2016 டி20 உலகக்கோப்பை ஈடன் கார்டனில் 4 சிக்ஸர்கள் விளாசியதை நினைவு கூறும் வகையில் தன் மகளுக்கு பெயர் வைத்துள்ள கர்லோஸ் பிராத்வெயிட்

0
1499
Carlos Braithwaite Daughter Eden Rose

2016ஆம் ஆண்டு டி20 உலக கோப்பை தொடர் இந்தியாவில் நடைபெற்றது. இறுதிப் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் இங்கிலாந்து அணிகள் பலப்பரீட்சை மேற்கொண்டனர். இரு அணிகளும் தங்களுடைய 2வது டி20 உலகக்கோப்பைக்காக போட்டி போட்டன.

போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 20 ஓவர் முடிவில் 155 ரன்கள் குவித்தது. இங்கிலாந்து அணியில் அதிகபட்சமாக ஜோ ரூட் 54 ரன்கள் குவித்தார். பின்னர் விளையாடிய மேற்கிந்திய தீவுகள் அணியில் மர்லோன் சமுவேல்ஸ் தவிர மற்ற வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து கொண்டே வந்தனர்.

ஆட்டத்தின் இறுதி நேரத்தில் 19 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 137 ரன்கள் மட்டுமே மேற்கிந்தியத் தீவுகள் அணி வைத்திருந்தது. இறுதி 6 பந்துகளில் அந்த அணி வெற்றி பெற 19 ரன்கள் தேவைப்பட்டது. களத்தில் மர்லோன் சமுவேல்ஸ் மற்றும் கர்லோஸ் பிரத்வெயிட் இருவரும் பேட்டிங் செய்து கொண்டிருந்தனர். இறுதிவரை பென் ஸ்டோக்ஸ் கர்லோஸ் பிரத்வெயிட்டுக்கு எதிராக வீசினார்.

எப்படியும் இங்கிலாந்து அணி தான் டி20 உலக கோப்பையை வெல்லப் போகிறது என்று அனைவரும் நினைத்து நிலையில், அந்த ஓவரின் முதல் நான்கு பந்துகளையும் தூக்கி சிக்ஸராக அடித்து இங்கிலாந்து அணி மற்றும் அந்த அணி ரசிகர்களின் கனவிற்கும் கர்லோஸ் பிரத்வெயிட் முற்றுப்புள்ளி வைத்தார்.

தன்னுடைய மகளுக்கு ஈடன் ரோஸ் என்று பெயர் வைத்துள்ள கர்லோஸ்

2016ஆம் ஆண்டு நடந்த உலகக் கோப்பை டி20 தொடரின் இறுதிப் போட்டியையும், அந்த போட்டி நடைபெற்ற கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தையும் நினைவு கூறும் வகையில் கர்லோஸ் பிரத்வெயிட் தன்னுடைய மகனுக்கு ஈடன் ரோஸ் என்று பெயர் சூட்டியுள்ளார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை பிப்ரவரி 6ஆம் தேதி இவருக்கும் இவருடைய மனைவிக்கும் அழகான பெண் குழந்தை பிறந்தது. தன்னுடைய இன்ஸ்டகிரம் வலைதளத்தில் இந்த பெயரை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள் (“ரிமெம்பர் தி நேம்” ) என்று குறிப்பிட்டு தான் குழந்தையுடன் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டிருந்தார்.

2016ஆம் ஆண்டு உலகக் கோப்பை டி20 தொடரின் இறுதிப் போட்டியில் கடைசி நேரத்தில் 4 சிக்ஸர்கள் அடித்து கர்லோஸ் பிரத்வெயிட் மேற்கிந்திய தீவுகள் அணியை வெற்றி பெற வைத்தவுடன் முன்னாள் மேற்கிந்தியத் தீவுகள் அணி வீரர் ஐயான் பிஷாப் இவரது பெயரை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள் – கர்லோஸ் பிரத்வெயிட், மேற்கிந்திய தீவுகள் அணியை வெற்றி பெற வைத்து விட்டார் என்று கூறியிருந்தார்.

அதையும் நினைவு கூறும் வகையில் தன் குழந்தையுடன் இருக்கும் புகைப்படத்துடன் இயான் பிஷப் கூறியது போல் “இந்தப் பெயரை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்” என்று கர்லோஸ் பிரத்வெயிட் பதிவிட்டதை படித்த அடுத்த நொடியே 2016ஆம் ஆண்டு அவர் 4 சிக்ஸர்கள் அடித்து முடித்தவுடன், இயான் பிஷப் கூறிய அந்த வார்த்தைகள் தான் நினைவுக்கு வருகின்றன.