” இதைச் செய்ய தவறிவிட்டோம் ” – 2வது டி20ஐயில் தோல்வி பெற்றதற்கான காரணத்தை விவரிக்கும் கேப்டன் ரிஷப் பண்ட்

0
64
Rishabh Pant Indian cricket team

ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுவதற்காக இந்தியா வந்துள்ளது தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி. டெல்லி பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் நடந்த இந்தத் தொடரின் முதல் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்க அணி வெற்றி பெற்று இருந்தது!

இந்தத் தொடரின் இரண்டாவது போட்டி நேற்று ஒடிஷா மாநிலத்தின் கட்டாக் நகரின் பராபதி மைதானத்தில் நடைபெற்றது. இதில் முதலில் டாஸில் வென்ற தென் ஆப்பிரிக்க கேப்டன் டெம்பா பவுமா பந்துவீச்சை தேர்வு செய்தார். தென் ஆப்பிரிக்க அணியில் கையில் காயம் காரணமாக விக்கெட் கீப்பர் குயின்டன் டிகாக் இடம் பெறவில்லை. அதேபோல் கடந்த ஆட்டத்தில் அறிமுகமான டிரிஸ்டன் ஸ்டப்ஸூம் நீக்கப்பட்டு, துவக்க ஆட்டக்காரராக ரீஸா ஹென்ட்ரிக்ஸ் சேர்க்கப்பட்டார். இந்திய அணியில் எந்த மாற்றங்களும் செய்யப்படவில்லை.

இந்திய அணியின் பேட்டிங்கை துவங்க வந்த ருதுராஜ்-இஷான் ஜோடியில் ருதுராஜை முதல் ஓவரிலேயே ரபாடா வெளியேற்றினார். அதற்குப் பிறகு இஷான் கிஷான் 34 [21], ரிஷாப் பண்ட் 5 [7], ஹர்திக் 9 [12], ஸ்ரேயாஷ் 40 [35], அக்சர் 10 [11] என வெளியேற இந்திய அணி நெருக்கடிக்கு உள்ளானது. கடைசிக் கட்டத்தில் தினேஷ் கார்த்திக் சுதாரித்து 21 பந்துகளில் 30 ரன்கள் அடிக்க, இருபது ஓவர்கள் முடிவில் இந்திய அணி 148 ரன்கள் சேர்த்தது!

அடுத்து 149 என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய தென்ஆப்பிரிக்க அணியின் வீரர்கள் ரீஸா ஹென்ரிக்ஸ், டுவைன் பிரட்டோரியஸ், வான்டர் டூ டெசன் மூவரையும் பவர்ப்ளேவிலேயே புவனேஷ்வர் குமார் பெவிலியன் அனுப்பி வைத்தார். அடுத்து இணைந்த டெம்பா பவுமா, ஹென்றி கிளாஸன் ஜோடி 64 ரன்கள் சேர்த்தது. டெம்பா பவுமா 35 [30] ரன்களில் வெளியேறினார். ஆனால் ஹென்ரி கிளாசன் 46 பந்துகளில் 7 பவுண்டரி 5 சிக்ஸர்களோடு 81 ரன்கள் குவித்து, இந்திய அணிக்குத் தோல்வியை உறுதி ஆக்கினார். இறுதியில் 18.2 ஓவரில் 4 விக்கெட் வித்தியாசத்தில் தென்ஆப்பிரிக்க அணி வெற்றி பெற்று தொடரில் 2-0 என முன்னிலை வகிக்கிறது.

தோல்விக்குப் பிறகு பேசிய இந்திய அணியின் கேப்டன் ரிஷாப் பண்ட் “நாங்கள் 10-15 ரன்கள் குறைவாக அடித்துவிட்டோம் என்று நினைக்கிறேன். புவி மற்றும் மற்ற வேகப்பந்து வீச்சாளர்கள் சிறப்பாகப் பந்து வீசினார்கள். பந்துவீச்சில் இரண்டாவது பாதியில் நாங்கள் பின்தங்கிவிட்டோம். நாங்கள் நினைத்தது எதுவும் நடக்கவில்லை. நாங்கள் நன்றாகப் பந்துவீசவில்லை. அங்குதான் ஆட்டம் மாறியது. சுழற்பந்து வீச்சாளர்கள் சிறப்பாகச் செயல்பட வேண்டும். அடுத்த மூன்று ஆட்டங்களில் வெற்றிபெறுவதற்குப் பார்ப்போம்” என்று கூறினார்.