சாஹல் அபார பந்துவீச்சு ! லார்ட்ஸ் மைதானத்தில் செய்த 39 வருடச் சாதனையை முறியடித்து அசத்தல்

0
81
Yuzvendra Chahal

இலண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் தற்போது இந்திய கிரிக்கெட் அணியும் இங்கிலாந்து கிரிக்கெட் அணியும் மோதி வருகின்றன. மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டியில் பத்து விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றிருக்க, இன்று இரண்டாவது போட்டி நடைபெற்று வருகிறது.

இந்தப் போட்டிக்கான டாஸில் வென்ற இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா பந்துவீச்சை தேர்வு செய்தார். முதல் போட்டியில் இடுப்பு பகுதியில் ஏற்பட்ட வலியால் விளையாடாத விராட்கோலி, இன்று இந்திய அணிக்குத் திரும்பி இருக்கிறார். இங்கிலாந்து அணியில் எந்தவித மாற்றங்களும் செய்யப்படவில்லை.

- Advertisement -

இங்கிலாந்து அணிக்காகத் துவக்கம் தர களமிறங்கிய ஜேசன் ராய் ஆரம்பத்தில் இருந்தே தடுமாறி வந்தாலும், அதிர்ஷ்டத்தால் சில பவுண்டரிகள் அவருக்குக் கிடைத்தது. இன்னொரு புறத்தில் ஜானி பேர்ஸ்டோ நல்ல பார்மில் விளையாடினார். இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் ஷமி-பும்ராவின் பந்து வீச்சு உலகத்தரத்தில் இருந்தது. ஆனாலும் விக்கெட் வரவில்லை.

இந்த நிலையில் ஆட்டத்தின் ஒன்பதாவது ஓவரை வீச ஹர்திக் பாண்ட்யாவை அழைத்தார் கேப்டன் ரோகித் சர்மா. இதற்கு கைமேல் பலன் கிடைத்தது. லெக்-ஸைட் பிக்கப் ஷாட் ஆடிய ஜேசன் ராய் லாங்-லெக் திசையில் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

இதையடுத்து பவர்-ப்ளே முடிய யுஸ்வேந்திர சாஹலைக் கொண்டுவந்தார் கேப்டன் ரோகித் சர்மா. சாஹல் பந்தில் வேகம் தராமல், தைரியமாய் காற்றில் தூக்கிப்போடவே செய்தார். இது பேட்ஸ்மேன்களை பெரிய ஷாட்ஸ்கள் ஆட ஆசையைத் தூண்டுவதாய் இருந்தது.

- Advertisement -

சாஹல் முதலில் தூக்கிப்போட்ட ஒரு பந்தை ஜானி பேர்ஸ்டோ மிட்-விக்கெட் திசையில் ஸ்லாக்-ஸ்வீப் அடிக்கப் போய் கிளீன் போல்டானார். அடுத்து அதே மாதிரியான ஒரு பந்தை ஸ்கொயர் லெக் திசையில் ஸ்வீப் ஆட போய் ரூட் எல்.பி.டபிள்யூ ஆனார். தாக்குதல் ஆட்டத்தில் ஈடுபட்ட பென் ஸ்டோக்ஸ் ரிவர்ஸ் ஸ்வீப் ஷாட்டில் இரண்டு பவுண்டரிகளை சாஹல் ஓவரில் அடித்தார். ஆனாலும் பயப்படாத சாஹல் தொடர்ந்து தைரியமாய் தூக்கிப்போட, மீண்டும் ரிவர்ஸ் ஸ்வீப் அடிக்க முயன்ற பென் ஸ்டோக்ஸ் எல்.பி.டபிள்யூ முறையில் ஆட்டமிழந்தார். இதேபோல் மொயின் அலியையும் சாஹல் வீழ்த்தினார். இந்த ஆட்டத்தில் பத்து ஓவர்கள் வீசிய சாஹல் 47 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இது புகழ்பெற்ற லார்ட்ஸ் மைதானத்தில் ஒருநாள் போட்டியில் ஒரு இந்திய பந்துவீச்சாளரின் சிறந்த பந்துவீச்சாக அமைந்தது.

ஒருநாள் போட்டிகளில் அதிகமுறை நான்கு விக்கெட்டுகள் கைப்பற்றிய இந்திய சுழற்பந்து வீச்சாளர்கள்

அனில் கும்ப்ளே – 10
ரவீந்திர ஜடேஜா – 8
யுஸ்வேந்திர சாஹல் – 6
சச்சின் டெண்டுல்கர் – 6

- Advertisement -