இலங்கை அணி ஆசிய கோப்பையை ஜெயிக்க நான் தான் காரணம் – பாகிஸ்தான் வீரர் வருத்தம்!

0
426

இலங்கை அணி ஆசிய கோப்பையை வெல்வதற்கு நான்தான் முக்கிய காரணம் நான் தான் என்று மிகவும் வருத்தத்துடன் ட்வீட் செய்துள்ளார் பாகிஸ்தான் அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டர் சதாப் கான்.

ஆசியகோப்பை தொடரின் 15வது சீசன் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. இத்தொடரில் ஆறு அணிகள் பங்கேற்றன. சூப்பர் போர் சுற்றுக்கு பிறகு இலங்கை மற்றும் பாகிஸ்தான் இரு அணிகளும் இறுதிப் போட்டிக்கு முன்னேறின. துபாய் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் முதலில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இரண்டாவது பேட்டிங் செய்யும் அணி இந்த மைதானத்தில் பெரும்பாலும் வெற்றி பெற்றுள்ளதால் பாகிஸ்தான் அணி இந்த முடிவை எடுத்து களமிறங்கியது.

- Advertisement -

ஆசியகோப்பை முழுவதும் இலங்கை அணிக்கு நம்பிக்கையாக இருந்த துவக்க வீரர்கள் இப்போட்டியில் ஒற்றை இலக்க ரன்களுக்கு ஆட்டம் இழந்து பேரதிர்ச்சியை கொடுத்தனர். அடுத்து வந்த வீரர்களும் ஒன்றன்பின் மற்றொருவராக விக்கெட்டுகளை இழந்து வெளியேற, இலங்கை அணி 58 ரன்களுக்கு ஐந்து விக்கெட்டுகளை இழந்து அதலபாதாளத்தை நோக்கி சென்றது.

இந்த இக்கட்டான சமயத்தில் ஜோடி சேர்ந்த பனுகா ராஜபக்சே மற்றும் ஹசரங்கா இருவரும் இலங்கை அணி மிகப்பெரிய சரிவிலிருந்து மீட்டு நல்ல ஸ்கோரை எட்டுவதற்கு உதவினர். ஒவ்வொரு ஓவரிலும் தவறாமல் பௌண்டரி அல்லது சிக்சர் அடித்து வந்த இந்த ஜோடி, ஆறாவது விக்கெட்டிற்கு 58 ரன்கள் சேர்த்தது. அதிரடியாக விளையாடிய ஹசரங்கா 21 பந்துகளில் 36 ரன்கள் அடித்து நல்ல பார்மில் இருக்கும் பொழுது ஆட்டம் இழந்தார்.

அடுத்து வந்த கருணரத்னே விக்கெட் இழக்காமல் பார்த்துக் கொள்ள, நிலைத்து நின்ற ராஜபக்சே தனது அதிரடியை துவங்கினார். அரைசதம் கடந்த இவர் 45 பந்துகளில் 71 ரன்கள் அடித்து இறுதி வரை ஆட்டம் இழக்காமல் இருந்தார். 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்திருந்த இலங்கை அணி 170 ரன்கள் சேர்த்தது. கடைசி 10 ஓவர்களில் மட்டும் 103 ரன்கள் சேர்த்தது குறிப்பிடத்தக்கது. பாகிஸ்தான் சார்பில் ஹாரிஸ் ரவ் 3 விக்கெட் வீழ்த்தினார்.

- Advertisement -

இந்த மைதானத்தில் 171 ரன்கள் என்ற மிகப்பெரிய இலக்கை துரத்திய பாகிஸ்தான் அணிக்கு இம்முறையும் பாபர் அசாம் சொற்பரன்களில் ஆட்டம் இழந்தார். நல்ல பார்மில் இருந்த ரிஸ்வான் அதை தொடர்ச்சியாக எடுத்துச் சென்று பாகிஸ்தான் அணியை சரிய விடாமல் பார்த்துக் கொண்டார். இப்திகர் அகமது மிடில் ஆர்டரில் சற்று நம்பிக்கை அளிக்கும் விதமாக 32 ரன்கள் அடித்து ஆட்டம் இழந்தார். ஆனால் மற்ற வீரர்கள் ஒற்றை இலக்க ரன்களுக்கு ஆட்டம் இழந்தனர்.

15வது ஓவர்களில் மூன்று விக்கெட் இழப்பிற்கு 100 ரன்களைக் கடந்த பாகிஸ்தான் அணி, அதன் பிறகு ஒரே ஓவரில் மூன்று விக்கெட்டுகள், அதற்கு அடுத்த ஓவரில் இரண்டு விக்கெட்டுகள் என வரிசையாக விக்கெட்டுகளை இழந்து 20 ஓவர்கள் முடிவில் வெறும் 147 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் இலங்கை அணி 23 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று ஆறாவது முறையாக ஆசியக் கோப்பையை கைப்பற்றியது.

இப்போட்டியில் இரண்டு கேட்ச் தவறவிட்டது மற்றும் சொதப்பலான ஃபீல்டிங் செய்தது என பாகிஸ்தான் அணியின் ஆல்ரவுண்டர் சதாப் கானுக்கு அன்றைய நாள் மிகவும் மோசமாக அமைந்தது. இதை குறிப்பிட்டு தனது ட்விட்டர் பக்கத்தில் இலங்கை அணி வெற்றி பெற்றதற்கு நான் தான் முக்கிய காரணம் என்று பதிவு செய்திருந்தார்.

“கேட்ச் தான் மேட்சை வெற்றி பெற்று தரும். என்னை மன்னித்து விடுங்கள். இந்த தோல்விக்கு நான் பொறுப்பேற்றுக் கொள்கிறேன். நசீம் சா, ஹரிஷ் ரவ், நவாஸ் ஆகியோர் மிக சிறப்பாக பந்து வீசினர். முகமது ரிஸ்வான் இறுதிவரை பேட்டிங்கில் போராடினார். ஒட்டுமொத்த அணியும் இறுதிபோட்டியில் மிகச் சிறப்பாக செயல்பட்டது. நான் செய்த தவறுகள் தான் இந்த தோல்விக்கு முக்கிய காரணம். கோப்பையை கைப்பற்றிய இலங்கை அணிக்கு எனது வாழ்த்துக்கள்.” என்று பதிவு செய்திருந்தார்.