சார்லஸ் 39 பந்தில் அதிரடி டி20 சதம் ; 258 ரன்கள் குவித்து தென் ஆப்பிரிக்காவை புரட்டி எடுத்தது வெஸ்ட் இண்டீஸ்!

0
1321
Wi vs Sa

வெஸ்ட் இண்டீஸ் ஆண்கள் கிரிக்கெட் அணி தென்னாப்பிரிக்காவுக்குச் சுற்றுப்பயணம் செய்து, இரண்டு டெஸ்ட் போட்டிகள், தலா மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 என மூன்று வடிவ கிரிக்கெட் தொடர்களிலும் பங்கேற்று விளையாடி வருகிறது!

இதில் முதலில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் தென் ஆப்பிரிக்கா அணி வெற்றி பெற, இரண்டாவது நடந்த ஒருநாள் போட்டித் தொடர் ஒன்றுக்கு-ஒன்று என சமநிலையில் முடிந்தது. இதை அடுத்து மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடந்து வருகிறது.

- Advertisement -

நேற்று மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டி மழையால் பாதிக்கப்பட்டு, 11 ஓவர்கள் கொண்ட போட்டியாக நடத்தப்பட, அதில் மிகச் சிறப்பாக விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணி அபாரமாக வெற்றி பெற்று தொடரில் முன்னிலை வகித்தது.

இன்று தொடரின் இரண்டாவது போட்டி தென்னாபிரிக்க செஞ்சுரியன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டிக்கான டாசில் வென்ற தென்னாபிரிக்க கேப்டன் மார்க்ரம், முதலில் தென் ஆப்பிரிக்க அணி பந்து வீசும் என அறிவித்தார். பின்பு இந்த முடிவுக்கு அவர் மிகவும் வருத்தப்பட வேண்டியதாக இருந்தது.

துவக்க வீரராக வந்த பிரண்டன் கிங் ஒரு ரன்னில் பர்னல் பந்து வீச்சில் வெளியேறினார். இதற்குப் பிறகு ஆரம்பித்தது வெஸ்ட் இண்டீஸ் அணியின் அதிவேக அசுரத்தனமான அதிரடி ஆட்டம்.

- Advertisement -

இதற்கு அடுத்து ஜோடி சேர்ந்த கையில் மேயர்ஸ் மற்றும் ஜான்ஸ்டைன் சார்லஸ் இருவரும் தென்னாப்பிரிக்க பந்துவீச்சாளர்களை வதம் செய்ய ஆரம்பித்தார்கள். இரண்டாவது விக்கட்டுக்கு இவர்கள் இருவரும் 135 ரன்கள் சேர்த்தார்கள். இரண்டாவது விக்கெட் விழும் பொழுது வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஸ்கோர் 10.1 ஓவரில் 137. இரண்டாவது விக்கட்டாக வெளியேறிய கையில் மேயர்ஸ் 27 பந்துகளில் ஐந்து பவுண்டரி மற்றும் நான்கு சிக்ஸர்கள் உடன் 51 ரன்கள் எடுத்து வெளியேறினார்.

இத்தோடு தென்னாபிரிக்க அணிக்கு பிரச்சனை முடிந்ததாக கிடையாது. இதற்கு மேல்தான் சார்லஸ் மிக வீரியமான தாக்குதலைத் தென் ஆப்பிரிக்கா பந்துவீச்சாளர்கள் மீது தொடர்ந்து நடத்தினார். இவரை எப்படி சமாளிப்பது என்றே எதிர்த்தரப்புக்கு புரியவே இல்லை.

அதிரடியில் அட்டகாசப்படுத்திய சார்லஸ் ஒரு வழியாக 39 பந்தில் தலா 9 பவுன்டரிகள் 9 சிக்ஸர்கள் உடன் தனது டி20 சதத்தை அடித்து அசத்தார். இதற்கு முன்பாகக் கெயில் இதே தென் ஆப்பிரிக்கா அணியுடன் 50 பந்துகளில் அடித்ததே வெஸ்ட் இண்டீஸ் அணி வீரரின் அதிவேக டி20 சதமாக இருந்தது. தற்பொழுது 39 பந்துகளில் சதம் அடித்து அதிவேக டி20 சதம் அடித்த வெஸ்ட் இண்டீஸ் வீரர் என்ற சாதனையைப் படைத்திருக்கிறார்.

மேலும் டெஸ்ட் விளையாடும் அந்தஸ்து பெற்ற நாடுகளின் வீரர்கள் அடித்த அதிவேக டி20 சர்வதேச சதத்தில் மூன்றாவது இடத்தை பெற்றிருக்கிறார். ஒட்டுமொத்தமாக அதிவேக டி20 சதத்தை தென் ஆப்பிரிக்கா அணியின் டேவிட் மில்லர் 35 பந்திலும், இந்திய அணியின் ரோகித் சர்மா 35 பந்திலும் வைத்திருக்கிறார்கள்.

நிர்ணிக்கப்பட்ட 20 ஓவர்களில் வெஸ்ட் இண்டீஸ் அணி 258 ரன்கள் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு குவித்து அசத்தியிருக்கிறது. வெஸ்ட் இண்டீஸ் டி20 கேப்டன் ரோமன் பவல் 18 பந்துகளில் 41 ரன்களை விளாசி இறுதிவரை ஆட்டம் இழக்காமல் களத்தில் நின்றார்.