“ரவி பாய் தயவுசெய்து அப்படி சொல்லாதிங்க; சொல்லித்தந்த நீங்களே மாத்தி பேசலாமா?” – ரவி சாஸ்திரியிடம் தினேஷ் கார்த்திக் வேண்டுகோள்!

0
4030
DK

இந்திய அணி நேற்று நாக்பூர் மைதானத்தில் 8 ஓவர்கள் கொண்ட மழையால் பாதிக்கப்பட்ட ஒரு போட்டியில் ஆஸ்திரேலிய அணியுடன் மோதியது. இந்த போட்டியில் இந்திய அணி 4 பந்துகளில் மீதமிருக்க 6 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி தொடரை 1-1 என சமன்செய்து இருக்கிறது. 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் தொடர் யாருக்கு என முடிவாகும் கடைசி போட்டி நாளை நடக்க இருக்கிறது.

ஆசிய கோப்பையில் இந்திய அணிக்கு ஏற்பட்ட தோல்வி, இந்திய அணி ஒரு ஏழெட்டு மாதங்களாக தயாராகி வந்த திட்டத்தை சந்தேகிப்பதாக மாற்றியது. அமைக்கப்பட்டுள்ள இந்திய அணி குறித்த விவாதங்கள் கிரிக்கெட் தொடர்பான பல மேடைகளில் அரங்கேற ஆரம்பித்தது.

இதில் மிக முக்கியமாக விவாதிக்கப்பட்டது இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் யார்? இடது கை வீரர் இல்லாத காரணத்தால் ரிஷப் பண்ட் அணிக்குள் இருக்க வேண்டும் என்றும், பத்து பதினைந்து பந்துகள் மட்டுமே விளையாட தினேஷ் கார்த்திக் போன்ற ஒரு பேட்ஸ்மேன் அணிக்கு தேவையில்லை என்றும் ஒரு சாரர் கருத்துக்களை முன்வைத்தனர்.

இன்னொரு தரப்பில் டாப் பார்டர் நல்ல அனுபவத்துடன் இருந்தாலும், நடு வரிசையின் கடைசியில் ஆட்டத்தை மிகச் சிறப்பாக முடிப்பதற்கான வீரர்கள் இல்லை என்கின்ற காரணத்தால், அனுபவமும் ஆட்டத்தை முடிக்கும் திறமையும் கொண்ட மூத்த வீரர் தினேஷ் கார்த்திக்தான் அணியில் இடம்பிடிக்க வேண்டும் என்றும் ஒரு சாரார் கருத்து தெரிவித்து வந்தனர்.

இந்த நிலையில் ஆசிய கோப்பைக்கு அடுத்து ஆஸ்திரேலியா அணியுடனான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் முதல் போட்டியிலேயே ரிஷப் பண்ட் வெளியில் வைக்கப்பட்டு, அணியின் முதன்மை விக்கெட் கீப்பராக தினேஷ் கார்த்திக் சேர்க்கப்பட்டார். நடப்பு இந்திய டி20 அணியின் பிரதான முதல் விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக்தான் என்று ரோகித் சர்மா மற்றும் ராகுல் டிராவிட் கூட்டணி சொல்லாமல் சொல்லி இருக்கிறது.

நேற்று நடந்த 2வது டி20 போட்டியின் போது, முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி காயத்திலிருந்து மீண்டு வந்த ஹர்ஷல் படேல் தந்த ரன்களால் 8 ஓவர்களில் 90 ரன்கள் குவித்தது. இதையடுத்து களமிறங்கிய இந்திய அணிக்கு 20 பந்துகளில் 46 ரன்கள் விளாசி கேப்டன் ரோகித் சர்மா மிக பிரமாதமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். கடைசி ஓவரில் 6 பந்துகளுக்கு 9 ரன்கள் தேவை என்ற நிலையில் களத்திற்கு வந்த தினேஷ் கார்த்திக், முதல் பந்தில் சிக்ஸர் இரண்டாவது பந்தில் பவுண்டரி என ஆட்டத்தை முடித்து வைத்து விட்டார். இந்திய அணியின் கேப்டனும் பயிற்சியாளரும் தினேஷ் கார்த்திக்கை தேர்வு செய்ததை நியாயப்படுத்தும் விதமாக அவர் விளையாடி முடித்ததும் இந்திய கேப்டனுக்கு மிகப்பெரிய மகிழ்ச்சியை தந்ததைக் களத்தில் காண முடிந்தது.

இதுதொடர்பாக போட்டி முடிந்ததும் கிரிக்கெட் வர்ணனையில் இருக்கின்ற இந்திய அணியின் முன்னாள் தலைமை பயிற்சியாளர் ரவிசாஸ்திரி ” எளிதான ஆட்டம்! கேக் துண்டுகள் போல, டி கே 6, 4 என ஆட்டத்தை எளிதாக முடித்து விட்டார் நன்றி!” என்று கூறி, தினேஷ் கார்த்திக் உடனான உரையாடலை ஆரம்பித்தார்.

ஆனால் ரவிசாஸ்திரி உரையாடலை ஆரம்பித்த விதத்தை சற்று நகைச்சுவையாக மறுத்துப் பேசிய தினேஷ் கார்த்திக் ” இது ஒருபோதும் எளிதான விளையாட்டு கிடையாது என்று சொல்லி எனக்கு கற்றுக் கொடுத்தவர் நீங்கள்தான். ரவி பாய் தயவுசெய்து நீங்கள் தற்போது மாற்றி பேசாதீர்கள். இது கடினமான விளையாட்டுதான். ஏன் என்று உங்களுக்கு நன்றாகவே தெரியும் என்று ” கொஞ்சம் அழுத்தமாகவே குறிப்பிட்டார்!