அசத்தல் யார்க்கர் வீசிய பும்ரா; போல்ட்டாகி கைத்தட்டி பாராட்டிய ஆரோன் பின்ச் ; வீடியோ இணைப்பு!

0
1573
Bumrah

இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 2வது டி20 போட்டி நாக்பூர் நகரில் மழையின் காரணமாக தாமதமாக எட்டு ஓவர் கொண்ட போட்டியாக தொடங்கியது. ஒரு பந்து வீச்சாளர் 2 ஓவர்கள் பந்து வீசலாம். பவர் பிளே 2 ஓவர்கள்.

இந்தப் போட்டிக்கான டாசில் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா முதலில் பந்து வீசுவது என தீர்மானித்தார். இந்திய அணி தரப்பில் புவனேஸ்வர் குமார் நீக்கப்பட்டு ரிஷப் பண்ட் அணியில் சேர்க்கப்பட்டார். மேலும் பும்ரா, உமேஷ் யாதவுக்கு பதிலாக வந்தார். ஆஸ்திரேலிய அணி தரப்பில் இங்க்லீஷ் நீக்கப்பட்டு அபாட் சேர்க்கப்பட்டார்.

முதலில் களமிறங்கிய கேப்டன் ஆரோன் பின்ச் மற்றும் கேமரூன் கிரீன் இருவரும் அதிரடி ஆட்டத்தில் ஈடுபட, அக்சர் படேல் குறுக்கே வந்து மிகச் சிறப்பாக பந்து வீசி ஆட்டத்தை கட்டுப்படுத்தினார். விராட் கோலி அடித்த பந்தை வாங்கி கேமரூன் கிரீனை ரன் அவுட் செய்தார். மேக்ஸ்வெல் மற்றும் டீம் டேவிட்டை கிளீன் போல்ட் செய்து வெளியேற்றினார்.

காயத்திலிருந்து மீண்டு வந்த பும்ரா முதல் இரண்டு பந்துகளில் கொஞ்சம் விட்டுக் கொடுத்தாலும், ஆனால் அதற்கடுத்து அவர் வழக்கமான தனது ஆயுதமான யார்க்கர் பந்துகளை வீசி மிரட்டினார். 15 பந்துகளில் 31 ரன்கள் எடுத்த ஆஸ்திரேலிய கேப்டன் ஆரோன் பின்ச்சை கிளீன் போல்டாக்கி வெளியேற்றினார். பும்ரா பந்தில் ஆட்டம் இழந்து விட்டு, அந்தப் பந்தை பாராட்டி கை தட்டி விட்டு வெளியேறினார் ஆரோன் பின்ச். இதேபோல் ஸ்டீவன் ஸ்மித்துக்கு ஒரு யார்க்கர் பந்தை இறக்கி அவரைக் கீழே வீழ்த்தினார் பும்ரா. இதற்கான வீடியோ லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலிய அணியின் ஸ்கோர் இந்திய அணியின் கட்டுப்பாட்டில் இருந்தது. ஆனால் கடைசி ஓவரை வீச வந்த ஹர்ஷல் படேல் மீண்டும் 19 ரன்களை வாரி வழங்கி ஆஸ்திரேலிய அணியை 90 ரன்கள் எட்ட வைத்துவிட்டார். இந்த ஆட்டத்திலும் அதிரடியாக விளையாடிய மேத்யூ வேட் 19 பந்துகளில் 43 ரன்களை 4 பவுண்டரி 3 சிக்சர்களுடன் விளாசினார். இதையடுத்து தற்போது இந்திய அணி களம் இறங்கி விளையாடி வருகிறது.