ரிஷப் பண்ட்டை காப்பாற்றிய இரண்டு ஹீரோக்களின் மனிதாபிமானத்திற்கு கிடைத்த பாராட்டு மற்றும் பரிசு!

0
725

ரிஷப் பண்ட்டை விபத்திலிருந்து காப்பாற்றிய ஓட்டுநர் மற்றும் நடத்துனருக்கு போக்குவரத்து நிர்வாகம் உரிய மரியாதை மற்றும் பாராட்டுகளை செலுத்தியுள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை காலை சுமார் 5.10 மணியளவில் டெல்லியில் இருந்து டேராடூன்க்கு ஹரிதுவார்-பானிபட் சாலையில் சென்று கொண்டிருந்த ரிஷப் பண்ட் கார், நடுவில் இருக்கும் தடுப்பில் மோதி நிலை தடுமாறி கவிழ்ந்தது.

- Advertisement -

அந்த வழியாக சென்று கொண்டிருந்த பஸ் டிரைவர் சுசில் குமார் மற்றும் நடத்துனர் பரம்ஜீத் இருவரும் சம்பவம் நடந்த இடத்திற்கு விரைவாக ஓடி காரில் சிக்கி இருந்த ரிஷப் பண்ட்டை வெளியில் எடுத்து போர்வைகள் போர்த்தி பாதுகாத்தனர். இவர்கள் ரிஷப் பண்ட்டை வெளியில் எடுத்த அடுத்த நிமிடமே கார் பற்றி எரியதுவங்கியது. அதன் புகைப்படங்களை நம்மால் சமூக வலைதளங்களில் காண முடிந்தது.

வெளியான பல்வேறு வதந்திகளில், ரிஷப் பண்ட் தாமாக முன்வந்து ஆம்புலன்ஸ்க்கு போன் செய்தார். அவர் நிலை தடுமாறி கீழே விழுந்திருந்தபோது பணம் மற்றும் சில பொருட்கள் அவரிடமிருந்து திருடி செல்லப்பட்டது என கூறப்பட்டன.

அவை அனைத்திற்கும் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக பேசிய டிரைவர் சுசில்குமார், “கீழே விழுந்து கிடந்த பொருட்கள் மற்றும் பணம் ஆகியவற்றை அப்போதே அவரிடமே கொடுத்து விட்டோம். அவரும் வாங்கி வைத்துக்கொண்டார். குணமடைந்து வந்ததும் நீங்கள் அவரிடமே கேட்டு தெரிந்துகொள்ளலாம். அவரை காரிலிருந்து வெளியே எடுத்து பாதுகாத்த 10 நிமிடத்தில் ஆம்புலன்ஸ்க்கு போன் செய்தோம். அவர்களும் வந்து விட்டார்கள். அழைத்துச் சென்றார்கள். கடவுள் அருளால் நாங்கள் உரிய நேரத்தில் அவரை காப்பாற்றி விட்டோம். இதுதான் நடந்தது மற்ற கதைகளை நம்பவேண்டாம்.” என்றார்.

- Advertisement -

உண்மையில் இவர்கள் இருவரும் இல்லையென்றால் இந்நேரம் ரிஷப் பண்ட்டை நாம் எப்படி பார்த்திருப்போம் என்று தெரிந்திருக்காது. ஆகையால் இவர்களின் இந்த மனிதாபிமானத்தை ஒட்டுமொத்த நாடே பாராட்டி வருகிறது. அரசு சார்பில் பானிபட் பஸ் டிப்போ பொது மேலாளர் இவர்கள் இருவரையும் அழைத்து உரிய மரியாதை மற்றும் பாராட்டுகளை தெரிவித்ததோடு பரிசையும் கொடுத்திருக்கிறார்.