முதல் போட்டியில் அபார பந்துவீ்ச்சு ! நம்பர் 1 பவுலராக முன்னேறினார் பும்ரா ; டி20ஐ தரவரிசையில் டாப் 5 இடத்திற்க்குள் நுழைந்த சூர்யகுமார் யாதவ்

0
78
Jasprit Bumrah and Suryakumar Yadav

இங்கிலாந்திற்குப் சுற்றுப்பயணம் செய்துள்ள இந்திய கிரிக்கெட் அணி, கடந்த ஆண்டு கோவிட்டால் விளையாட முடியாது போன, ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாடி தோற்றது. ஆனாவீ அதற்கடுத்த டி20 தொடரை 2-1 என சிறப்பாய் விளையாடி கைப்பற்றியது. இந்திய அணி தோற்ற இந்தத் தொடரின் மூன்றாவது டி20 போட்டியில் சூர்யகுமார் அபாரமாய் விளையாடி 55 பந்தில் 117 ரன்கள் குவித்திருந்தார்.

இதையடுத்து மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டியில் இங்கிலாந்து அணியை இலண்டன் கென்னிங்டன் ஓவல் மைதானத்தில் நேற்று இந்திய அணி சந்தித்தது. இந்த ஆட்டத்தில் காயம் காரணமாக விராட் கோலி விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது!

இந்தப் போட்டியில் முதலில் விளையாடிய இங்கிலாந்து அணியை 25.2 ஓவரில் 110 ரன்களில் இந்திய பந்துவீச்சாளர்கள் சுருட்டினர். ஜஸ்ப்ரீட் பும்ரா 19 ரன்களுக்கு ஆறு விக்கெட்டுகளை அள்ளினார். இதையடுத்து விளையாடிய இந்திய அணி விக்கெட் இழக்காமல் 18.4 ஓவரில் இலக்கை எட்டி வெற்றி பெற்றது. ரோகித் சர்மா 58 பந்துகளில் ஏழு பவுண்டரி, ஐந்து சிக்ஸர்களோடு 76 ரன்களை குவித்தார்.

இந்திய அணி வீரர்களின் இந்தச் சிறப்பான செயல்பாடுகள் தரவரிசை பட்டியலில் பெரிய மாற்றங்களை உருவாக்கியுள்ளது. கடைசி டி20 போட்டியில் அதிரடி சதம் அடித்த சூர்யகுமார் யாதவ் 44 இடங்கள் முன்னேறி, முதல் பத்து இடங்களுக்குள் நுழைந்து ஐந்தாவது இடத்தைப் பெற்றுள்ளார்.

இங்கிலாந்து உடனான ஒருநாள் போட்டியில் 76 ரன்கள் குவித்த ரோகித் சர்மா விராட் கோலியோடு சம புள்ளிகளைப் பகிர்ந்து மூன்றாவது இடத்தைப் பெற்றுள்ளார். 31 ரன்களை ஆட்டமிழக்கால் எடுத்த மற்றொரு இந்திய துவக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான் 12வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

நியூசிலாந்து வேகப்பந்து டிரெண்ட் போல்ட் இடம் 2020ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஜஸ்ப்ரீட் பும்ரா ஒருநாள் போட்டி பந்துவீச்சில் முதலிடத்தை இழந்தார். டிரெண்ட் போல்ட் தொடர்ந்து 730 நாட்கள் முதலிடத்தில் இருந்தார். தற்போது இங்கிலாந்து அணியுடனான முதல் ஒருநாள் போட்டியில் ஆறு விக்கெட்டுகளை கைப்பற்றிய ஜஸ்ப்ரீட் பும்ரா, ஒருநாள் போட்டி நம்பர் 1 பந்துவீச்சாளர் என்ற இடத்திற்கு உயர்ந்துள்ளார். கபில்தேவிற்குப் பிறகு இந்த இடத்தை எட்டிய ஒரே இந்திய வேகப்பந்து வீச்சாளர் பும்ராதான்!