளையாடினார்.

மேலும் ஐபிஎல் தொடரில் மொத்தமாக 14 ஆண்டுகள் விளையாடியிருக்கிறார். ஐபிஎல் தொடரில் 170 இன்னிங்ஸ்களில் 5162 ரன்களை 39.71 சராசரியில், 151.69 ஸ்டிரைக் ரேட்டில் அடித்திருக்கிறார். இதில் 40 அரைசதங்கள் மற்றும் மூன்று சதங்கள் அடக்கம். மேலும் 40 ஆட்டங்களில் ஆட்டம் இழக்காமல் இருந்திருக்கிறார் என்பது முக்கியமானது!

- Advertisement -

இப்படி ஐபிஎல் தொடரோடும், ஐபிஎல் தொடரில் பெங்களூர் அணியோடும், அந்த அணியின் நீண்ட வருட கேப்டனாக இருந்த விராட் கோலியோடும் பெரும் நெருக்கமுள்ள ஏபி டிவிலியர்ஸ், இதைப் பற்றி மிக முக்கியமான தகவல்களை தற்போது பகிர்ந்திருக்கிறார்.

இதுபற்றி ஏபி டிவிலியர்ஸ் கூறும்பொழுது ” நான் அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடரின்போது சின்னசாமி மைதானத்திற்கு வர இருக்கிறேன். ஆனால் இந்த முறை நான் வருவது விளையாடுவதற்காக அல்ல. கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக எனக்கு ஆதரவளித்த ரசிகர்களுக்கு நன்றி கூறுவதற்காக நான் அங்கு வருகிறேன் ” என்று தெரிவித்திருக்கிறார்!

மேலும் தனது நெருங்கிய நண்பரான விராட் கோலி பற்றி பேசியுள்ள ஏபி டிவில்லியர்ஸ் அதில் ” நான் ஒரு யூடியூப் சேனலை துவங்கி, அதில் பேட்டி காண எனது நண்பர்களை அழைக்கலாம் என்று இருக்கிறேன். அதில் முதலில் என் நண்பர் விராட் கோலியை அழைக்கலாம் என்று இருக்கிறேன் ” என்று கூறியிருக்கிறார். ஐபிஎல் தொடரில் இருந்து ஏபி டிவில்லியர்ஸ் ஓய்வு பெற்றுவிட்டாலும், விராட் கோலியுடன் இவருக்கு இருக்கும் தொடர்பு அப்படியேதான் நெருக்கமாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது!