அனைத்து வித கிரிக்கெட்டிலிருந்து கிறிஸ் மோரிஸ் ஓய்வு – சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவு இணைப்பு

0
224
Chris Morris Retirement

தென்ஆப்பிரிக்க அணியில் விளையாடிய சிறந்த ஆல்ரவுண்டர் வீரர்கள் மத்தியில் நிச்சயமாக கிறிஸ் மோரிஸ் பெயர் எப்பொழுதும் இடம்பெறும். டெஸ்ட் போட்டிகளில் அவ்வளவு நிறைய போட்டிகளில் விளையாடவில்லை என்றாலும், ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் அவர் தன்னுடைய அபாரமான ஆட்டத் திறமையை வெளிப்படுத்தியிருக்கிறார்.

4 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 12 விக்கெட்டுகளையும், 42 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 48 விக்கெட்டுகளையும், 234 டி20 போட்டிகளில் விளையாடி 290 விக்கெட்டுகளையும் அவர் கைப்பற்றியிருக்கிறார். அதேசமயம் 60 பஸ்ட் கிளாஸ் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி 196 விக்கெட்டுகளையும், 105 லிஸ்ட் ஏ போட்டிகளில் விளையாடி 126 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார்.

பந்து வீச்சில் சிறப்பாக விளையாடியதோடு மட்டுமல்லாமல் பேட்டிங்கிலும் 4 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 173 ரன்களும, 42 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 467 ரன்களும், 234 டி20 போட்டிகளில் விளையாடி 1868 ரன்களும் அவர் விளாசி இருக்கிறார். பஸ்ட் கிளாஸ் கிரிகெட் போட்டியில் 60 போட்டிகளில் 2571 ரன்களும் 105 லிஸ்ட் ஏ போட்டிகளில் 1359 ரன்களும் குவித்துள்ளார்.

என்னுடைய கிரிக்கெட் வாழ்க்கை ஒரு அற்புதமான பயணமாக அமைந்தது

இன்று நான் அனைத்து சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுகிறேன். எனது கிரிக்கெட் பயணத்தில் என்னுடன் இணைந்து நெடுநாட்களாக அல்லது குறைந்த நாட்களில் விளையாடிய அனைவருக்கும் எனது நன்றி. என்னுடைய கிரிக்கெட் பயணம் ஒரு அற்புதமான மிகவும் ரசிக்கும் படியான பயணமாக அமைந்தது. தென் ஆப்பிரிக்க கிளப் கிரிக்கெட் அணியான மோமெண்டம் மல்டிப்ளை டைட்டன் அணியின் பயிற்சியாளர் பொறுப்பை ஏற்க இருப்பது மகிழ்ச்சிகரமாக இருக்கிறது என்று கிறிஸ் மோரிஸ் சமூக வலைதளத்தில் கூறியுள்ளார்.

கிறிஸ் மோரிஸ் பற்றி சில சுவாரஸ்யமான தகவல்கள்

ஒருநாள் போட்டிகளில் இவர் இதுவரை டக் அவுட் விதிமுறைப்படி அவுட் ஆனது இல்லை. அதேசமயம் தொடர்ச்சியாக ஒரு நாள் போட்டிகளில் இரண்டு முறை 4 விக்கெட்டுகளை ( ஃபோர் விக்கெட் ஹால் ) கைப்பற்றி இவர் அசத்தியுள்ளார்.

டி20 போட்டிகளில் பொருத்தவரையில் ஏழாவது வீரராக களமிறங்கி அதிக ரன்கள் குவித்த வீரர்கள் பட்டியலில் 55* குவித்து 11ஆவது இடத்தில் உள்ளார். அதேசமயம் டி20 போட்டிகளில் அதிக மெய்டன் ஓவர்கள் வீசிய வீரர்கள் பட்டியலில் 3 மெய்டன் ஓவர்கள் வீசி 27ஆவது இடத்தில் உள்ளார்.

ஐபிஎல் தொடரில் சென்னை, ராஜஸ்தான், டெல்லி மற்றும் பெங்களூரு அணிகளில் கிறிஸ் மோரிஸ் விளையாடி உள்ளது குறிப்பிடத்தக்கது. ஐபிஎல் தொடரில் மொத்தமாக 81 போட்டிகளில் விளையாடி 95 விக்கெட்டுகளையும், பேட்டிங்கில் 618 ரன்களையும் அவர் குவித்துள்ளார். சமீபத்தில் நடந்த ஒரு உரையாடலில் டி20 தொடரை பொறுத்தவரையில் ஐபிஎல் தொடர் தான் எனக்கு மிகவும் பிடித்த தொடர் என்றும் அவர் பேசியுள்ளார்.

தென்னாபிரிக்க அணிக்காக ஐசிசி சர்வதேச தொடர்களில் 2017 ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் ட்ராபி தொடரிலும் 2019ஆம் ஆண்டு உலகக் கோப்பை தொடரிலும் அவர் இடம்பெற்று விளையாடினார். 2019ஆம் ஆண்டு நடைபெற்ற உலக கோப்பை தொடரில் தென் ஆப்பிரிக்க அணி பந்து வீச்சாளர்கள் மத்தியில் அதிகபட்சமாக 13 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தியது குறிப்பிடத்தக்கது.